அழகிகள் உலகில்..
புல்லில் பனித் துளி
துளி - 8
பெங்களூருக்கு வந்த புதிதில் அந்த மாதிரி இக்கட்டில் மாட்டிக் கொள்வேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. சும்மாவா? பதினைந்து நாட்கள்! தொடர்ந்து பதினைந்து நாட்கள்!
பெங்களூரின் மெஜஸ்டிக் பகுதியில் இருக்கும் அந்த பிரபலமான இரவு விடுதியில் பதினைந்து நாட்கள் தொடர்ந்து கேபரே பார்க்கும் இக்கட்டு தான் அது.
'இக்கட்டா?' என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது. 'அருமையான உடற்கட்டைப் பார்த்து விட்டு வெளியே இக்கட்டு என்று சொல்கிறான் பார்' என்று ஒருவர் கேலி செய்வதும் கேட்கத் தான் செய்கிறது. இட்டுக் கட்டுதல் என்று நீங்கள் நினைத்தாலும் அது எனக்கு இக்கட்டு தான்.
கல்லூரி படிப்பை முடித்து விட்டு பெங்களூரில் அருமையான ஒரு அலுவலகத்தில் காலாட்டிக் கொண்டே செய்யும் ஒரு வேலையில் சேர்ந்து கை நிறைய நோட்டுகளைப் பார்க்கப் போகிறேன் என்று கண்களை மூடிக் கொண்டு வந்தவனுக்கு 'வேலை செய்து அனுபவம் பெற்று வா' என்று அலுவலகங்கள் எல்லாம் கையை விரித்து அனுப்பிய காலம் -
கல்லூரி நாட்களில் இசைக் குழுவில் இருந்த அனுபவத்தில் ஒரு பிரபல இசைக் குழுவில் சேர்ந்திருந்தேன். அங்கு இருந்த இசை தாதாக்கள் முன்னர் நான் கடுகு மாதிரி தான் தெரிந்தேன். ஆனாலும் என்னை ஊக்குவித்தார்கள். தாள லயம் எனக்கு அருமையாகத் தெரிகிறது என்று பாராட்டி இசை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வாய்ப்பு தந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து கர்நாடக மாநிலத்தின் பற்பல ஊர்களுக்கும் செல்கிற வாய்ப்பு கிடைத்தால் மறுக்க மனம் வருமா என்ன? உதவித் தொகை மாதிரி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஐம்பது ரூபாய் தந்தார்கள். மூன்று மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க காங்கோ ட்ரம் வாசித்து விட்டு அதை வாங்கும் போது மனது கொஞ்சம் அதிகம் ஆசைப் பட்டதென்னவோ உண்மை தான். ஆனாலும் வேலை இல்லாமல் இருந்த இந்த பட்டதாரிக்கு அந்தத் தொகையே பெரிதாகத் தெரிந்தது.
அந்த மாதிரி பெரிய இசைக் குழுவில் வாய்ப்பு கிடைப்பதே பெரிய அதிர்ஷ்டம். ஊர் ஊராக சுற்றும் வாய்ப்பு. எனக்குப் பிடித்த இசையுடன் உறவு. மாதத்தில் பதினைந்து நாட்களாவது இசை நிகழ்ச்சிகள். இவையெல்லாம் சேர்ந்து என்னை மௌனமாக அந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள வைத்தன.
90 சதவிகிதம் கன்னடப் படப் பாடல்கள் தான் நிகழ்ச்சியில் இருக்கும். .மற்றவை இந்தி பாடல்கள். போனால் போகிறதென்று இரண்டு மூன்று தமிழ் தெலுங்கு படப் பாடல்களும் இருக்கும். முதல் இரண்டு மூன்று நிகழ்ச்சிகளில் ரொம்பத் திணறிப் போனேன். எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்த பாபு மாஸ்டர் தான் ரொம்ப உதவினார். கன்னடப் பட கேஸட்டுகள் கொடுத்துக் கேட்கச் செய்தார். ஓரிரு வாரங்களில் தூள் கிளப்ப ஆரம்பித்து விட்டேன்.
கல்யாணக் கச்சேரிகள் என்றால் தமிழ்ப் பாடல்கள் நிச்சயம் பாடுவார்கள். அதுவும் நிச்சயம் 'இளைய நிலா பொழியும்'. தமிழ் என்றால் கொஞ்சம் உற்சாகம் கூட்டி வாசிப்பதாக எல்லோரும் என்னை கேலி செய்வார்கள். தமிழ்ப் படப் பாடல் என்று தொகுப்பாளர் அறிவிக்கும் போது எல்லோரும் ஒரு சேர என்னைப் பார்ப்பார்கள். 'கணேஷன ஹாடு பந்த்தப்பா' (கணேஷுடைய பாடல் வந்து விட்டது} என்று கிண்டலடிப்பார்கள்.
இந்தக் குழுவில் இருந்ததால் பெங்களூரில் நடக்கும் மிக முக்கியமான ரெக்கார்டிங் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இளையராஜா ரெக்கார்டிங் நிகழ்ச்சியில் ஒரு முறையாவது பங்கேற்று விட வேண்டும் என்றெல்லாம் ஆசைப் பட ஆரம்பித்தேன்.
ஒரு முறை எங்கள் குழுவின் பிரதான அங்கத்தினரான பாலி ஒரு துண்டு சீட்டில் ஒரு தொலைபேசி எண்ணை எழுதிக் கொடுத்தார். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் இடைப் பட்ட நேரத்தில் தான் அதைச் செய்தார்.
"இது ஹாலிடே இன் நம்பர். ரூம் நம்பர் 105. பாலு வந்திருக்காரான்னு கேட்டுட்டு வந்துடு" என்றார். நான் தலையாட்டி விட்டு அசிரத்தையாகக் கிளம்ப, திரும்பக் கூப்பிட்டார்.
" யார் தெரியும் தானே? எஸ்.பி. பாலசுப்ரமணியன்!" என்றார்.
எனக்கு அப்போதே கை நடுங்க ஆரம்பித்து விட்டது. 'நா..ன் எஸ்பிபி.யுடன் பேசப் போகிறேனா?!' என்று குதூகலித்தேன். ஏறக்குறைய ஓட ஆரம்பித்தேன்.
"கேன் ஐ ஸ்பீக் டூ மிஸ்டர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் ரூம் நம்பர் ஒன் நாட் ஃபைவ்" என்று கேட்டுவிட்டு என் இதயத் துடிப்பைக் கேட்டபடி காத்திருந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது.
"சாரி சார், நோ ரெஸ்பான்ஸ் ஃப்ரம் த ரூம், எனி மெஸ்ஸேஜ்?"
'எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்லி விடுங்கள்' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு இணைப்பைத் துண்டித்தேன்.
இந்த மாதிரி எத்தனையோ மறக்க முடியாத அனுபவங்கள், எப்போதும் மறக்கவே கூடாத நண்பர்கள், என் வாழ்க்கையில் நான் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருந்த முக்கிய காலகட்டத்தில் நான் சோர்ந்து போகாமல் காத்தவர்கள்.
அந்த அனுபவங்களில் முக்கியமானது எப்போதுமே என் உதட்டில் ஒரு புன்முறுவலைத் தேக்கி வைக்கும் அந்த நிகழ்வு.
பதினைந்து நாட்கள் - டிசம்பர் 16ஆம் தேதி முதல் புத்தாண்டு வரை சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு என்னை சிபாரிசு செய்தார் பாபு மாஸ்டர். சுளையாக ஆயிரத்தைநூறு ரூபாய் என்று ஆசை காட்டி என்னை ஒப்புக் கொள்ள வைத்து விட்டார். கேபரே என்றதும் என் கற்பு பறி போன மாதிரி அலறி வேண்டாம் என்றேன். 'நீ ஒண்ணும் கேபரே ஆட்டத்துக்கு வாசிக்கப் போறதில்லை. அதுக்கு முன் அரை மணி நேரம் இண்டியன் செஷன் இருக்கும். அதுக்கு தான் வாசிக்கப் போறே!' என்றார்.
ஒரு நாளுக்கு இரண்டு காட்சிகள். அரை மணி நேரம் இண்டியன் செஷன் அதை அடுத்து அரை மணி நேரம் கேபரே. அரை மணி நேர இடைவெளியில் அடுத்த காட்சி. இரண்டு காட்சிகளிலும் முதல் அரை மணி நேரம் இண்டியன் செஷன் என்று இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு பாடல்கள் பாடுவார்கள். யாரும் அதை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. எப்படா கேபரே ஆரம்பிக்கும் என்று எல்லோருடைய கண்களும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்!
ஒரு மணி நேர வாசிப்புக்கு நூறு ரூபாய். ஆஹா, ஒப்புக் கொண்டேன். 'ஆனா, கேபரே...' என்று இழுத்தேன். 'அந்த சமயத்தில் நீ அங்கே இருக்கவே வேண்டாம். மெஜஸ்டிக்கை சுத்திப் பாரு. ஒரு மணி நேரம் கழிச்சு வா. போதும்' என்றார்.
முதல் நாள் இண்டியன் செஷன் முடிந்த அடுத்த விநாடி வெளியே தெருவில் இருந்தேன். எங்கே கேபரே தொடங்கி விடுவார்களோ என்று அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது.
நான் இரண்டாவது காட்சிக்கு வந்த போது கிட்டாரிஸ்ட் சார்லஸ் என்னைப் பார்த்து மர்மமாக சிரித்த மாதிரி இருந்தது.
அடுத்த நாளும் நான் நல்ல பிள்ளையாக இரண்டாவது காட்சி தொடங்கும் நேரத்துக்கு உள்ளே நுழைந்தேன். சார்லஸ் அவசரமாக என்னிடம் வந்தார்.
"ஸ்டெல்லா உன்னைத் தேடிகிட்டிருந்தது. போய் பாரு" என்றார்.
"யா...ரு? ஸ்..டெல்லா?" என்றேன்.
பாபு அதற்குள் வந்தார்.
"யா...ரு? ஸ்..டெல்லா?" என்றேன் அவரிடமும். "எதுக்கு என்னைத் தேடணும்?" என்றேன்.
"ஸ்டெல்லா? அது கேபரே ஆர்ட்டிஸ்ட்" என்று சொல்லி விட்டு பாபு சார்லஸைப் பார்க்க, சார்லஸ் கண்ணடித்தார்.
"ஏம்ப்பா அந்த பையனை இப்படி கிண்டல் அடிக்கறீங்க?" என்று கடிந்து கொண்டார் பாபு. என் பக்கம் திரும்பி "சும்மா சொல்றாங்க" என்றார்.
பாபு அந்தப் பக்கம் போகிற வரை காத்திருந்த சார்லஸ் என் முதுகைத் தட்டினார்.
"ஏன் பொண்ணுங்களைப் பார்க்கிறதுக்கு பயமா?" என்று பகபகவென்று சிரித்தார்.
"என்ன வயசு உனக்கு?" என்றார் சிகரெட்டைப் பற்ற வைத்து.
"இருபத்தி ஒண்ணு" என்றேன். என் குரல் எனக்கே கேட்கவில்லை.
"அவனவன் நூத்தம்பது ரூபா கொடுத்துட்டு வர்றானுங்க. ஃப்ரீயா கொடுத்தாக் கூட வேணாங்கிறியே? அம்மா திட்டுவாங்களா?" என்று சொல்லி விட்டு திரும்ப பகபகபக!
அதற்குள் செஷன் ஆரம்பித்து விட, கண்களில் திரண்ட கண்ணீரைக் கட்டுப் படுத்த நிரம்ப சிரமப் பட்ட படி நடந்தேன். அன்றைக்கு எக்கச்சக்க தவறுகள்! இசை நின்ற பிறகும் நான் காங்கோ வாசித்துக் கொண்டே இருந்தேன். பாபு கண்களால் எரித்தார். "சாரி" என்று வார்த்தையில்லாமல் உதட்டசைத்தேன்.
அடுத்த நாள் இண்டியன் செஷன் முடிந்து வெளியே போகும் போது நான் திரும்பி சார்லஸைப் பார்க்க, அவர் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. 'வெளியே போகாமல் இருந்து விடலாமா?' என்று யோசித்தேன்.
'இருக்கிறதைப் பத்தி ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. கண்ணை மூடிக் கிட்டு உட்காரு' என்று அப்பா, அம்மா, தாத்தா, பெரிய தாத்தா, சித்தப்பா, மாமா எல்லோரும் எதிரொலிகளுடன் பேச.. வெளியே வந்து விட்டேன்.
அரை மணி நேரம் கழித்து திரும்பினேன். உள்ளே அதிரடியாக கிடாரும் ட்ரம்ஸும் முழங்கிக் கொண்டிருக்க.. மணியைப் பார்த்தேன் குழம்பி.
கவுண்ட்டரில் இருந்தவர் என்னைப் பார்த்து புன்னகைத்து "இன்னைக்கு கொஞ்சம் லேட்! இன்னும் பத்து நிமிஷம் ஆகும்" என்றார்.
நான் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து சாய்ந்து கொண்டேன்.
"இங்க உட்கார வேண்டாம்" என்றார் அவசரமாக. "பாஸ் வர்ற நேரம். பார்த்தா என்னைத் திட்டுவாரு. உள்ளே போயிடு. இல்லை ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வா" என்றார்.
நான் எழுந்து கதவு நோக்கி நடந்தேன். திறந்தேன்.
கிடாரும் ட்ரம்ஸும் சட்டென்று வெளியேறி என்னைத் தழுவிக் கொண்டன.
[தொடரும்..]
[நன்றி: http://tamil.sify.com]
0 பின்னூட்டங்கள்:
Post a Comment