Friday, September 01, 2006

முதல் வாசகி

புல்லில் பனித்துளி
துளி: 2

"ப்ச்" என்று சொல்லிவிட்டு கதையைத் திருப்பிக் கொடுத்தார் உஷா.

'தேறாது!' என்று அதற்கு அர்த்தம்.

கடவுளே என்று என் மனது உரக்கக் கூவியது உங்களுக்குக் கேட்டிருக்கலாம். எவ்வளவு
கஷ்டப்பட்டு இந்தக் கதையை எழுதினேன்! நேற்று இரவு இதை எழுதி முடிக்கையில் மணி
இரண்டைத் தாண்டியிருந்தது. தூக்கம் கண்களில் சிவப்பு பூசியிருந்தாலும் கூட, அதையும்
மீறிய ஒரு ஆத்ம திருப்தி மனதை நிறைத்திருந்தது.

நான் ஒவ்வொரு கதையை எழுதும் போதும் இதே மாதிரி தோன்றுவதுண்டு தான். ஆனாலும், இந்தக்
கதையில் எனக்கே தெரியாமல் ஒருவித அதிகப் படியான ஈர்ப்பு இருப்பதாகத் தோன்றியது.
ஒரு பெண்ணின் மனதில் தோன்றிய புரட்சிகரமான எண்ணத்தைப் பற்றிய கதை. கதையை
ஆரம்பிக்கும்போது இதை எப்படி முடிக்கப் போகிறேன் என்பதே மனதில் புரிபடாமல் இருந்தது.
எழுத ஆரம்பித்த பிறகு, கிடுகிடுவென்று பக்கங்கள் போன மாயம் தெரியவிலை!
என மனதில் ஒரு தேவதை வந்தமர்ந்து என் கைக்கு கட்டளை இட்டுக் கொண்டிருப்பது போல் வார்த்தைகள் தானாக தாளில் அரங்கேறிக் கொண்டிருந்தன.

அப்படிப் பட்ட அருமையான கதையை ஒரே ஒரு 'ப்ச்' தூக்கி எறிந்து காயப் படுத்தி விட்டது
போல் உணர்ந்தேன். 'அவசர அவசரமாக படித்து விட்டு முடிவை எடுத்து விட்டாரோ!' என்று
கூட நினைத்துக் கொண்டேன்.

என் முகத்தில் என் ஏமாற்றத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டேனோ என்னவோ..உஷா
"சாரி" என்றார்.

"என்னங்க கதை நல்லா இல்லியா?" என்றேன். எனது குரலின் மீது எனக்கே பரிதாபமாக
இருந்தது. 'கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க' என்று ஒருவித வியாபாரத் தனம் அதில்
எட்டிப் பார்த்தது.

உஷா தான் எனக்கு முதல் வாசகி. [பெயர் மாற்றப் பட்டிருக்கிறது, காரணம் - இந்தக்
கட்டுரையைப் படித்து முடிக்கும் போது தெரிய வரலாம்!]

எனது கதைகள் பத்திரிகைகளில் பவனி வர ஆரம்பித்திருக்கையில் கிடைத்த அரிய நட்பு
இது! என் கதை பத்திரிகையில் வருவதற்கு முன் படிக்கக் கூடிய அருமையான வாய்ப்பு
என்கிற மாதிரி மனதில் நிரம்ப உன்னதமாக நினைத்தபடி என் கதையை அனுப்பும் முன்னர்
அவருக்குக் கொடுத்தேன். அபரிமிதமான இறுமாப்பு மனதில் இருந்ததை ஒப்புக் கொள்ளத்
தான் வேண்டும்.

'ஐயோ, நான் தான் உங்க கதையை முதலில் படிக்கப் போகிறேனா?
அடடா, என் வீட்டில் இதை சொல்லியே ஆகணும்' என்றெல்லாம் வியாக்கியானம் செய்து
படிக்கப் போகிறார் என்று நினைக்கப் போக, அவர் அப்படியெல்லாம் செய்யவே இல்லை.

"நான் கதை ஒழுங்கா இருந்தாலே ரொம்ப விமர்சனம் செய்ற பேர்வழி. என் கிட்டே கதையைக்
கொடுக்காதீங்க. வெறுத்துப் போயிடுவீங்க!" என்று சிரித்த போது நொந்து போனேன்.

அப்புறம் தான் தெரிந்தது. உஷா கல்லூரியில் படிக்கும் போது சிறுகதைகள் எழுதியவர் என்பது.
கல்லூரி நடத்திய மாத இதழில் இவரது கதைகள் நிறைய வந்திருக்கிறதாம்.

"அதுக்கப்புறம் எழுதவில்லையா?" என்று கேட்க, "கல்யாணம் ஆயிடுச்சி, அப்புறம் குடும்பப்
பத்திரிகை நடத்திகிட்டிருக்கேன்!" என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்தார்.

விகடன், கல்கியில் கூட கதை வந்து விடும், இவரிடம் ஒரு கதைக்கு பாராட்டு என்பது மட்டும்
கிடைப்பது மிக அரிது என்றே சொல்ல வேண்டும். கதையைப் படித்து விட்டு அலசு அலசு என்று
அலசி விடுவார். ரொம்ப நுணுக்கமாக ஆய்ந்து சொன்னதாக அந்த கருத்துகள் இருக்கும்.
நான் கதை எழுதுவதை ரொம்ப நேசிக்க ஆரம்பித்தேன். இந்தக் கதைக்கு உஷா நல்ல மாதிரி
கருத்து சொல்ல வேண்டும் என்று மாய்ந்து மாய்ந்து என் மூளையை வருத்திக் கொள்ள ஆரம்பித்தேன்.
சொல்லப் போனால் உஷாவுடன் ஒரு விவாதத்தைத் ் தொடங்கினால் அது அடுத்த கதைக்கு ஒரு
நல்ல கருவைக் கொடுத்து விடும்.

மதிய உணவு இடைவேளை எப்போது வரும் என்று காத்திருந்து என் கதைப் பிரதியைக்
கொடுப்பேன். ஒரு ஸ்பூன் உணவு, ஒரு பாரா கதை, திரும்ப ஒரு ஸ்பூன் உணவு என்று என்
கதைக்கு உணவைத் தொட்டுக் கொள்வார். என்னுடைய ஒரே ஒரு கதைக்கு மட்டும் தான்
உணவை தூர வைத்து விட்டு முழுக் கதையையும் படித்து முடித்தார். "வாவ்!" என்று சொல்லி
விட்டு தலையை உதறிக் கொண்டார். இப்போது நினைத்துப் பார்க்கும் போதும் எனக்கு அது
இனிமையாகத் தெரிந்தது. அது ஒரு மர்மக் கதை! அந்த கதை நினைத்த மாதிரியே மிக
வரவேற்பைப் பெற்றது. அதற்கப்புறம் அந்த மாதிரி முழுக் கதையையும் ஒரே மூச்சில் படிக்க
வைக்க முடியவில்லை! அதில் எனக்கு வருத்தமே!

"என்ன பெரிய புதுமை செஞ்சுட்டதா நினைப்பா?"

நான் மௌனம் காத்தேன்.

"தாலியைக் கழட்டி வச்சுட்டா எல்லாம் முடிஞ்சு போயிடுமா? கண்ட கண்ட சினிமா பார்த்து
இந்த மாதிரி எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க போலிருக்கு. குடும்பம் அப்படீங்கிறது அவ்வளவு
சுலபமான விஷயம் இல்லை. அது ஒரு யாகம். வெறும் மோகம் இலலை. அதை சரியா தெரிஞ்சு
கிட்டா அது ஒரு யோகம்."

சொல்லியவர் எழுந்து கை கழுவ சென்று விட்டார். இது என்ன? யாகம், யோகம், மோகம் என்று!
உஷாவுக்கு திடீரென்று தாடி முளைத்து விட டி.ராஜேந்தர் மாதிரி கற்பனை செய்து பார்த்து
சிரித்துக் கொண்டேன்.

"என்னது? எதுக்கு சிரிச்சீங்க?" சட்டென்று திரும்பியவர் நான் சிரிப்பதை கவனித்து விட்டார்
போல!

"ஒண்ணுமில்லை, கதை தேர்ந்தெடுக்கப் படாததால் சந்தோஷத்தில் சிரிச்சுகிட்டிருக்கேன்!"
என்று சொல்லி சிரித்தேன்.

"எல்லா விஷயத்திலும் குற்றம் கண்டு பிடிக்கும் கணவன். சந்தேகக் கண் கொண்ட கணவன்,
அதுக்கு ஒரே தீர்வு - தாலியைக் கழட்டி வைச்சுட்டு வீட்டை விட்டு வெளியேறி விடு! அது
தானே நீங்க சொல்றது? வந்துட்டாயா அவ. அப்புறம் என்ன ஆகும்? அந்தக் கேள்விக்கு
விடை உங்க கிட்டே இருக்கா? கணவனைப் புறக்கணித்து விட்டு வருகிற ஒரு பெண்ணை
சமுதாயம் எந்த மாதிரி நடத்தும் அப்படீன்னு உங்களுக்கு தெரியுமா? அதை பகுதி இரண்டா
எழுதுவீங்களா?"

படபடவென்று பொரிந்து தள்ளிய அந்த உஷா எனக்கு இன்று தான் பரிச்சயம்!

"என்னோட திக் ஃப்ரண்ட் ஒருத்தி.. இவ்வளவுக்கும் அவங்களது லவ் மேரேஜ். அவங்க மாதிரி
ஜோடியைப் பார்த்ததில்லை அப்படீன்னு நாங்க எல்லோரும் மாய்ஞ்சு மாய்ஞ்சு பேசியிருக்கோம்.
அவனை விட்டு இவ இருந்ததில்லை. இவ எங்க போனாலும் பின்னாலேயே நாய் மாதிரி
திரிஞ்சான் அவன். கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆன பிறகு என்ன ஆச்சு?"

நான் அவரையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அடுத்த கதை தயாராகிக்
கொண்டிருக்கிறது!!

"எங்கேயிருந்து வந்ததோ அந்த சந்தேகம்? யார் என்ன சொன்னாங்களோ என்ன எழவோ
அவளைப் பார்க்கிற ஒவ்வொரு பார்வையிலும் ஒரு ஓரத்தில் சந்தேகம்! அவ சிரிச்சாலும்
சந்தேகம். அழுதாலும் சந்தேகம். அட, சும்மா இருந்தாலும் சந்தேகம்! அவ என்ன தாலியைக்
கழட்டி வச்சுட்டுக் கிளம்பிட்டாளா? இரண்டு வருடத்துக்கு முந்தைய கணவனை - அந்தக்
காதலனை மனசில் நினைச்சுகிட்டு மனசை சமாதானப் படுத்திக்கிறா! இவளும்
சாக்கடையில் இறங்கி சண்டை போடவா முடியும்? ஒருத்தன் சாக்கடை சகதியோட
இருக்கிறது போதும்! இல்லையா?"

நான் குறுக்கிட விரும்பவில்லை. மௌனமாக அவரையே பார்த்தபடி இருந்தேன்.

"உங்க கிட்டே சொல்லக்கூடாது தான். இருந்தாலும் சொல்றேன். ஒரு நாள் பஸ் நெரிசலில்
முந்தானை கொஞ்சம் விலகிடுச்சு. அவ அதை கவனிக்கலை. வீட்டு வாசலில் புருஷன்
காத்துகிட்டிருந்தார். இவளை இழுக்காத குறையா உள்ளே கூட்டிட்டு போய் முந்தானையை
சரி பண்ணி விட்டிருக்கார். 'நான் சரியா பார்க்கிறது இல்லையா என்ன? ஏன் இப்படி தொறந்து
போட்டுகிட்டு வர்றே?' அப்படீன்னு கேட்டிருக்கார்"

சொல்லி முடித்த போது அவர் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார். அவரது கோபம் அதில்
நன்கு தெரிந்தது.

"அவ என்ன தாலியைக் கழட்டவா முடியும்? ஒவ்வொரு தடவை பஸ்ஸில் இருந்து இறங்கும்
போதும் தன்னிச்சையா அவ கை முந்தானையை சரி பண்ணி விடும். அவ்வளவு தான் அவளால்
செய்ய முடியும்! ஏட்டு சுரைக்காயை அழகா புது மாதிரி காய்க்க எல்லாம் வைக்க முடியும் ஆனா
அது கறிக்கு உதவாது!" என்று சொல்லி புன்னகைத்தார்.

அடுத்த நாள் உஷா ஆபீஸ் வரவில்லை. அதற்கடுத்த நாளும்!

மூன்றாம் நாள் தலையில் கட்டுடன் வந்தார். வலது கண்ணில் வீக்கம்!

"ஐயோ என்ன இது?" என்று பதறிப் போனேன்.

"ஒரு சின்ன ஆக்ஸிடண்ட். ஸ்கூட்டரில் போகும் போது ஒரு நாய் குறுக்க வந்ததுன்னு அவர்
அவாய்ட் பண்ணப் போக கீழே விழுந்து.. நல்ல வேளை கண்ணுக்கு ஒண்ணும் ஆகலை!"
என்றார். சட்டென்று என் கண்களுக்குள் சுடுநீர் உணர்ந்தேன்.

மாலை கிளம்பும் போது நண்பன் சந்துரு வந்து அந்த செய்தியை சொன்னான்.

உஷாவுக்கு நேர்ந்தது விபத்தல்ல. அவளுக்கும் அவளது கணவனுக்கும் இடையே நடந்த
ஒரு வாக்குவாதத்தில் கணவன் கையில் கிடைத்த அரிவாள் மணையை எடுத்து தலையில்
அடிக்கப் போக அதனால் தான் அந்தக் கட்டு!

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது.

இன்று மாலையும் உஷா பேருந்தில் இருந்து இறங்கும் போது அவரது கை முந்தானையை
சரி செய்து கொள்ளும் என்று நினைத்துக் கொண்டேன்!

[தொடரும்]

நன்றி: http://tamil.sify.com

0 பின்னூட்டங்கள்: