கண்ட [கண்ட] கனவுகள்
புல்லில் பனித்துளி
துளி: 3
பிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாண்டமான ஒரு கட்டிடம். தலையை உய்ர்த்தி பார்த்துவிட்டு. பேண்ட்
பாக்கெட்டில் இருந்து அமிர்தாஞ்சன் பாட்டிலை எடுத்து விரல் பதித்து கழுத்தில் தடவிக்
கொள்கிறேன். கொஞ்சம் தலை சுற்றுகிற மாதிரி தோன்றுகிறது.
உள்ளே அழகான ஒரு ரிசப்ஷனிஸ்ட் நுனி நாக்கில் ஆங்கிலத்தை நடனமாட வைத்துக்
கொண்டிருக்க அவளை நெருங்கி ஏதோ கேட்கிறேன். அவள் கம்ப்யூட்டரைக் கேட்டு விட்டு,
'105ஆவது மாடி' என்கிறாள். லிஃப்ட் நோக்கி விரல் காட்டுகிறாள்.
என்னுடன் கிட்டத்தட்ட ஒரு ஐம்பது பேர் லிஃப்டுக்குள் புகுந்து கொள்கிறார்கள். நான் '105' என்று
பதிவு செய்ய, மற்றவர்களும் பதிவு செய்கிறார்கள். '25', '38', '62', '178' .....
லிஃப்ட் புறப்படவே ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகிவிட எல்லோரும் 'ச்' 'ச்' 'ச்' என்று வெறுப்பைப்
பறிமாறிக் கொள்கிறார்கள். விர்ரென்று புறப்படுகிற லிஃப்ட் பத்து பத்து மாடிகளையும்
அநாயாச வேகத்தில் சிற்சில விநாடிகளில் கடக்கிறது. தலைக்குள் பத்து புறாக்கள் பறக்கிற
மாதிரி தோன்றுகிறது.
105ஆவது மாடியில் இறங்கும் போதே அங்கு நிலவிய கூச்சல் குழப்பங்களைப் பார்த்து நெற்றியை
சுருக்கினேன். 'சீக்கிரம்.. சீக்கிரம்..' என்று எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். நான்
வரவேற்பில் பார்த்த அதே ரிசப்ஷனிஸ்ட் எதிரில் ஓடி வருகிறாள். அவளது முகத்தில்
முழுக்க பயம் நிரம்பியிருந்தாலும், அவள் ஓடி வரும் போது லயத்துடன் நடனமாடும் முன்
அழகுகளைத் தான் நான் பார்த்தேன்!
'மிஸ்டர் கணேஷ், உங்களைத் தான் தேடி வந்தேன். ஒரு விமானம் இந்த கட்டிடத்தைத்
தகர்ப்பதற்காக வந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் தப்பி ஓடுங்கள்' என்று சொல்லி விட்டு
என் பதிலைக் கூட எதிர்பாராமல் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பிக்கிறாள்.
அந்த வெண்மையான கரம்.. அதன் மென்மை என்னைக் கிரங்கடிக்கிறது. கண் மண் தெரியாமல்
ஓடுகிறேன். எங்கே படிகள் என்று தேடுகிறோம். 'படிகளுக்கு செல்லும் வழி' என்கிற பலகை
கண்களில் படுகிறது. ஆனால் அது கீழே விழுந்து கிடக்கிறது! 'ஐயோ!' என்று கத்தி விட்டு
நாங்களே ஒவ்வொரு பக்கமும் ஓடித் தேடுகிறோம். 'ஆ, அதோ, படிகள்..' என்று குதூகலித்து
படிகளில் இறங்க ஆரம்பிக்கிறோம்.
சட்டென்று எல்லா விளக்குகளும் அணைந்து விட, இருட்டு! முன்னே என்ன இருக்கிறது என்றே
தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. முழுக்க மௌனம்.. 'எங்கே போனார்கள் இங்கு
இருந்தவர்கள்?' என்று நான் கேட்க, 'எல்லோரும் இறந்து விட்டார்கள். நாம் இருவர் தான்
இங்கிருந்து தப்பி இருக்கிறோம்' என்று உரக்கக் கூவுகிறாள்.
படிகள் முடியாமல் போய்க் கொண்டேயிருக்கின்றன. 104, 103, 102, 101, 100.. என
அறிவிப்புப் பலகைகளைப் பார்த்த போது ஆயாசமாக இருந்தது. இன்னும் 99 மாடிகள்
இறங்க வேண்டுமா?
மேலே பார்த்த போது உறைந்து போனேன். இடிந்து போன கட்டிடம் ஒரு பெரிய சிமெண்ட்
குவியலாக என்னைக் குறிபார்த்து வந்து கொண்டிருக்க, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தேன்.
அந்த ரிசப்ஷனிஸ்ட் திடீரென்று வீல் என்று கத்த, 'என்ன? என்ன?' என்றேன். என் கையிலிருந்து
அவளது கை வேகமாக விலகி போனது. நான் அடுத்த அடி எடுத்து வைக்க காலை எடுக்கும்
போது தான் கவனித்தேன். அடுத்த படியே இல்லை. ஆனால் நான் மிக தாமதமாகத் தான்
அதை கவனித்தேன். என் கால் அடுத்த படி எங்கே என்று தேடி நகர..கீழே.. கீழே.. என்று
இலக்கேயில்லாமல் என் உடல் பறக்க ஆரம்பிக்க..
திடுக்கிட்டு கண் விழிக்கிறேன்.
இது அடிக்கடி நான் காண்கிற கனவு! அமெரிக்காவில் நடந்த அந்தத் தாக்குதலுக்கு முன்னரே
எனக்கு இந்த கனவு வந்திருக்கிறது என்று சொன்னால் 'ஓவர் அலட்டல்!' என்று நீங்கள் சொல்ல
வாய்ப்பிருக்கிறது. மாதம் ஒருமுறையோ இல்லை இரு முறையோ ஒரு பத்திரிகை மாதிரி இந்தக்
கனவு எனக்கு வரும். ரிசப்ஷனிஸ்ட் முகம் மற்றும் 'அங்க' அடையாளங்கள் சிறிது மாறியிருக்கும்.
அவ்வளவே! மற்றபடி அதே 98வது மாடியில் தான் படி இல்லாமல் கீழே விழ ஆரம்பிப்பேன்.
'சும்மா படுக்க மாட்டீங்களே, காலாலே படுக்கையை உதை உதைன்னு உதைச்சு என்
தூக்கத்தையும் கெடுத்துகிட்டு, சே!' என்று அதே ரிசப்ஷனிஸ்ட் குரல் கேட்கும். எழுந்து
உட்கார்ந்தால் மனைவி! 'நீயா? சாரி!' என்று சொல்லிவிட்டு ஒரு முறை படுத்து விட அடுத்த
நாள் வீடு இரண்டு பட்டது!
தேர்வறை! விடைத் தாளில் பெயர் மற்றும் பதிவு எண் எழுதி விட்டுக் காத்திருக்க, கேள்வித்
தாள் கொடுக்கப் படுகிறது. முதல் கேள்வியைப் படிக்க திக்! ஐயோ! இரண்டாவது கேள்வியைப்
படிக்க ஐயையோ! மூன்றாவது கேள்விக்கும் பதில் தெரியவில்லை. கடவுளே,
உனக்கே இது நியாயமாக இருக்கிறதா? என்று மேல் நோக்கி கை நீட்ட, கண்காணிப்பாளர்
கிட்டே வந்து 'என்ன? அதுக்குள்ளே அடிஷனல் ஷீட் வேணுமா?' என்று கேட்பார்.
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து விழிப்பேன். கல்லூரி முடித்து இத்தனை வருடங்கள்
ஆனாலும் இந்தக் கனவு மட்டும் என்றும் மார்க்கண்டேயனாக வந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கனவு தந்த பயத்தால் தான் நான் மேல் படிப்புக்கே போகவில்லை!
அதிகாலைப் பொழுதில் வரக்கூடிய பிரசித்தமான கனவு - இயற்கை அழைப்பை உடனடியாக
ஏற்க முடியாமல் அங்கு இங்கு என்று இடம் தேடி அலையும் கனவு. நான் சிறு வயதில்
தஞ்சை மாவட்டத்தின் இண்டு இடுக்கு கிராமங்களில் இருந்த போது காலைக் கடன்களை
முடிக்க ஆற்றங்கரைகளை நாட வேண்டியிருந்தது. ஆற்றின் இருபுறமும் பெரிய பெரிய செடிகள்
நிழல்களுடன் காத்திருக்கும். குளுகுளு வசதி செய்யப்பட்ட இயற்கையான கழிவிடங்கள்!
அதுவும் இலவசமாக! ஒரே ஒரு குறை.. அடிக்கடி பெண்கள் வந்து விடுவார்கள். அப்போது
மாத்திரம் எழுந்து நின்று பக்கத்து செடியில் இருக்கும் இலையைப் பறித்து மிஸ்டர் பீன் மாதிரி
அதை ஆராய வேண்டியிருக்கும். அந்த பசுமை நினைவுகள் விலகாமல் இன்னும் என் மனதில்
இருப்பதால் தான் அந்த கனவு அடிக்கடி வருகிறது என்று நினைத்துக் கொள்வேன்.
சில சமயம் இந்த கனவு நீடிக்கப் பட்டு விடும். அந்த சமயம் எல்லாம் நான் ஒரு மணி நேரம்
தாமதமாக எழ வேண்டியிருக்கும். இடம் தேடி அலையும் கனவு நிரம்ப சுவாரசியமாக
இரண்டாம் பாகத்துக்கு முன்னேறும். தேடித் தேடி இடம் கிடைக்காமல் பெரிய ஒரு
காட்டுக்கு நான் வந்து விடுவேன். அடர்ந்த காடு. எக்கச்சக்க மரங்கள் கூடி நின்று
சூரிய வெளிச்சமே உள்ளே வரவிடாதபடி இருள வைத்திருக்கும். கடனே என்று கடனை
முடித்து விட்டு எழும் போது, எதிர்க்க இரண்டு கண்கள். பளிச்சென்று மின்னலடிக்கும்
கண்கள். அந்த கண்கள் உறுமும் போது தான் அது புலி என்று தெரிந்து தலை தெறிக்க
ஓட ஆரம்பிப்பேன். நேராக ஓடினால் பிடித்து விடும் என்று கோணல் மாணலாக எல்லாம்
ஓடுவேன். திரும்பிப் பார்த்தால் சிங்கம் வந்து கொண்டிருக்கும். இன்னும் விரைவாக
ஓடுவேன். பூமி அதிர்கிற மாதிரி தெரிய திரும்பிப் பார்த்தால் யானை வந்து கொண்டிருக்கும்.
அதற்குள் சிங்கார சென்னைக்குள் வந்து விட்டிருப்பேன். இப்போது திரும்பிப் பார்த்தால்
ஒரு எருமை துரத்திக் கொண்டு வரும். இதோ எங்கள் தெரு வந்து விட்டது. திரும்பிப்
பார்த்தால் ஒரு நாய் துரத்திக் கொண்டிருக்கும். ஆனால் அது வெற்றி பெற்று விடும். என்
கிட்டே வந்து விட்ட அந்த நாய் என் மீது பாய்ந்து என் கழுத்தைக் குறி வைத்துக் கடிக்க ..
திடுக்கிட்டு எழுந்து கழுத்தில் இருந்து அந்த நாயைத் தள்ளி விட, ஒரு எறும்பு வீல் வீல்
என்று கத்திக் கொண்டு கழுத்திலிருந்து விழும்!
கிழக்கே போகும் ரயில் படம் திரையிட்டு ஒரு வாரம் ஆகியிருந்தது. பெரிய க்யூ! இன்று
எப்படியும் படம் பார்த்தே விட வேண்டும் என்று இருக்கிற கடவுள்களை எல்லாம்
வேண்டியபடி காத்திருந்தோம். க்யூவில் எத்தனை பேர் நம் முன் இருக்கிறார்கள் என்று
கணக்கு எல்லாம் போட்டுப் பார்த்து டிக்கெட் கிடைக்குமா இல்லையா என்று விவாதித்துக்
கொண்டிருந்தோம். க்யூ நகர்ந்தது. எங்களுக்கு பின்னால் ஒரு நூறு பேராவது இருப்பார்கள்.
அதில் ஒரு விபரீத திருப்தி!
கவுண்ட்டரை நெருங்க நெருங்க மாரடைப்பே வந்து விடுமோ என்கிற மாதிரி டென்ஷன்!
இதோ இன்னும் ஐந்தே பேர் தான்! நான்கு தான். மூன்று, அட, இரண்டு, ஆ, ஒன்று. நான்
டிக்கெட்டுக்காக பணத்தை நீட்ட கவுண்ட்டர் மூடப்பட்டது! எப்படி இருக்கும்?! கண்களில்
கண்ணீர் திரண்டு விட்டது. நண்பர்கள் தான் சமாதானப் படுத்தி கூட்டி வந்தார்கள்.
'நான் படம் பார்த்தே ஆக வேண்டும்' என்று நிரம்பப் பிடிவாதம் பிடித்தேன். அது தான் அந்த நாளின்
கடைசி காட்சி. இன்னும் ஒருவாரம் காத்திருக்க வேண்டும் - சனி, ஞாயிறு வர! மற்ற நாட்களில்
கல்லூரிக்கு மட்டம் தட்டி எல்லாம் படம் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை! ப்ளாக்கில்
வாங்கலாம் என்று நண்பர்கள் திட்டம் தீட்டினார்கள். யானை விலை குதிரை விலை
சொன்னதால் நண்பர்கள் தயங்கினார்கள். ஓரிரு விநாடிகள் தயக்கத்துக்கு பின் பர்ஸை
எடுத்து விட்டார்கள். 'இன்னும் ஒருவாரம் காத்திருக்க முடியாதுடா' என்று சமாதானம்
சொன்னார்கள். அவன் நீட்டிய அந்த டிக்கெட்டைப் பார்த்தேன். நட்ட நடுவில் அப்பாவின்
முகம் கறுப்பு வெள்ளையில் தெரிந்தது! மறுத்து விட்டு நடந்தேன். பின்னால் வந்த நண்பர்கள்
திட்டிக் கொண்டே வந்தார்கள்.
இரவு படுக்கப் போகும் போது திரும்ப கிழக்கே போகும் ரயில் 'கூ..' என்றது. வருத்தத்துடன்
போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டேன்.
ஐந்து நிமிடங்கள் சென்றது. ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிங்.... என்று மணியடித்தது. வெண்திரையில்
கோடுகள் அங்கும் இங்கும் தோன்றி மறைய.. தூரத்து மலையில் சூரியன் உதித்துக்
கொண்டிருந்தது. அப்படியே காட்சி நகர.. இருப்புப் பாதை ஓட ஆரம்பித்தது. வேகம்
மெல்ல குறைந்து, அங்கே எதிர்க்க ஒரு ரயிலைக் காண முடிந்தது.
இஞ்சினில் தொடங்கி ஒவ்வொரு பெட்டியாக காண முடிகிறது. கட்டித் தொங்க விடப்பட்ட
தண்டவாளத் துண்டு.. டங் டங் டங் என்று அதில் அடிக்கவும்.. 'கூ..' என்று கூவிப் புறப்படுகிறது
ரயில். கிழக்கு நோக்கி புறப்படுகிறது ரயில்! சட்டென்று காட்சி உறைந்து போக..
'கிழக்கே போகும் ரயில்' என்று டைட்டில் கார்டு போடப் படுகிறது. நான் என்னை மறந்து
கை தட்டுகிறேன்.
ஒவ்வொரு பேராக போடப் பட்டு கடைசியில் பாரதிராஜா பெயர் வரும் போது விசில் அடிக்கிறேன்.
ஒவ்வொரு காட்சியாக படம் அழகாக நகர்கிறது. சிரிப்பு காட்சிகளில் விழுந்து விழுந்து
சிரிக்கிறேன். நாயகன் நாயகி பிரிகிற காட்சிகளில் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல்
தடுமாறுகிறேன்.
படத்தில் இடைவேளை கார்டு வந்த போது, எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்து திரும்பப்
படுத்துக் கொண்டேன். படம் தொடர்ந்தது! கடைசி காட்சியில் படம் முடிகிற போது கொடுக்கும்
அதே இசை ஒலிக்க 'வணக்கம்' கார்டும் பார்க்கிறேன்.
காலை எழுந்ததும் மனது முழுக்க ரம்மியமாக இருந்தது. ஒரு காசு செலவில்லாமல் முழுப்
படமும் பார்த்து விட்டேன். இதை எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்று துடித்தேன்.
இளவழகன் பல் துலக்கிக் கொண்டிருந்தவன் வாயைக் கொப்பளித்து விட்டு 'என்னடா, ராத்திரி
முழுக்க சிரிச்சுகிட்டே இருந்தே? ஏதாவது கனவா?' என்றான். ஆகா!
ஆத்மராம் 'என்ன உன் முகத்திலே கறை? அழுதியா என்ன?' என்றான். ஆகா, ஆகா!
கிட்டத் தட்ட இரண்டு மணி நேரம் அழகாக அந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன்.
நண்பர்களுக்கு அதை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டு, நான் பார்த்த காட்சிகளை
திரும்ப நினைத்துப் பார்த்தேன். அநியாயத்துக்கு ஒரு காட்சி கூட ஞாபகத்துக்கு வரவில்லை!
ஆனாலும் ஒரு அருமையான திரைக் கதையுடன் கூடிய ஒரு படத்தைப் பார்த்த திருப்தி
கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஒரே ஒரு குறை - கதை, திரைக்கதை, வசனம்,
இசை, இயக்கம் - சுபமூகா என்று ஒரு கூடுதல் கார்ட் போட்டிருக்கலாம்!
நன்றி: http://tamil.sify.com
0 பின்னூட்டங்கள்:
Post a Comment