F1
புல்லில் பனித்துளி
துளி: 11
பிறருக்கு F1 செய்வது, அதாவது உதவி செய்வது மிக முக்கியம். ஆனால் சரியாக உதவி செய்கிறோமா என்று கவனிக்க வேண்டியது மிக மிக முக்கியம்.
அது என்ன சரியாக?
நான் மிகப் பிரபலமான அந்தத் தொழிலகத்தில் சேர்ந்து ஓரிரு வருடங்களாகியிருந்த சமயம். Telephone-cum-Telex Operator!
இதற்கு முன் ஒரு டிராவல் ஏஜென்சியில் மூன்று வருடங்கள் General Clerk ஆக இருந்தேன். General Clerk என்றால் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று பொருள்.
'ஒரு லெட்டர்' என்பார் பாஸ். ஷார்ட் ஹேண்ட் பேட் சகிதம் போய் அவர் முன் உட்காருவேன். ஷார்ட் ஹேண்ட் எல்லாம் தெரியாது. லாங் ஹேண்ட் தான். ஒரு பந்தாவுக்கு ஷார்ட் ஹேண்ட் பேட்.
கவுண்ட்டரில் இருந்த பெண் சாப்பிட வெளியே போய் விட்டாள். ஒரு டிக்கெட் உடனடியாக வேண்டும். 'கணேஷ், ஏர் புக்கிங்' என்பார்கள். கவுண்ட்டரில் உட்கார்ந்து டிக்கெட் தயார் செய்வேன்.
'கணேஷ், ஒரு பன்னிரண்டு ரூபாய் எங்கேயோ இடிக்குது' என்பார் அக்கவுண்டண்ட். 'இதோ, இங்கே' என்று கண்டுபிடித்து சரி செய்வேன்.
திடீரென்று முப்பது பெட்டிகள் கார்கோ வந்திறங்கும். 'கொஞ்சம் கை கொடுப்பா' என்பார்கள். எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற்றி இறக்க உதவுவேன். தபால் எடுத்து செல்பவர் விடுப்பு எடுத்தால் frank ஆன ஒரே ஆள் என்று என்னை franking செய்யச் சொல்வார்கள்.
ஒரு நாள் கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை. யாருக்கு சொல்வது என்பதில் குழப்பம். எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். கோரஸாக ஒரே குரலில் 'கணேஷ்' என்றார்கள்!
அது தான் General Clerk!
அப்படித்தான் நான் டெலக்ஸ் எப்படி அனுப்புவது என்று கற்றுக் கொண்டேன். டெலக்ஸில் யாரையும் உட்கார விட மாட்டார்கள். முரளி என்று ஒரு ஸ்டெனோகிராபர் இருந்தார். அதி பயங்கர வேகத்தில் டெலக்ஸ் அனுப்புவார். அவர் பின்னால் நின்று கொண்டு அவரது விரல்கள் ஆடும் நாட்டியத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்.
அப்போதெல்லாம் மெக்கானிக்கல் டெலக்ஸ் தான். எண்கள் மற்றும் எழுத்துகள் ஒவ்வொன்றுக்கும் முன்னால் வேறு வேறு விதமாக பட்டன்களை உபயோகிக்க வேண்டியிருந்தது. வார்த்தைகள் எல்லாவற்றையும் தந்தி போல் சுருக்கி டைப் செய்ய வேண்டியிருந்தது.
வேலை அவ்வளவாக இல்லாத போது நான் கொஞ்சம் கொஞ்சமாக டெலக்ஸ் அனுப்புவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். வந்தது வம்பு. முரளிக்கு அருமையான வேலை கிடைத்து ராஜினாமா செய்து விட, அந்தப் பணியும் என்னிடம் வந்தது.
அப்படி கற்றுக் கொண்ட அந்தப் பணி தான் பின்னாளில் எனக்கு அந்தப் பெருமைக்குரிய தொழிலகத்தில் வேலை வாங்கிக் கொடுத்தது. 'வருகிற எந்த வாய்ப்பையும் விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்' என்று நான் பார்க்கிற எல்லோருக்கும் இந்த ஒரு நிகழ்ச்சியையே உதாரணமாகக் காட்டி சொல்வேன்.
மெக்கானிக்கல் டெலக்ஸ் போய் எலெக்ட்ரானிக்ஸ் டெலக்ஸ் வந்தது டும் டும் டும்!
எலெக்ட்ரானிக்ஸ் டெலக்ஸும் போய் கம்ப்யூட்டர் டெலக்ஸ் வந்தது டும் டும் டும்!!
ஒரு நாளுக்கு நூறிலிருந்து நூற்றி ஐம்பது டெலக்ஸ் செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்த சமயம். அப்போது தான் எங்களது பிரிவில் வேலை செய்ய இன்னொரு ஆள் தேவை என்று விளம்பரம் செய்தார்கள்.
முக்கிய தகுதி - கம்ப்யூட்டர் டெலக்ஸ் தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் டெலக்ஸில் பணிபுரிகிறவர்கள் மிகக் குறைவாக இருந்தார்கள். ஆகையால் அந்தப் பணி தெரிந்தவர்கள் யார் வந்தாலும் சுலபமாகத் தேர்வாகி விடுவார்கள் என்று நாங்கள் அனுமானித்திருந்தோம். 'அப்படி யாரும் வரவில்லை என்றால் நல்ல Telephone Operatorஐத் தேர்வு செய்து விட்டு அவரை டெலக்ஸில் பணிபுரியத் தயார் படுத்தி விட வேண்டியது தான்!' என்று எங்கள் மேலாளர் சொன்னதைப் பக்கத்துப் பிரிவில் இருந்த ஒருவர் கேட்டு விட்டார்.
மதிய உணவு வேளையில் என் முன் வந்து உட்கார்ந்தார். "கணேஷ், நீ எப்படியாவது உதவி பண்ணனும்!" என்று ஆரம்பித்தார்.
அவரது தூரத்து உறவினரான ஒரு பெண்மணிக்கு நான் உதவ வேண்டும் என்றார். "என்ன உதவி?" என்றேன் சற்று தயங்கி.
"அந்தப் பொண்ணு Telephone Operatorஆ வேலை செஞ்சுகிட்டிருக்கா. ரொம்ப கம்மியா உதவித் தொகை மாதிரி என்னமோ கொடுத்துகிட்டிருக்கான். அவளுக்கு எப்படியாவது இந்த வேலை கிடைக்கிற மாதிரி பண்ணப்பா. கோடி புண்ணியமாப் போகும். அவங்க குடும்பம் ரொம்பக் கஷ்டப் படற குடும்பம்" என்றார்.
"கம்ப்யூட்டர் டெலக்ஸ் தெரியுமா?" என்று முதல் அஸ்திரத்தை உபயோகித்தேன்.
"டெலக்ஸ் தெரியும்"
"கம்ப்யூட்டர் டெலக்ஸ்?"
"என்னப்பா, எல்லாம் ஒண்ணு தானே? என்ன பெரிய மாற்றம் இருக்கப் போகுது?" என்றார் ரொம்ப பவ்யமாக.
"நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அது வேற, இது வேற" என்று சொல்லிக் கொண்டே என் அறைக்குள் நுழைய, அவரும் பின் தொடர்ந்தார்.
"உள்ளே அனுமதியில்லை சார்" என்றேன். "யாராவது பார்த்தால் என்னை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள்" என்று நான் சொல்லிக் கொண்டே இருக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளாத மாதிரி அவர் அந்த கம்ப்யூட்டர் டெலக்ஸ் முன் போய் நின்று அதையே உற்றுப் பார்த்தார்.
"டைப் ரைட்டர் மாதிரி தான் இருக்கு! என்ன பெரிய கம்ப்யூட்டர் டெலக்ஸ்?" என்றார் சிரித்து.
இந்த ஆளை என்ன பண்ணுவது என்கிற பாவத்தில் பாவமாக அவரைப் பார்த்தேன்.
"கணேஷ், சின்ன உதவி பண்ணப்பா. எந்த எந்த பட்டனைத் தட்டினா என்னென்ன ஆகும்னு மாத்திரம் சொல்லிக் கொடப்பா. மத்ததை நான் பார்த்துக்கறேன். ப்ளீஸ்!" என்றார்.
"சார், அது நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு ஈஸி இல்லை சார். மெஸேஜ் எடிட் பண்றதுக்கு ஒரு கீ, சேவ் பண்றதுக்கு ஒரு கீ, அனுப்புறதுக்கு ஒரு கீ, வேணாம்னா டெலீட் செய்ய ஒரு கீ, ஷெட்யூல் பண்ண ஒரு கீ, பிரிண்ட் எடுக்க ஒரு கீ. இப்படி எக்கச்சக்க கீ!" என்று பச்சைக் கிளி மாதிரி சொல்லிப் பார்த்தேன்.
"பாரு, நீயே சொல்லிட்டே. அந்த கீ, இந்த கீ.. அப்படீன்னு. அதையெல்லாம் ஒவ்வொண்ணா சொல்லு. நான் எழுதிக்கிறேன். அவளை மனப்பாடம் பண்ணிக்க சொல்லிட்டா ஆச்சு. ஜமாய்ச்சுடலாம்" என்றவர் பக்கத்திலிருந்த நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு காகிதத்தைக் கிழித்து வைத்துக் கொண்டு தயாராகி விட்டார்.
நான் அவரையே பார்க்க, "சொல்லுடா கண்ணா!" என்றார் கொஞ்சி.
ஒரு நிமிடம் யோசித்தேன். உதவி செய்வதில் என்ன தவறு? அதுவும் ஒரு பெண்ணுக்கு!! கம்ப்யூட்டர் டெலக்ஸ் வந்த புதிதில் நானும் தலைகீழாக நின்று தானே கற்றுக் கொண்டேன்! பாவம், உதவி செய்து விடுவோம்.
"எழுதிக்குங்க சார்" என்றேன் உற்சாகத்தோடு.
"F2: Edit, F3: Save, F6: Schedule, F7: Print, F10: Exit" என்றேன்.
ரொம்பப் பொறுமையாக அழகாக எழுதினார்.
"திவ்யா செலக்டட்" என்றார் குஷியாக!
'திவ்யா, பெயர் நல்லாத் தான் இருக்கு!' என்று மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அவர் நகர்ந்ததும், 'எப்படி இருப்பாள் திவ்யா?!!'
சரி, முதல் வரிக்கான சம்பவத்துக்கு வந்து விடுகிறேன்.
இண்டர்வியூ தினம் வந்தது.
திவ்யாவின் முறையும் வந்தது.
அழகான தேவதை போல் அவள் அறைக்குள் நுழைந்தாள்.
எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம். நான் என் பெயரைச் சொன்னதும் அவளது கண்கள் மூன்று நான்கு விநாடிகள் என் முகத்தில் நீந்தி விட்டுக் கடந்தன. நண்பர் என் பெயரை சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
எங்கள் மேலாளர் கணீர் குரலில் ஆரம்பித்தார்.
"கம்ப்யூட்டர் டெலக்ஸில் பணிபுரிந்த அனுபவம் இருக்கிறதா?"
"ஓ!" என்றாள் திவ்யா கண்களை அகல விரித்து. என் பக்கம் வேறு ஒரு முறை திரும்பிப் பார்த்தாள்.
அவளை கம்ப்யூட்டர் டெலக்ஸ் முன் உட்காரச் சொன்னார். திவ்யா பரத நாட்டிய அபிநயங்களோடு நடந்து சென்று கம்ப்யூட்டர் டெலக்ஸ் முன் உட்கார்ந்து கொண்டாள்.
ஒரு முறை 'டைப்ரைட்டர்' போலிருந்த கம்ப்யூட்டரைப் பார்த்து விட்டு மனதுக்குள் சமாதானப் பட்டது போல் எனக்குத் தெரிந்தது.
"எவ்வளவு வருடங்களாக கம்ப்யூட்டர் டெலக்ஸில் பணி புரிந்திருக்கிறீர்கள்?" என்றார் மேலாளர்.
"மூன்று வருடங்கள்" என்றாள் திவ்யா பளிச்சென்று.
"மூன்று வருடங்கள்?" என்றார் மேலாளர் கேள்விக்குறியைச் சேர்த்து.
"பெங்களூருக்கு கம்ப்யூட்டர் டெலக்ஸ் வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அது எப்படி மூன்று வருடங்கள்?" என்றார் ஒவ்வொரு வார்த்தையையும் மெதுவாக உச்சரித்து.
"கம்ப்யூட்டர் டெலக்ஸ்? அது ஒரு வருடம் தான். நான் சொன்னது ஆர்டினரி டெலக்ஸ்!" என்றாள்.
"ஆர்டினரி டெலக்ஸ்? யூ மீன் மெக்கானிக்கல்?" என்றார் திருத்தி.
"எஸ், எஸ்.." என்றாள் அவசரமாக!
'அடி பாவி, அப்படியென்றால் உனக்கு மெக்கானிக்கல் டெலக்ஸ் கூடத் தெரியாதா?!'
நினைத்தவன் ஏதோ நானே இண்டர்வியூ செய்யப் படுவது போல் நடுங்க ஆரம்பித்தேன்.
"சரி, ஒரு டெலக்ஸ் மெஸேஜ் அனுப்பிக் காட்ட முடியுமா?" என்று தயாராக இருந்த ஒரு செய்தியை எடுத்துக் கொடுத்தார்.
திவ்யா உடனே விமானம் ஓட்ட ஆரம்பித்தாள்.
"F2 for Edit, F3 for Save, F5 இல்லை, இல்லை, சாரி, F6 for Schedule, F7 for .."
"ஓகே, ஓகே" என்று இடை மறித்தார் மேலாளர். "எங்கே, எடிட் செய்து காட்டுங்கள்" என்றார்.
திவ்யா பதவிசாக உட்கார்ந்து கொண்டாள். திரும்ப ஒரு முறை அந்த 'டைப் ரைட்டர்' போலிருந்த கம்ப்யூட்டரைப் பார்த்தாள்.
தேடிக் கண்டுபிடித்து 'F' என்ற பட்டனைத் தட்டிவிட்டு, தேடிக் கண்டுபிடித்து '2' என்ற பட்டனையும் தட்டிவிட்டு "F2 for Edit" என்று கூறிப் புன்னகைத்தாள்!
[நன்றி: http://tamil.sify.com]
5 பின்னூட்டங்கள்:
:-))))
//"எவ்வளவு வருடங்களாக கம்ப்யூட்டர் டெலக்ஸில் பணி புரிந்திருக்கிறீர்கள்?" என்றார் மேலாளர்.
"மூன்று வருடங்கள்" என்றாள் திவ்யா பளிச்சென்று. //
இது தானுங்க டாப்.
நன்மனம் கொண்டு பாராட்டியதற்கு நன்றி :-)
அன்புடன்,
'சுபமூகா'
I liked the end paragraph.
நன்றி சித்ரன்.
மத்த பத்திகளை ஏன் படிக்காம விட்டுட்டீங்க :-)
அன்புடன்,
சுபமூகா
Test
Post a Comment