Friday, April 20, 2007

பயக்க வயக்கங்கல்

ன்ரு காலை ரொம்ப போரடித்ததால் தொலைக்காட்சி பார்க்கலாம் என்ரு உட்கார்ந்தேன்.

நிரம்ப நாட்களுக்கப்புறம் நான் தொலைக்காட்சி பார்க்கிறேன். வேலைகள் நிறைய இருப்பதால் முன் மாதிரி எல்லாம் நேரம் கிடைப்பதில்லை.

எந்த சானலைத் தேர்ந்தெடுத்தாலும் விவேக்கும் வடிவேலுவும் தான் அதிகம் தெரிந்தார்கள். தப்பித் தவறி இவர்கள் இல்லையென்றால் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. விளம்பரங்கள் என்றால் அப்போதெல்லாம் மூன்று நான்கு வரும். இப்போது முப்பது நாப்பது வருகிறது. அது எப்படித்தான் நம்மவர்கள் கொஞ்சம் கூட அலுக்காமல் உட்கார்ந்து இந்த விளம்பரங்களைப் பார்க்கிறார்களோ, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒருவேளை இப்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை விடவும் இந்த விளம்பரங்கள் மிக அருமையாக இருக்கிறதோ என்னவோ!



இந்த காமெடி நிகழ்ச்சிகளில் இருக்கிற முக்கியமான காமெடி என்னவென்றால் எல்லா நிகழ்ச்சிகளும் ஒரே மாதிரி இருப்பது தான். தமிழில் வெளிவரும் பத்திரிக்கைகளைப் பற்றி வேடிக்கையாக ஒன்று சொல்வார்கள். பத்திரிக்கையுடைய அட்டையை எடுத்து விட்டால் எந்தப் பத்திரிக்கை என்று தெரியாது என்று! பத்திரிக்கை ஆசிரியர்கள் புத்திசாலிகள்! பத்திரிக்கையுடைய பெயர், வெளியான தேதி இவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் கொடுத்து இதை சரி செய்து விட்டார்கள். இப்போது தொலைக் காட்சி நிகழ்ச்சிகளும் அதே மாதிரி ஆகி விட்டது.


இந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்கள் ஒரு கடற்கரையில் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, காலார நடந்து கொண்டோ, இல்லை, பின்னாலேயே நடந்து கொண்டோ ஒரு விளக்கம் சொல்வார்கள். சில சமயம் அந்த விளக்கத்துக்கும் ஒளிபரப்பாகிற நகைச்சுவைக் காட்சிக்கும் எள்ளளவும் சம்பந்தம் இருக்காது. ஒவ்வொருத்தரும் ஒரே மாதிரி தங்கள் ஆலாபனையை முடிப்பார்கள் -
'இப்ப இவரு என்ன பண்றாருன்னு பாருங்க!'


நம்ம மக்களும் போட்ட ஒரே நகைச்சுவைக் காட்சியை அலுக்காமல் 54324வது தடவையாக எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் எனக்கு இன்னும் புரிபடாத விஷயமாக இருக்கிறது.


அப்போதெல்லாம் டிவி கிடையாது. வானொலியில் ஒலிச்சித்திரம் என்று மாதம் ஒரு தடவை ஒலிபரப்புவார்கள். 'வானொலி' பத்திரிக்கையை இதற்கென்று வாங்கி, எந்தத் தேதியில் என்ன ஒலிச்சித்திரம் என்று பார்த்து வைத்துக் கொண்டு காத்திருந்து கேட்போம். சில சமயம் டேப் வந்திருக்காதோ என்னவோ பழைய ஒலிச்சித்திரத்தை மறு ஒலிபரப்பு செய்வார்கள். கேட்க மாட்டோமே! 'அட, இது வந்தது தானே?' என்று சொல்லி வானொலியை 'அணைத்து' விடுவோம். இந்த காலத்து மக்கள் மாறி விட்டார்கள்.


ந்தக் கட்டுரையை மெனக்கெட்டு எழுதுகிற காரணத்தை மறந்து விட்டு எங்கேயோ போய்விட்டேன். முன் மாதிரி எல்லாம் பதினைந்து நிமிடத்துக்கு ஒரு முறை இல்லை என்றால் அரைமணிக்கு ஒரு முறை இந்த அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் தலையை நுழைப்பதில்லை.


வானொலி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வந்து 'அடுத்த நிகழ்ச்சி இன்னும் சில விநாடிகளில் தொடரும்' என்று சொல்லி விட்டு, யாரையாவது வயலின் வாசிக்க வைத்து விடுவார்கள். கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்து நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்பை சொல்வார்கள்.


ஒவ்வொருவரும் அழகாக அறிவிப்பை செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருந்தது. அழுத்தம் திருத்தமாக அவர்கள் அறிவிப்புகளை வழங்கும் விதம் அருமையாக இருந்தது. நான் கூட சில அறிவிப்பாளர்களை நேரில் பார்த்து ஆட்டோகிராப் போடச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.


இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்களுக்கு அந்த மாதிரி அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு இருக்கிறதா என்றால் அது ஒரு பெரிய மைனஸ்! தப்பித் தவறி ஒழுங்காகப் பேசி விட்டால் அவர்களைத் தேர்ந்தெடுக்கவே மாட்டார்களோ என்று கூடத் தோன்றுகிறது.


காமெடி காட்சிகளை விடவும் அதைத் தொகுத்து வழங்குகிறவர்கள் பேசுகிற தமிழில் இருக்கிற காமெடி இன்னும் தூள். வாயில் என்னவோ சுடு தண்ணீரை வைத்துக் கொண்டு பேசுகிற மாதிரி அவர்கள் அடிக்கிற கூத்து - ஆகா! இப்போது போட்டிக்கு நேயர்களோடு கலந்து உரையாடி அவர்கள் கேட்கிற பாடலை வழங்க சின்னச் சின்ன பெண்கள் வந்து விட்டார்கள். அவர்களைப் பார்த்து நாம் மெய் மறக்கிறோமோ என்னவோ, தமிழை மாத்திரம் மறந்தே ஆக வேண்டும்.


ழ, ல, ள, ந,ன, ண எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. 'அட, எதை எங்கே யூஸ் பண்ணினாத்தான் என்ன?' என்று மாற்றி மாற்றி உபயோகித்து அட்ஜஸ்ட் செய்கிறார்கள்.


அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கூட ஒழுங்காக இந்த உச்சரிப்புகளை செய்தார்களா என்பது சந்தேகமே. முழு தமிழகமும் இதைப் பற்றி கவலைப் படாமல், 'அடப் போங்கப்பா, இது பயக்க வயக்கம்!' என்று சொல்லிவிட்டுத் தப்பித்து விடுகிறது.


மொழி என்பது நாமே உருவாக்கியது தானே? கைகளை ஆட்டி விதவிதமான குறியீடுகளை உருவகித்து வாயில் சப்தங்களை ஏற்படுத்தி பேசிக் கொண்டிருந்த கற்காலத்தில் இந்தத் தொந்தரவு எல்லாம் இருந்ததா என்ன?


தமிழ் மொழியை உருவாக்கின சமயத்தில் சும்மா இருக்காமல் ஒரே உச்சரிப்புக்கு இரண்டு மூன்று எழுத்துகளை உருவாக்கி வைத்தவர்களைத் தான் இப்போது நாம் குறை சொல்ல வேண்டியிருக்கிறது!


எதற்கு இந்த 'ழ'வும் 'ள'வும்?! தமிழுக்குப் பெருமை சேர்க்கிறதாமே இந்த 'ழ'? தமிழிலேயே உட்கார்ந்து கொண்டு 'காலாட்டிக்' கொண்டிருக்கிற இந்த 'ழ' எத்தனை பேர் நாக்குகளில் உட்கார மறுக்கிறது!


'வாழைப்பழத்தின் மீதேறி வழுக்கி விழுந்தான்' என்றெல்லாம் பேச வைத்து வழுக்கி விழ வைக்கிறார்கள்.


அதே மாதிரி தான் இந்த ர, ற அப்புறம் 'ன', 'ண', 'ந'! கொடுமைடா சாமி!


அரம், அறம், கனவு, கணக்கு, நன்மை - இந்தச் சொற்களுக்குள் எந்த இடத்தில் எந்த எழுத்தை உபயோகிப்பது என்பது குழப்பத்தை உருவாக்கக் கூடிய ஒன்று.


அந்த மொழி வல்லுநர்கள் கொஞ்சம் யோசித்து ஒரே எழுத்தை உருவாக்கியிருந்தால் தமிழ்மக்கள் எல்லோரும் தமிழ் தேர்வில் 100க்கு 96 நிச்சயம் வாங்கியிருப்பார்களே!


இப்போது நம் மக்கள் பேசும் வார்த்தைகளை வைத்தே அவர்கள் சொல்ல வருகிற கருத்தை நாம் யூகிக்கிறோம் தானே? அவர்கள் எந்த மாதிரி உச்சரிப்பை செய்தாலும் கருத்து சரியாக நம் தலையில் ஏறுகிறது தானே?


அப்புறம் எதற்கு இந்த மாதிரி வேறு வேறு எழுத்துகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டும்? அதாவது, அப்புரம் எதர்க்கு இன் த மாதிரி வேரு வேரு எலுத்துகலைப் போட்டுக் குலப்பிக் கொல்ல வேன்டும்?!


இருநூத்தி சொச்சம் எழுத்துகளில் எத்தனை எழுத்துகளை இதன் மூலம் குரைக்க முடியும் - சாரி - குறைக்க முடியும்?! சற்றே நினைத்துப் பாருங்கள்.


அடுத்த உலகத் தமில் மாநாட்டில் இது குரித்து ஒரு சிரப்பு கட்டுரை தயாரித்து வலங்கி தமில் கூரும் நல்லுலகம் உய்ய வலி வகுக்குமாரு தமில் அரிஞர்கலைக் கேட்டுக் கொல்கிரேன்!


[நன்றி: http://tamil.sify.com]

0 பின்னூட்டங்கள்: