Thursday, February 15, 2007

சீச்சீ,, இந்தப் பழம் கிடைக்கும்!

எழுத்தாளர் ராஜேஷ் குமார் எப்படி வீடு கட்டினார்?
இன்று ஓடுங்கள் - நாளை புன்னகை புரியுங்கள்!
மாற்றான் தோட்டத்து மாங்கனிக்குத் தான் அதீத சுவை!

இணைப்பு தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு

புல்லில் பனித் துளி

துளி: 13

கைக்கு எட்டுகிற தூரத்தில் மாங்கனி இருந்தால் பறித்துத் தின்னும் போது அவ்வளவு சுவை இருக்காது. அது மிக உயரத்தில் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால், மாற்றான் தோட்டத்தில் இருக்கும் மரத்தில் இருக்க வேண்டும். குறி வைத்து அடிக்கிற ஒவ்வொரு கல்லும் பழத்துக்கு மிக அருகாமையில் சென்று விட்டு, பழத்தை வீழ்த்தாமல் திரும்ப வேண்டும். ஐந்தாறு முறை விடாமல் முயற்சித்து வெற்றியில் முடிய வேண்டும். அப்போது கைகளில் விழுகிற கனிக்கு இருக்கும் சுவையே அலாதி!

அப்படித்தான் வாழ்க்கையின் அதி அற்புத கனிகள் எல்லாம் கைக்குள் விழாமல் வேடிக்கை காட்டுகின்றன. விடாமுயற்சியும் அடிக்க தோதான கற்களும் இருந்தால் போதும். முக்கியமாக 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்கிற வாக்கியம் மனதிற்குள் புகாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எந்தத் துறையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணிச் சில பேர் தான் அதி அற்புத உயரத்துக்கு வருகிறார்கள். மற்றவர்கள் எல்லோரும் விரைந்து செல்லும் வாகனத்தின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடித் தொற்றிக் கொள்ள இயலாமல் கைவிட்டு விடுகிறார்கள். இன்னும் சிலர் கைப்பிடி கிடைக்கும் உன்னதத் தருணத்தில் ஓடும் வேகம் குறைத்து கீழே விழுந்து காயப் படுகிறார்கள். காயம் படுவது மட்டுமல்ல, திரும்ப ஓடி வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவும் அவர்களால் இயலாமல் போய்விடுகிறது.

பேருந்துக்குள் அமர்ந்திருக்கும் சிலர் மென்னகை புரிகிறார்கள். அவர்கள் இந்த மாதிரி அடித்துப்பிடித்துக் கொண்டு எல்லாம் ஓடி வந்து ஏறவில்லை. நிதானமாக நடந்து வந்து பேருந்து கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது ஏறி, தங்களுக்கென்று ஒரு இருக்கையையும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டு பொறாமை வேண்டாம். அவர்களது திட்டமிடும் திறமை தான் அந்த இருக்கையை அவர்களுக்கு அளித்திருக்கிறது.

பேருந்துக்குள் ஒருவர் மீது ஒருவர் முட்டி மோதிக் கொண்டு, காற்று புகாத இடைவெளியோடு நின்று, பேருந்தின் ஆட்டங்களுக்கு ஈடு கொடுத்துத் தள்ளாடிக் கொண்டிருப்பவர்களையும் பாருங்கள். அவர்கள் எத்தகைய இன்னல்களுக்கு ஆளானாலும் கூட, சரியான நேரத்துக்கு போக வேண்டிய இடத்தை அடையக்கூடிய வாய்ப்பை இழப்பதில்லை.

இது சுழற்சி முறையில் நடக்கிற கூத்து! நாளை இதே பேருந்தில் உங்களுக்கு அருமையான ஒரு இருக்கை கிடைக்கக் கூடும். இன்று உட்கார்ந்து கொண்டு உங்களைப் பார்த்து நகைத்த கண்ணியவான் நாளை பேருந்தைத் தவற விடக் கூட வாய்ப்பு இருக்கிறது. அல்லது, சட்டைமுழுக்கக் கசங்கி இடிபாடுகளில் நின்றபடி உங்களைப் பொறாமைக் கண்களுடன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடும்!

இதை சரியாகப் புரிந்து கொண்டு விட்டால் வாழ்க்கை அமிர்தம் தான்!

அருமையாக திட்டமிட்டு பேருந்தில் ஏறி தனக்கென்று இருக்கையையும் சம்பாதித்துக் கொள்ளும் பெருந்தகை, நாளை பேருந்தைத் தவற விடுவதாவது என்று வியக்க வேண்டாம். அது மிக சாதாரணமாக நடந்தேறி வரும் நிகழ்வு தான்.

சமீபத்தில் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளருடன் தொலைபேசிக் கொண்டிருந்த போது, "இப்போதெல்லாம் உங்களது படைப்புகளைக் காண முடிவதில்லையே? எழுதுவதில்லையா?" என்று என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் அனைத்து பத்திரிக்கைகளிலும் அவரது கதைகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. மிக நேர்த்தியான வார்த்தைப் பிரயோகங்களால் மிக அருமையாக ஈர்த்து விடுகிற கதைகள்! பழைய கள் என்றாலும் புதிய மொந்தையில் அதை மறைத்துக் கொடுக்கிறவிதம் தெரிந்தவர்கள் தானே நல்ல எழுத்தாளன் ஆக முடியும்?! அப்படி தூள் கிளப்புகிற பல எழுத்தாளர்களும் திடீரென்று ஒரு நாள் காணாமல் போய் விடுவது ஏன்?

"முன்னே மாதிரி எழுத முடியவில்லை. குடும்பம் குழந்தைகள் என்று புதிய வட்டத்துக்குள் சிக்கிக்கொண்ட பிறகு நேரம் கிடைப்பதில்லை" என்று வருத்தப் பட்டுக் கொண்டார்.

இது 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்கிற மாதிரியான முடிவு இல்லை. 'பழம் இனிக்கும்' என்கிற உண்மை மறையாமல் மாறாமல் மனதிற்குள் இருந்தாலும், ஒரு வித இயலாமையை நாமே நமக்குள் உருவாக்கிக் கொண்டு உழல்கிறோம். ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரத்தை அள்ளிக் கொடுத்திருந்தாலும் கூட, ஒரு மணி நேரத்தை அதிலிருந்து திருடிக் கொள்ள ஆசைப்படுவதில்லை!

"வானம் தொட்டு விடும் உயரம் தான்" என்கிற தலைப்பில் எழுத்தாளர் ராஜேஷ் குமார் ஒரு தொடரை எழுதியிருந்தார். ஒவ்வொரு எழுத்தாளனும் தவறாமல் படிக்க வேண்டிய தொடர் அது. ஒவ்வொரு நாளும் புகைவண்டிப் பயணம் செய்தாக வேண்டிய வேலையை அவர் செய்து கொண்டிருந்த தருணம். நானாக இருந்தால், களைப்பில் எப்போது ஓய்வு எடுத்துக் கொள்ள முடியும் என்று துடித்திருப்பேன். அவர் புகை வண்டியில் ஏறி அமர்ந்தவுடன், பெட்டியை மடியில் வைத்துக் கொண்டு, வெள்ளைத் தாளை எடுத்து வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்து விடுவாராம்! சக பயணிகள் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்களாம். அப்படி அவர் விடா முயற்சி செய்ததால் தான் அவரால் நிறையஎழுத முடிந்தது. கதை எழுதி வந்த பணத்தை வைத்து தனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ள முடிந்தது.

அவர் அந்த வெற்றியை ஒரு இரவில் அடைந்து விடவில்லை. தொண்ணூறு கதைகள் ஒரு மாதத்துக்கு அனுப்புவாராம். அதில் ஒன்று கூட தேர்ந்தெடுக்கப் படாமல் திரும்ப அனுப்பப் படுமாம்!!

அந்தக் கணத்தில் தான் உண்மையாகவே நன்றாக எழுதுகிறோமா என்று சந்தேகம் வந்திருக்க வேண்டும். அது வரவில்லை. அதனால் தான் அவர் வெற்றி கண்டார்.

நம்மால் முடியும் என்கிற சந்தேகமற்ற நம்பிக்கை - அது முக்கியம். அது இருந்தால் தான் கல் கிடைக்கும் போது இலக்கு பிசகாமல் உயர இருக்கிற மாங்கனியை வீழ்த்தி கைக்குள் கொண்டு வர முடியும்!

நன்றி: http://tamil.sify.com

1 பின்னூட்டங்கள்:

said...

சில வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பை கவனிக்க பலரும் மறந்து விடுகிறார்கள்.