தலை மேல் பலன்
புல்லில் பனித்துளி
துளி: 5
சரியாக உச்சந் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து போனேன்.
இடி விழுந்திருந்தால் கூட அவ்வளவாக குழம்பிப் போய் இருக்க மாட்டேன்.
விழுந்தது பல்லி!
எங்கள் வீட்டில் எல்லா இடங்களிலும் பல்லிகள் இருந்தாலும் கூட, கழிப்பிடத்தில் எக்கச்சக்கமாக குவிந்திருக்கும். எப்போதும் உள்ளே நுழையும் போதே, இடது பக்க, வலது பக்க சுவர்களில் பலமாக தட்டி விட்டு செல்வது வழக்கமாகி விட்டது. எதற்கு வம்பு? அது எங்காவது விழுந்து வைக்கும். அப்புறம் பஞ்சாங்கத்தை எடுத்து அதற்கு பலன் பார்க்க வேண்டியிருக்கும்.
பலன் பார்க்கிற வரைக்கும் அம்மா விட மாட்டார்கள். அது நல்ல பலனாக இருந்து விட்டால் பரவாயில்லை. அப்படி இல்லை என்றால் அதற்கு தலை மீது கை வைத்து உட்கார்ந்து விடுவார்கள். கோபிச்செட்டிப் பாளையம் பக்கம் இருக்கும் ஒரு கோவிலுக்கு நேர்ந்து கொண்டு ஒரு இருபத்தைந்து காசு மஞ்சள் துணியில் கட்டி வைத்து விடுவார்கள்.
காலில் விழுந்தது என்றால் நோண்டி நோண்டி கேள்வி கேட்பார்கள். வலது காலா இடது காலா என்று அடுத்த கேள்வி. வலது கால் என்றால் முழங்காலுக்கு மேலா இல்லை கீழா என்பார்கள். 'போமா நீ' என்று அலுத்துக் கொண்டால், பலன் சரியானதாக இருக்க வேண்டும் இல்லையா என்று கடிந்து கொள்வார்கள்.
இந்த குழப்பங்களே வேண்டாம் என்று நான் அந்த முடிவுக்கு வந்தேன். கழிப்பறைக்குள் நுழையும் முன்னர் ஏதாவது பல்லி கண்ணில் படுகிறதா என்று பார்ப்பேன். ஏதாவது இளைப்பாறிக் கொண்டிருந்தால் அதன் பக்கத்தில் தட்டி விரட்டப் பார்ப்பேன். சில பல்லிகள் உடனே போய் விடும். சில 'அட போடா' என்கிற மாதிரி கொஞ்ச தூரம் நகர்ந்து விட்டு அங்கேயே 'அக்கடா' என்று இருக்கும். அதை விரட்டத் தட்டித் தட்டி, பல்லி போய் விடும். ஆனால் 'வந்து கொண்டிருந்தது'
நின்று போய் விடும்!
ஒரு நாள் வீறு கொண்டு எழுந்தேன். இருக்கிற ஒவ்வொரு பல்லியாகத் தேடி விளக்குமாற்றால் தள்ளித் தள்ளி வெளியேற்றினேன். அம்மா வீட்டில் இல்லை. ஒரு பல்லி கீழே விழும் போது, அதன் வால் துண்டிக்கப் பட்டு விட, அந்த வால் மட்டும் தனியே துடித்துத் துடித்து அடங்கிப் போனது. அதைப் பார்க்க கொஞ்சம் மனசு என்னவோ செய்தது. அடுத்த பிறப்பில் தப்பித் தவறி கூட பல்லியாகப் பிறந்து விடக்கூடாது என்று கடவுளிடம் சிறப்பு வேண்டுதல் செய்து கொண்டேன். ஏனெனில், இந்த பல்லி நிச்சயம் மனிதனாகப் பிறந்து பழி தீர்க்க வாய்ப்பிருக்கிறது.
மாலை அம்மா கண்டு பிடித்து விட்டார்கள். ஒரு பல்லி கூட இல்லையே என்று துருவித் துருவிக் கேட்க ஒப்புக் கொண்டு விட்டேன். அம்மா கூட அம்மம்மாவும் [பாட்டி!] அய்யய்யய்யய்யோ... என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். 'பல்லியை யாராவது வீட்டை விட்டு தள்ளுவார்களோ, அதுவும் விளக்குமாற்றால்?' என்று கடுங் கோபத்தில் திட்டினார்கள். உடனே அவசர அவசரமாக குளித்து விட்டு வந்து, நனைந்த உடையுடனேயே பூஜையறைக்குள் நுழைந்து, மஞ்சள் துணி எடுத்து இரண்டு இருபத்தைந்து காசுகளை முடிந்து வைத்தார்கள். என்னை மன்னித்து விடும் படி கடவுளிடம் வேண்டிக் கொண்டார்கள்.
ஒரு மாதம் ஓடியிருக்கும். கழிப்பறையில் திரும்ப பல்லிகள் அதிகரித்து விட்டன. நான் வெளியே அனுப்பிய பல்லிகள் தான் திரும்ப வந்திருக்குமோ என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. ஏனெனில் அங்கிருந்த ஒரு பல்லிக்கு வால் இல்லை! அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பக் பக் என்றது.
என் நண்பன் ஒருவன் மயிலிறகு இருந்தால் பல்லி பக்கம் கூட வராது என்றான். எல்லோரும் நோட்டு புத்தகத்தில் மயிலிறகு வைத்து குட்டி போடுகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க, நான் மயிலிறகை கழிப்பறையில் ஒரு இருட்டு சந்தில் மறைத்து வைத்திருந்தேன். பல்லி ஒன்று கூட குறையவில்லை. மாறாக ஒரு பல்லி அந்த மயிலிறகு மேலேயே படுத்திருந்ததைக் காண முடிந்தது.
வருடங்கள் உருண்டோடி விட்டன. ஊர் விட்டு ஊர் வந்து திருமணம் முடித்து புதிய வீட்டுக்கு வந்தாயிற்று. வீட்டில் அங்கே இங்கே என சில பல்லிகள் இருந்தன. பல்லிகள் குறைவாக இருக்கும் போதே விரட்டி விட்டால் நல்லது என்று தோன்றியது. மனைவியிடம் கேட்டேன். 'பாவங்க, அது பாட்டுக்கும் இருந்துட்டுப் போகட்டும்!' என்றாள்.
நான் கழிப்பறைக்குள் நுழையாமல் உள்ளே ஏதாவது பல்லிகள் தெரிகிறதா என்று உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். 'என்ன சரியா தண்ணி ஊத்தலையா?' என்று பின்னால் இருந்து மனைவியின் குரல். 'இல்லை, எனக்கு பல்லி என்றால் ஒருவித அலர்ஜி!' என்றேன். இடது பக்க, வலது பக்க சுவர்களில் தட்டி விட்டு உள்ளே நுழைந்து கொண்டு கதவைத் தாளிட்டுக் கொண்டேன்.
ஒரு முறை என் மனைவியும் அவளது நண்பியும் பேசிக் கொண்டிருந்தது காதில் லேசாக விழுந்தது.
'என்னது, அப்படி சத்தம்? டொப் டொப்னு யாரோ சுவத்துலே அடிக்கிற மாதிரி?'
'என்னோட கணவர் தான். டாய்லெட்லே இருக்கார். அவருக்கு அந்த மாதிரி தட்டினா தான் வரும்!'
சிலருக்கு சிகரெட், சிலருக்கு பீடி, எனக்கு இப்படி என்று அந்தத் தோழி நினைத்திருக்கக் கூடும். அன்று அவர் வீட்டை விட்டுப் போகும் வரை நான் கழிப்பறையை விட்டு வெளியே வரவில்லை!
நான் எதை நினைத்து பயந்திருந்தேனோ அது நடந்தே விட்டது. பல்லி ஒன்று சரியாக என் தலையில் விழுந்தே விட்டது. வேறு எந்த பாகமும் அதன் கண்களில் விழவில்லையா? சரியாக தலையிலா விழ வேண்டும்?
ஏற்கனவே நான் பஞ்சாங்கத்தில் எக்கச்சக்க தடவை பார்த்திருந்ததால் அது மனப்பாடமாகவே ஆகி விட்டிருந்தது. அதுவும் தலையில் விழுந்தால் மரணம் என்பது நன்றாக ஞாபகம் இருந்தது.
இருந்தாலும் மனது கேட்கவில்லை. 'அப்படியே' கழிவறையிலிருந்து வெளியேறி, வேகவேகமாக அறைக்கு வந்து, பஞ்சாங்கத்தைத் தேடி எடுத்து, பல்லி விழுந்தால் பலன்கள் பக்கத்தைப் புரட்டினேன். ஆமாம், மரணம் தான்! கை கால்கள் செயலிழந்தது போல் தோன்ற, சட்டென்று மூச்சு விடவே கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.
'என்னங்க..'
சட்டென்று பஞ்சாங்கத்தை பரண் மீது எறிந்தேன். கணவனின் மரணத்தை எந்தப் பெண் தான் சகித்துக் கொள்வாள்? அவளுக்கு இந்த விஷயம் தெரியாமல் இருப்பதே நல்லது என்று முடிவெடுத்தேன். அறைக்குள் நுழைந்த அவளைப் பார்த்து கஷ்டப்பட்டு புன்னகைத்தேன்.
'டாய்லெட்டுக்கு போனா தண்ணி கூட ஊத்தாம வர்றீங்க. ஏங்க இப்படி பண்றீங்க?' என்றாள்.
தண்ணி கூட ஊத்தாம என்றவுடன் தான் அது ஞாபகத்துக்கு வந்தது. 'ஃபோன் அடிச்சதுன்னு வந்தேன். அவசரத்துலே கவனிக்கலை, சாரிம்மா!' என்று சொல்லி விட்டு காலை அகலப் போட்டு நடந்தேன்.
'இதென்ன ஸ்டைல்?' என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
டாய்லெட்டுக்குள் நுழைந்ததும் திரும்ப மரணபயம் மனதில் வந்தமர்ந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அந்த பல்லி கண்ணில் படுகிறதா என்று தேடிப் பார்த்தேன். வலது பக்க சுவரின் மீது தான் இருந்தது. என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. 'இன்னைக்கு நீ செத்தே!' என்று சொல்கிற மாதிரி தோன்றியது.
இறந்தவுடன் என்ன ஆகும்? சட்டென்று ஒரு இருட்டு குகைக்குள் அதள பாதாளத்தில் விழுகிற மாதிரி தோன்றுமோ? பிடித்துக் கொள்வதற்குக் கையில் எதுவும் கிடைக்காமல் கீழே.. கீழே என்று கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்க.. எப்போது சித்ரகுப்தன் எதிரே வருவார்? நான் செய்த குற்றங்கள் எல்லாம் அவருடைய கம்ப்யூட்டரில் இருக்கும். 'கணக்கிடு' பொத்தானைத் தட்ட எல்லா குற்றங்களுக்கும் நான் செய்த சில நல்ல காரியங்களுக்கும் மதிப்பீடு செய்து சொர்க்கமா இல்லை நரகமா என்று தேர்ந்தெடுத்து அங்கிருக்கும் ப்ரிண்ட்டரில் ப்ரிண்ட் செய்து கொடுத்து விடும். குற்றங்கள் பகுதியில் 'ஒரு பல்லியின் வாலைத் துண்டித்து விட்டான்' என்று நிச்சயம் இருக்கும்!
'என்னங்க? இன்னும் வரலையா? ரெண்டாவது ஆட்டமா?' என்று வெளியே மனைவி 'க்ளுக்' என சிரிக்க, 'சிரி பெண்ணே, சிரி, சிரித்து முடித்து விடு. அழத் தயாராகி விடு. ஆட்டம் முடியப் போகிறது!' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.
*** *** ***
அலுவலகத்தில் நுழைந்ததும் நுழையாததுமாக மேனேஜர் என்னைத் தேடி வந்தார்.
'அந்த மன்த்லி ரிப்போர்ட்..' என்று இழுத்தார்.
'எஸ் சார், மதியத்துக்குள்ளே ரெடி பண்ணித் தந்திடுறேன்!' என்றேன். 'மதியம் வரைக்கும் நீ இருந்தா' என்று மனது சொன்ன மாதிரி இருந்தது.
'அடுத்த மாசத்தில் இருந்து கரெக்டா நான்காம் தேதிக்குள்ளே இந்த ரிப்போர்ட் ரெடியா இருக்கிற மாதிரி பார்த்துக்கங்க. ஓகே?' என்றார்.
'அடுத்த மாசம் நான் இருந்தாத் தானே?' என்றேன். நான் கொஞ்சம் உரக்க சொல்லி விட்டேனோ?
'வாட்?' என்றார். 'உள்ளே வாங்க' என்று சொல்லி அறையில் புகுந்து கொண்டார்.
நான் உள்ளே நுழையக் காத்திருந்தவர் என் முதுகைத் தட்டிக் கொடுத்து, 'உங்க ஆதங்கம் புரியுது. நான் உங்களுக்காக கிட்டத்தட்ட சண்டையே போட்டிருக்கிறேன். உங்களை ப்ரொமோட் பண்ணியிருக்கோம். இன்னைக்கு மதியம் உங்களுக்கு லெட்டர் கிடைக்கும். ஆர் யூ ஹாப்பி?' என்று சொல்லி கையைப் பிடித்து குலுக்கினார். 'அணைந்து போகும் மெழுகுத் திரி தான் நன்றாக சுடர் விட்டு எரியும்!' என்று ஏனோ தோன்றியது.
*** *** ***
மதியம் மூர்த்தி என்னையே பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில் வந்தமர்ந்து கொண்டான்.
'எனி ப்ராப்ளம்? வீட்டிலே ஏதாவது சண்டையா? காலையில் இருந்து ஒரு மாதிரியே இருக்கியே?' என்றான்.
'சரியாக உச்சந் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்து போனேன்................... சிரி பெண்ணே, சிரி, சிரித்து முடித்து விடு. அழத் தயாராகி விடு. ஆட்டம் முடியப் போகிறது!' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்' வரைக்கும் சொல்லி முடித்தேன். 'அலுவலகத்தில் நுழைந்ததும் நுழையாததுமாக..... நன்றாக சுடர் விட்டு எரியும்!' என்று ஏனோ தோன்றியது' மாத்திரம் சொல்லவில்லை!
'இதையெல்லாம் நீ நம்புறியா என்ன?' என்றான் மூர்த்தி. மனதுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.
'எனி ஹவ், உன் தலையில் பல்லி விழுந்திருக்கு. பார்க்கலாம், உனக்கு ஏதாவது ஆகுதா இல்லையான்னு. இப்ப தெரிஞ்சு போயிடும். பல்லி விழுந்தால் பலன்கள் உண்மையா இல்லையான்னு!' என்று சொல்லி விட்டுப் போனான்.
அடப் பாவி!
*** *** ***
மாலை நான் கொடுத்த பதவி உயர்வு கடிதத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் நடனமே ஆடி விட்டாள் மனைவி. பட்ஜெட்டில் விழுந்த துண்டுகள் இனி இல்லை என்று திரும்பத் திரும்ப சொன்னாள். 'இன்னைக்கு படத்துக்குப் போறோம். படம் முடிச்சுட்டு அப்படியே ஹோட்டலுக்கு போறோம்! ஓகே?' என்றாள் உரத்த குரலில்.
'நீ பார்க்கிற கடைசிப் படம்!' என்று மனசுக்குள் இருந்து பல்லி சொன்னது.
படம் எனக்கு ரொம்ப போரடித்தது. ஹோட்டலில் எதைப் பார்த்தாலும் வாந்தி வருகிற மாதிரி தோன்றியது. 'சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்!' என்றேன். 'ஏங்க, உடம்பு சரியில்லையா? வரும் போதே ஒரு மாதிரி இருந்தீங்க. ரொம்ப வேலையா? சொல்லியிருந்தா இன்னொரு நாள் படத்துக்கு வந்திருக்கலாம்!' என்றாள். இந்த அழகான அன்பான மனைவியை விட்டு இன்று நான் பிரியப் போகிறேனா என்று நினைத்துக் கொண்டேன்.
படுக்கையில் விழுந்ததும் உறங்கிப் போனேன். தலை மேல் மிருதுவான கரம் அமிர்தாஞ்சன் தடவியது. சொர்க்கம் என்று தோன்றியது. அப்படி என்றால் நான் நரகத்துக்கு வரவில்லை என்று சொல்லிக் கொண்டேன்.
திரைப் படம் ஓடிக் கொண்டிருக்க 'எனக்கு படம் பிடிக்கவில்லை' என்று எழுந்து நடக்க, சில்க் ஸ்மிதா நடனமாடிக் கொண்டு எதிர்க்க வர, 'ஓ, நீங்களும் சொர்க்கமா?' என்று நான் சொல்ல, படம் முடிந்து லைட் போட்டு விட்டார்கள். கண்கள் கூச எழுந்தேன். சூரிய வெளிச்சம் அறை முழுக்க ஜம்மென்று பரவியிருந்தது.
'இன்னைக்கு வேணா ஆபீசுக்கு லீவ் போட்டுடுங்க.' மனைவி சொல்ல மறுத்து விட்டு எழுந்தேன்.
கழிப்பறையில் நுழையும் முன் இடது பக்க, வலது பக்க சுவரை நான் இன்று ஏனோ தட்டவில்லை.
நன்றி: http://tamil.sify.com
10 பின்னூட்டங்கள்:
oh my god!
great one.. i loved it!! :)
நட்பு , எல்லோர்க்கும் இந்த அனுபவம் இருக்கும் போல ! விவரித்த விதமும் நடையும் அழகாக நகைச்சுவையாக உள்ளது. www.kavithaimathesu.blogspot.com
ஆஹா..... அருமை!
மரணம்.... நமக்கல்ல. அந்தப் பல்லிக்குன்னு என் அண்ணன் சொல்வார்!
ஆமாம்.....அதென்ன கடையிலே ஆளையே காணோம்?
Sir, today ennoda thalaiyila kuda palli vilundhadu en wife ku palan lam theriyadhu naanum sollala... bayandhute office poi irukka... tomorrow naan uyiroda irundha next comment poduren Inga so that palli vilura palan unmaiya poiya nu theriyunchidum...
மாதேஷ்,
என் பதிவுகளுக்கு ஒரு பின்னூட்டம் வருவதே பெரிய விஷயம்! இதிலே இன்னொரு பின்னூட்டம் வரும்னு எதிர் பார்ப்பது தவறு! எனக்கென்னவோ பல்லி 'ரொம்ப சரியாக' விழுந்திருக்கும் என்று தான் தோன்றுகிறது!
ஆனாலும், 2006 ஆம் வருடம் வந்த ஒரு பதிவுக்கு ஏழு வருடங்கள் கழித்து ஒரு பின்னூட்டம் வந்திருப்பதை நினைத்து மிக மகிழ்கிறேன். அந்த மகிழ்ச்சியைத் தந்தமைக்கு நன்றிகள்!!
அன்புடன்,
'சுபமூகா'
Thanks for your reply.. I am alive.. its bad time to lizard..
Tamil padhivugalukku nandri.. um sevai thodara valththukkal...
சொன்ன சொல் மாறாமல் திரும்ப வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள் ;-)
அன்புடன்,
'சுபமூகா'
Counting starts now (10pm). 2 hours left for lizard to kill me. Found your post after a quick search for what happens when a lizard fell on the head (in Tamil). It's freaking awesome feeling to spend the next two hours (or 24 hours?) in suspense.
நீங்க இப்ப உண்மையாவே உயிரோட தான் இருக்கீங்களா ப்ரோ...?!!
கன்பரம் பண்ணிக்குறதுக்குத்தான் கேட்டேன்..ஏன்னா..
என் தலையிலையும் இன்னைக்கி ஒரு கெவுளியே(பெரிய்ய்ய பல்லி) விழுந்துருச்சு...
சாதாரண பல்லி வுழுந்தாலே மரணம் னா..??!!.
'கெவுளிக்கு' அகால மரணமாத்தான் இருக்கும்னு...
நெட்ல தேட ஆரம்பிச்சிட்டேன்..அப்பதான் ஒங்க ப்ளாக் அ பாத்தேன்..
நீங்க ஒரு ரிப்ளை பண்ணிட்டா..
'இன்னுங் கொஞ்ச நாள் பாக்கி இருக்கு'னு
கொஞ்சம் மனச தேத்திக்குவேன்.
கடன் வாங்குனவன எல்லாம் வலை வீசி தேடிகிட்டிருக்கேன்..
ஒருவேள நீங்க உண்மையிலேயே உயிரோட இருந்து ரிப்ளை அனுப்புனீங்கனா கடங்காரங்களை இன்னுங் கொஞ்ச நாளைக்கு விட்டு வைக்கலாம்னு இருக்கேன்.
இல்லைனா சொர்க்கத்துல பல்லி கூட்டிட்டு வந்த க்ரூப்ல தான இருப்பீங்க..? அங்க வந்து மீட் பன்றேன்.
நீங்க உசுரோடதான் இருக்கனும்னு ப்ரார்த்திக்கிறேன்.
.
@Unknown
கொஞ்சம் லேட்டா பார்த்தேன்.
(LATE) இல்லை!
நீங்களும் இருப்பீர்கள் என்றே நம்புகிறேன்! :-)
அன்புடன்,
'சுபமூகா'
Post a Comment