Thursday, February 28, 2008

சுஜாதா!

என்னைப் போல் நிறைய எழுத்தாளர்களுக்கு
அவர் மானசீக குரு.

கல்லூரி முடித்து பெங்களூர் வந்த புதிதில்
அவர் தொலைபேசி எண்ணை நண்பர் மூலம் பெற்று தொடர்பு கொண்டு, அவர் குரலைக் கேட்டவுடன் என்ன பேசுவது என்று புரிபடாமல் விழித்தது, இப்போது தான் நடந்த மாதிரி இருக்கிறது!

அவரை எப்படியாவது ஒரு முறை நேரில் கண்டு ஆசி பெற வேண்டும் என்று மனதில் ஆசை வைத்துக் கொண்டு, இந்த இயந்திர உலக வாழ்க்கையில் அது நடக்காமலேயே போனது எனது துரதிர்ஷ்டம் தான்!

சுஜாதா எங்கும் போகமாட்டார்.
எண்ணிலடங்கா எழுத்தாளர்களின்
எழுத்துகளில் எங்காவது ஓரிடத்தில்
அவ்வப்போது நிச்சயம் தெரிவார்!

அவரைப் பிரிந்து துடிக்கும்
தமிழுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த வருத்தத்துடன்,
சுபமூகா

Friday, April 20, 2007

பயக்க வயக்கங்கல்

ன்ரு காலை ரொம்ப போரடித்ததால் தொலைக்காட்சி பார்க்கலாம் என்ரு உட்கார்ந்தேன்.

நிரம்ப நாட்களுக்கப்புறம் நான் தொலைக்காட்சி பார்க்கிறேன். வேலைகள் நிறைய இருப்பதால் முன் மாதிரி எல்லாம் நேரம் கிடைப்பதில்லை.

எந்த சானலைத் தேர்ந்தெடுத்தாலும் விவேக்கும் வடிவேலுவும் தான் அதிகம் தெரிந்தார்கள். தப்பித் தவறி இவர்கள் இல்லையென்றால் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன. விளம்பரங்கள் என்றால் அப்போதெல்லாம் மூன்று நான்கு வரும். இப்போது முப்பது நாப்பது வருகிறது. அது எப்படித்தான் நம்மவர்கள் கொஞ்சம் கூட அலுக்காமல் உட்கார்ந்து இந்த விளம்பரங்களைப் பார்க்கிறார்களோ, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒருவேளை இப்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை விடவும் இந்த விளம்பரங்கள் மிக அருமையாக இருக்கிறதோ என்னவோ!

இந்த காமெடி நிகழ்ச்சிகளில் இருக்கிற முக்கியமான காமெடி என்னவென்றால் எல்லா நிகழ்ச்சிகளும் ஒரே மாதிரி இருப்பது தான். தமிழில் வெளிவரும் பத்திரிக்கைகளைப் பற்றி வேடிக்கையாக ஒன்று சொல்வார்கள். பத்திரிக்கையுடைய அட்டையை எடுத்து விட்டால் எந்தப் பத்திரிக்கை என்று தெரியாது என்று! பத்திரிக்கை ஆசிரியர்கள் புத்திசாலிகள்! பத்திரிக்கையுடைய பெயர், வெளியான தேதி இவற்றை ஒவ்வொரு பக்கத்திலும் கொடுத்து இதை சரி செய்து விட்டார்கள். இப்போது தொலைக் காட்சி நிகழ்ச்சிகளும் அதே மாதிரி ஆகி விட்டது.

இந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்கள் ஒரு கடற்கரையில் நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, காலார நடந்து கொண்டோ, இல்லை, பின்னாலேயே நடந்து கொண்டோ ஒரு விளக்கம் சொல்வார்கள். சில சமயம் அந்த விளக்கத்துக்கும் ஒளிபரப்பாகிற நகைச்சுவைக் காட்சிக்கும் எள்ளளவும் சம்பந்தம் இருக்காது. ஒவ்வொருத்தரும் ஒரே மாதிரி தங்கள் ஆலாபனையை முடிப்பார்கள் -
'இப்ப இவரு என்ன பண்றாருன்னு பாருங்க!'

நம்ம மக்களும் போட்ட ஒரே நகைச்சுவைக் காட்சியை அலுக்காமல் 54324வது தடவையாக எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் எனக்கு இன்னும் புரிபடாத விஷயமாக இருக்கிறது.

அப்போதெல்லாம் டிவி கிடையாது. வானொலியில் ஒலிச்சித்திரம் என்று மாதம் ஒரு தடவை ஒலிபரப்புவார்கள். 'வானொலி' பத்திரிக்கையை இதற்கென்று வாங்கி, எந்தத் தேதியில் என்ன ஒலிச்சித்திரம் என்று பார்த்து வைத்துக் கொண்டு காத்திருந்து கேட்போம். சில சமயம் டேப் வந்திருக்காதோ என்னவோ பழைய ஒலிச்சித்திரத்தை மறு ஒலிபரப்பு செய்வார்கள். கேட்க மாட்டோமே! 'அட, இது வந்தது தானே?' என்று சொல்லி வானொலியை 'அணைத்து' விடுவோம். இந்த காலத்து மக்கள் மாறி விட்டார்கள்.

ந்தக் கட்டுரையை மெனக்கெட்டு எழுதுகிற காரணத்தை மறந்து விட்டு எங்கேயோ போய்விட்டேன். முன் மாதிரி எல்லாம் பதினைந்து நிமிடத்துக்கு ஒரு முறை இல்லை என்றால் அரைமணிக்கு ஒரு முறை இந்த அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் தலையை நுழைப்பதில்லை.

வானொலி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வந்து 'அடுத்த நிகழ்ச்சி இன்னும் சில விநாடிகளில் தொடரும்' என்று சொல்லி விட்டு, யாரையாவது வயலின் வாசிக்க வைத்து விடுவார்கள். கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்து நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்பை சொல்வார்கள்.

ஒவ்வொருவரும் அழகாக அறிவிப்பை செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருந்தது. அழுத்தம் திருத்தமாக அவர்கள் அறிவிப்புகளை வழங்கும் விதம் அருமையாக இருந்தது. நான் கூட சில அறிவிப்பாளர்களை நேரில் பார்த்து ஆட்டோகிராப் போடச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்களுக்கு அந்த மாதிரி அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு இருக்கிறதா என்றால் அது ஒரு பெரிய மைனஸ்! தப்பித் தவறி ஒழுங்காகப் பேசி விட்டால் அவர்களைத் தேர்ந்தெடுக்கவே மாட்டார்களோ என்று கூடத் தோன்றுகிறது.

காமெடி காட்சிகளை விடவும் அதைத் தொகுத்து வழங்குகிறவர்கள் பேசுகிற தமிழில் இருக்கிற காமெடி இன்னும் தூள். வாயில் என்னவோ சுடு தண்ணீரை வைத்துக் கொண்டு பேசுகிற மாதிரி அவர்கள் அடிக்கிற கூத்து - ஆகா! இப்போது போட்டிக்கு நேயர்களோடு கலந்து உரையாடி அவர்கள் கேட்கிற பாடலை வழங்க சின்னச் சின்ன பெண்கள் வந்து விட்டார்கள். அவர்களைப் பார்த்து நாம் மெய் மறக்கிறோமோ என்னவோ, தமிழை மாத்திரம் மறந்தே ஆக வேண்டும்.

ழ, ல, ள, ந,ன, ண எதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. 'அட, எதை எங்கே யூஸ் பண்ணினாத்தான் என்ன?' என்று மாற்றி மாற்றி உபயோகித்து அட்ஜஸ்ட் செய்கிறார்கள்.

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கூட ஒழுங்காக இந்த உச்சரிப்புகளை செய்தார்களா என்பது சந்தேகமே. முழு தமிழகமும் இதைப் பற்றி கவலைப் படாமல், 'அடப் போங்கப்பா, இது பயக்க வயக்கம்!' என்று சொல்லிவிட்டுத் தப்பித்து விடுகிறது.

மொழி என்பது நாமே உருவாக்கியது தானே? கைகளை ஆட்டி விதவிதமான குறியீடுகளை உருவகித்து வாயில் சப்தங்களை ஏற்படுத்தி பேசிக் கொண்டிருந்த கற்காலத்தில் இந்தத் தொந்தரவு எல்லாம் இருந்ததா என்ன?

தமிழ் மொழியை உருவாக்கின சமயத்தில் சும்மா இருக்காமல் ஒரே உச்சரிப்புக்கு இரண்டு மூன்று எழுத்துகளை உருவாக்கி வைத்தவர்களைத் தான் இப்போது நாம் குறை சொல்ல வேண்டியிருக்கிறது!

எதற்கு இந்த 'ழ'வும் 'ள'வும்?! தமிழுக்குப் பெருமை சேர்க்கிறதாமே இந்த 'ழ'? தமிழிலேயே உட்கார்ந்து கொண்டு 'காலாட்டிக்' கொண்டிருக்கிற இந்த 'ழ' எத்தனை பேர் நாக்குகளில் உட்கார மறுக்கிறது!

'வாழைப்பழத்தின் மீதேறி வழுக்கி விழுந்தான்' என்றெல்லாம் பேச வைத்து வழுக்கி விழ வைக்கிறார்கள்.

அதே மாதிரி தான் இந்த ர, ற அப்புறம் 'ன', 'ண', 'ந'! கொடுமைடா சாமி!

அரம், அறம், கனவு, கணக்கு, நன்மை - இந்தச் சொற்களுக்குள் எந்த இடத்தில் எந்த எழுத்தை உபயோகிப்பது என்பது குழப்பத்தை உருவாக்கக் கூடிய ஒன்று.

அந்த மொழி வல்லுநர்கள் கொஞ்சம் யோசித்து ஒரே எழுத்தை உருவாக்கியிருந்தால் தமிழ்மக்கள் எல்லோரும் தமிழ் தேர்வில் 100க்கு 96 நிச்சயம் வாங்கியிருப்பார்களே!

இப்போது நம் மக்கள் பேசும் வார்த்தைகளை வைத்தே அவர்கள் சொல்ல வருகிற கருத்தை நாம் யூகிக்கிறோம் தானே? அவர்கள் எந்த மாதிரி உச்சரிப்பை செய்தாலும் கருத்து சரியாக நம் தலையில் ஏறுகிறது தானே?

அப்புறம் எதற்கு இந்த மாதிரி வேறு வேறு எழுத்துகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டும்? அதாவது, அப்புரம் எதர்க்கு இன் த மாதிரி வேரு வேரு எலுத்துகலைப் போட்டுக் குலப்பிக் கொல்ல வேன்டும்?!

இருநூத்தி சொச்சம் எழுத்துகளில் எத்தனை எழுத்துகளை இதன் மூலம் குரைக்க முடியும் - சாரி - குறைக்க முடியும்?! சற்றே நினைத்துப் பாருங்கள்.

அடுத்த உலகத் தமில் மாநாட்டில் இது குரித்து ஒரு சிரப்பு கட்டுரை தயாரித்து வலங்கி தமில் கூரும் நல்லுலகம் உய்ய வலி வகுக்குமாரு தமில் அரிஞர்கலைக் கேட்டுக் கொல்கிரேன்!

[நன்றி: http://tamil.sify.com]

Friday, March 09, 2007

சுபமூகாவுடன் பணிபுரிய அரிய வாய்ப்பு ;-)


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Updated on March 13, 2007:

Thanks to the candidates who sent their resumes.

Please note that candidates without prior experience in Oracle Applications
have not been considered.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Wednesday, March 07, 2007

நீ தான் என்னவள்!



ஏனோ இன்று எனக்குத் தோன்றுகிறது -
நீ தானே என்னவள் என்று!




டந்த மூன்று வாரங்களாகப் போக நினைத்து முடியாமல் போய், இன்று அந்தப் படத்தைப் பார்த்தாகி விட்டது!



முங்காரு மளே - Mungaaru Malae - கன்னடத் திரைப் படம்!



தியேட்டரை விட்டு வெளியே வரும் போது எல்லோரும் துண்டால் தலையைத் துவட்டிவிட்டவாறே வருகிறார்கள். அவ்வளவு அழகாக படம் முழுக்க மழையும் நடித்திருக்கிறது.



படத்தின் உயிர் நாடி - ஒளிப்பதிவு. [க்ருஷ்ணா] தூள் கிளப்பியிருக்கிறது கேமிரா. அதுவும் மெர்க்கரா பகுதி காட்சிகள் மனதை அள்ளுகின்றன.



அடுத்து - திரைக்கதை! கதை என்று சொல்வதை விட கவிதை என்று சொல்ல வேண்டும்.



வசனங்கள் நிறைய என்றாலும் அலுக்காத வசனங்கள். வசனம் பேசுகிறார்கள் என்பதே தெரியாமல மிக இயல்பாக எல்லா நடிக/நடிகைகளும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.



மக்களை ஈர்த்த மிக முக்கியமான மற்றொன்று - அருமையான பாடல்கள்! அட்டகாசமான இசை! [மனோ மூர்த்தி - கலிபோர்னியா! யாரப்பா இவர்? இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? :-)]



சாதாரண ஒரு காதல் கதையை இவ்வளவு சிறப்பாக எடுக்க முடியுமா என்று வியக்க வைத்திருக்கிறார்கள். முழுக் குழுவுக்கும் ஒரு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். இயக்கியிருப்பவர்: யோகிராஜ் பட்.


நாயகன் கணேஷ். உதயா தொலைக்காட்சியில் வணக்கம்-வணக்கம்-வணக்கம் என்று சிட்டிபாபு ஸ்டைலில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தவர். மிக மிக மிக அருமையாக அந்த நாயகன் பாத்திரத்துக்கு பெருமை தேடிக் கொடுத்திருக்கிறார்.



நாயகி சஞ்சனா. அழகாக சிரிக்கத் தெரிந்த தேவதை. இடைவேளைக்குப் பிறகு நன்றாகவும் நடித்திருக்கிறார். அட விடுங்க, இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்ப் படத்தில் பார்க்கத் தானே போறீங்க!



பெண்ணின் தந்தையாக அனந்த் நாக்! பாந்தமான 'அட' என்று வியக்க வைக்கிற அவரை சார்ந்த காட்சிகளை அருமையாக உபயோகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.



பெங்களூர் மக்கள் மறக்காமல் படத்தைப் பார்த்து விடுங்கள்!

[முதல் இரண்டு வரிகள் -

முங்காரு மளே படத்தின் தாளம் போட
வைக்கும் பாடல் வரிகள்!]

Monday, March 05, 2007

வஸ்ரத்து


முன் பக்கம், பின் பக்கம் - ஜன்னல்!
தீய சக்திகளை விரட்ட எளிய வழி!
சுபமூகாவின் புதிய புனைப் பெயர் என்ன?

கூடுதல் தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு



புல்லில் பனித்துளி


துளி 14







லைப்பு புரிபடாமல் குழம்ப வேண்டாம். வாஸ்து என்கிற வார்த்தை தான் அது!



அந்த வார்த்தைக்கு இன்னும் மதிப்பு ஏற வேண்டுமானால் முதல் எழுத்து குறிலாக இருக்கவேண்டும் என்கிறபடியால் அந்த 'காலை' [சன்னல்] எடுத்து அடுத்த எழுத்துக்குப் பக்கத்தில் போட்டு விட்டோம். ஒற்றைப்படை இலக்கத்தில் எழுத்துகள் இருப்பதை விடவும் இரட்டைப்படை இலக்கத்தில் இருந்தால் நல்லது என்கிற அடிப்படையில் 'த்' என்கிற ஒரு எழுத்தை இணைத்து விட்டோம். அவ்வளவே!



வாஸ்து சாஸ்திரத்தை போதிப்பவர்களையும் அதை கடைபிடிப்பவர்களையும் நையாண்டி செய்யும் நோக்கம் இந்தக் கட்டுரைக்கு இல்லை. இதை சாக்காக வைத்து காசு அள்ளுபவர்களுக்கும் வீணாய் தங்களைத் தாங்களே குழப்பிக் கொண்டு இதைப் பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்கும், தங்கள் பெயர்களில் க்,ச்,ட்,த் என்று சேர்த்துக் கொண்டு புகழ் தேடப் பார்க்கும் புள்ளி ராஜாக்களுக்கும் தான்!



ஜாதகத்தை கையில் வைத்துக் கொண்டு ஏழாம் வீடு, எட்டாம் வீடு, ஒன்பதாம் வீடு, குரு, சனி, சுக்ரன், அவன் இவனைப் பார்க்கிறான், இவன் அவனைப் பார்க்காமல் இருக்கிறான், அதனால் தான் உனக்கு வேலை கிடைக்கவில்லை, ஆனால் சீக்கிரம் கல்யாணம் ஆகும் என்றெல்லாம் குழப்பப் படுத்தப் பட்டுக் கொண்டிருந்த மகா ஜனங்கள் இப்போது காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாஸ்து சாஸ்திரத்தைத் தங்கள் இதயத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜாதகத்தில் தோஷம் இருந்தால் ஒரு ஆலமரத்தை சுற்றியோ, கோவிலில் விளக்கேற்றியோ, புற்றுக்குப் பால் வார்த்தோ 'இனி நல்லது நடக்கும்' என்று மனதுக்குள் சமாதானப்பட்டுக் கொண்டவர்கள், வீட்டில் இருக்கிற வாசலை மூடிவிட்டு, இன்னொரு பக்கம் புதிய வாசலை உருவாக்குகிறார்கள். கிழக்கை வடக்கு பண்ணுகிறார்கள், வடக்கை தெற்கு பண்ணுகிறார்கள், போகிற போக்கில் மேல் மாடிக்கு செல்ல படிகளே இருக்கக் கூடாது என்கிற விதத்தில் இது போய் முடிய வாய்ப்புகள் இருக்கின்றன.



வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. மேடுகளும் பள்ளங்களும் நிறைந்த கரடு முரடான பாதை தான் அது. எப்போதும் இன்பம் இருந்தால் திகட்டிப் போகும் என்பதால் துன்பங்களும் சேர்ந்து அனுபவித்துத் தான் ஆக வேண்டும். இது தெரிந்த விஷயம் தானே? மேடு இருக்கும் போது மீசை முறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்து விட்டு, பள்ளம் வரும் போது தடுமாறிப் போகிறார்கள். இன்பம் வந்த சமயம் 'துன்ப வேளையில் இப்படி நடந்து கொள்ள வேண்டும்' என்று முன்னேற்பாடாக திட்டங்கள் தீட்டி எந்நாளும் பொன்னாளாய் களியாட்டம் போடுவதை விடுத்து, இன்பத்தில் கண்கள் மூடி அனுபவித்து துன்பத்தில் கண்களையே மூட முடியாமல் உழல்கிறார்கள்.



துன்பம் வரும்போது தான் எல்லோருக்கும் இறைவன் இருக்கும் உண்மையே தெரிய வருகிறது. கோவில் வாசலில் ஒரு அவசர என்.சி.சி. ஸ்டைல் சல்யூட் அடித்து சென்று கொண்டிருக்கிறவர்கள், கோவில் உள்ளே போய் சரியாக எண்ணிப் பார்த்து ஒன்பது தடவை சுற்றுகிறார்கள். எட்டு தடவை அல்லது பத்து தடவை என்றால் கிரகங்கள் ஏமாற்றி விடுகிற சாத்தியங்கள் இருக்கின்றன என்று சரியாக 'எண்ணி' கர்மம் 'துணிகிறார்கள்'!



பத்து வருடங்களாக ஒரே வீட்டில் இருக்கிறீர்கள். திடீரென்று ஒரு நாள் வாஸ்து சரியில்லை என்று காரணம் காட்டி வீட்டில் திருத்தங்கள் செய்கிறீர்கள். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காலம் அதே வீட்டில் நீங்கள் வசித்த போது உங்களுக்குக் கிடைக்கப் பெற்ற அருமையான பலன்களை ஒரு சில நிமிடங்களில் மறந்து விடுவது ஏன்? 'வருகிற பணம் எல்லாம் எங்கு போகிறது என்று தெரியாமல் போய்விடும். செலவு கையைக் கடிக்கும். அதற்குக் காரணம் வீட்டில் உள்ள ஒரு அறை' என்று சொல்லப் படும் போது, அதற்காக செலவு செய்யத் தயாராக இருக்கிறீர்கள். இருக்கிற செலவோடு இதுவும் சேர்ந்து அதிக செலவு என்று மனதிற்குத் தோன்றுவது கிடையாது. வருகிற பணம் எல்லாம் போய்விடுகிறது என்பதற்கு முதல் முக்கிய காரணம் சரியாகத் திட்டமிடவில்லை என்பது தானே? அப்படி ஏதாவது திருத்தம் செய்தால் தான் இந்த நிலை மாறும் என்றால் அதை செய்ய வேண்டியது வீட்டின் மேல் மாடியில் அல்ல, உங்கள் மேல் மாடியில் தான், அதாவது உங்கள் மூளையில்! வீட்டின் மூலைகளுக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.



"நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு உங்கள் பெயர் 'வ' அல்லது 'வா' அல்லது 'வி' என்கிற எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும்" என்று 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சியில் எழுத்து கொடுப்பது போல் சொல்வார்கள். 'பெயரை மாற்றுங்கள், அப்புறம் பாருங்கள், உங்கள் புகழ் ஓகோவென உயர்ந்து போகும்' என்பார்கள். நீங்கள் பிறந்து ஒரு இருபது இருபத்தைந்து வருடங்கள் ஒரு பெயருடன் வாழ்ந்த பிறகு, திடீரென்று ஒரு நாள் இந்த மாற்றம் தேவை தானா? பெயர் மாற்றத்தை விடவும் பெயருக்குள்ளேயே செய்யும் மாற்றங்கள்- ஆகா, பெயரில் இருக்கும் எழுத்துகளின் கூட்டுத் தொகையை அதிகமாக்க எழுத்துகளை அதிகமாக்குவார்கள். இதில் வேறு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண் கொடுத்து அதைக் கூட்டும் போது உங்கள் பிறந்த தேதிக்குத் தோதாக அது இருக்கிறதா என்று பார்க்க சொல்வார்கள்.



எழுத்தாளர்கள் வைத்துக் கொள்ளும் புனைப் பெயர் போல் ஒவ்வொருவருடைய இயற்பெயரும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. சில சமயம் நான் நினைப்பதுண்டு - இந்த புனைப் பெயர் என்கிற வார்த்தையில் முதல் எழுத்தை மாற்றி, 'பூனைப் பெயர்' என்று மாற்றினால் அந்த வார்த்தைக்கு இன்னும் மவுஸ் [எலி அல்ல!] அதிகரிக்குமோ என்று!



ந்திய வாஸ்து செய்து அலுத்து விட்டது என்று இப்போது சீனா, ஜப்பான் என்று மேலை நாட்டுப் பழக்க வழக்கங்களை இறக்குமதியும் செய்ய ஆரம்பித்து விட்டோம்.



ஏதோ வாயில் நுழையாத ஒரு பெயரை சொல்லிவிட்டு அதன்படி மீன் தொட்டியை வீட்டில் ஒரு மூலையில் வைத்தால் வீட்டில் உள்ள தீய சக்திகள் ஓடிப் போகும் என்று ஒருவர் குறிப்பிட்டார். வீட்டில் உள்ள தீயசக்தி என்பதைத் தன் மாமியாருக்கு உருவகப் படுத்திக் கொண்டாரோ என்னவோ, அந்த்ப் பெண்மணி உடனே மீன் தொட்டி வாங்கும் காரியத்தில் இறங்கிவிட்டார். ஏற்கனவே துண்டு விழும் பட்ஜெட்டில் இன்னும் ஒரு பத்து பதினைந்து துண்டுகள் விழ வைத்து மீன் தொட்டி வாங்கிவிடத் திட்டம் போட்டார்.



மேல்மாடியில் படிக்கட்டுகள் முடிகிற இடத்தில் இடப் பக்கம் இது வைக்கப் பட வேண்டும் என்று இடம் குறிக்கப் பட்டது. "வரவேற்பறையில் வைக்கலாமே?" என்று அவர் சந்தேகம் கேட்க, நம் வெளிநாட்டு வாஸ்து வல்லுநர் மறுத்து விட்டார். "அது தான் சரியான இடம். உங்கள் மனதிற்கு இடையூறு கொடுத்துக் கொண்டிருந்த எல்லா கவலைகளும் பறந்தோடி விடும். தீய சக்திகள் எல்லாம் படிக்கட்டுகளில் இறங்கி வீட்டை விட்டு மறைந்து விடும்" என்றெல்லாம் சொல்லப் போக, ஒரு குறிப்பிட்ட நாளின் மாலை நேரம் மீன் தொட்டி வீட்டில் வந்து இறங்கியது. மன்னிக்கவும், மேல் ஏறியது.



"ஆகா, என்ன அழகாக இருக்கிறது! இதில் தண்ணீர் ஊற்றி மீன்களையும் விட்டு விட்டால் இன்னும்அழகு கூடிப் போகும்!" என்று திருஷ்டி கழித்தார்.



தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தார்கள். அதற்கு நேரம் எல்லாம் பார்த்து ஸ்பெஷல் பூஜை எல்லாம் செய்தார்கள். பார்ப்பதற்கு ஒரு சின்ன தொட்டி போல் தெரிந்த அதில் இவ்வளவு தண்ணீர் ஊற்ற முடியுமா என்று வியக்க ஆரம்பித்தது குடும்பம். கிட்டத்தட்ட எழுபத்தைந்து லிட்டர் தண்ணீர் ஊற்றப் பட்டதும், தொட்டி நிரம்பிப் போனது.



தீய சக்திகள் இன்றைக்கே போய்விடுமா? அல்லது மீன்கள் தொட்டிக்குள் வந்த பிறகு தான் போகுமா என்று புதிய குழப்பத்துடன் எல்லோரும் தூங்கப் போனார்கள்.



இரவு இரண்டு மணி இருக்கும். டம்மென்று ஒரு பெரும் சத்தம். சலசலவென்று குற்றால அருவிநீர் மேலிருந்து கீழ் விழுவது போல் ஒலி! குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எழுந்து வந்து அந்த கோலாகலக் காட்சியைக் கண்டார்கள்.



மீன் தொட்டி விரிசல் கண்டு அதில் இருந்த தண்ணீர் எல்லாம் அதிபயங்கர வேகத்தில் படிகளில் இறங்கிக் கொண்டிருக்க, வாயடைத்துப் போய் நின்றிருந்தனர்!



விஷயத்தைக் கேள்விப்பட்டு அடுத்த நாள் நாங்கள் அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்தோம். எல்லோரும் கண்களின் கீழே புதிதாகக் கரு வளையங்கள் மாட்டியிருந்தார்கள்!



"எழுபது லிட்டர் தண்ணீர் இல்லையா? எல்லாம் சுத்தம் செய்து முடிக்க காலை ஏழு மணி ஆகி விட்டது! தூக்கமே இல்லை!" என்று வருத்தப் பட்டுக் கொண்டார் அந்தப் பெண்மணி.



"சும்மாவா? தீய சக்திகள் வெளியேறும் போது இது மாதிரி எல்லாம் ஏதாவது செய்து விட்டுத்தான் வெளியேறும். நான் ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன்!" என்று சமயம் தெரியாமல் நான் சொல்ல, என்னையே ஒரு தீயசக்தி போலப் பார்த்தார் அந்தப் பெண்மணி!
நன்றி: http://tamil.sify.com/

Wednesday, February 28, 2007

வெந்த புண்ணில் வேல்!

அவரவர்கள் பதிவு போட்டுப் போட்டு, போட்டுத் தாக்குகிறார்கள்.


இற்றைப் படுத்துகை உயரெல்லை 30 பற்றி!

[இந்த மாதிரி வார்த்தைகள் எங்கேயிருந்து கிடைக்கிறது, கொஞ்சம் சொல்லுங்கப்பா!]


நம் பதிவுகள் பக்கம் மக்கள் எட்டிப் பார்ப்பதே முதலில் கஷ்டம். டோண்டு என்று ஒவ்வொரு பதிவிலும் 'குறிச்சொல்' மாதிரி உபயோகிக்கவும் முடியாது!


தப்பித் தவறி எட்டிப் பார்த்தாங்கன்னா, ஒரு நாலு வரி நல்ல வார்த்தை சொல்வாங்களான்னா அதுவும் கிடையாது. வேறு வேறு பெயர்களில் பின்னூட்டங்களை நானே 'பின்னால்' ஊட்டிக் கொள்ளவும் தெரியாது!


அப்படியே பின்னூட்டம் வந்துட்டாலும், தமிழ் மணத்தில் தெரியவா போகுது? :-)))))))))

நானும் என்னென்னவோ செய்து பார்த்துட்டேன். உதவி கேட்டு மன்றத்திலும் முறையிட்டுப் பார்த்துட்டேன்.


இற்றைப் படுத்துகை [படுத்துதல்?] உயரெல்லை என் பதிவைப் பொறுத்த வரைக்கும் பூஜ்யம் [0] என்று நினைக்கிறேன்! ;-))