Monday, February 19, 2007

ஏலேலோ ஐலசா [1]

என் கேள்விக்கென்ன பதில்?
நமீசின்ஷ்ரேத்ரிஷா!
முதல் காதல் தோல்வி

எக்ஸ்ட்ரா தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு

பெங்களூரில் சுமார் இரண்டாண்டு காலம் நாங்கள் நடத்தி வந்த புதுப்புனல் இதழின் கேள்வி-பதில் பகுதி நிரம்ப வரவேற்பைப் பெற்றிருந்தது. வலைப்பதிவுகளில் இந்த மாதிரி கேள்வி-பதில் ஆரம்பித்தால் என்ன என்று சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு உறுப்பினர்கள் ஒரு கேள்வியை [!] முன் வைத்தார்கள். எவ்வளவு வரவேற்பு இருக்கும் என்கிற ஐயத்தில் பதில் சொல்ல சில விநாடிகள் யோசித்தேன்.

உறுப்பினர்கள் யோசிக்காமல் உடனே கேள்விகளைத் துண்டு சீட்டில் கிறுக்கிக் கொடுத்தனர். அவற்றில் சில கேள்விகளுக்கு என் பதில்களுடன் ஆரம்பித்து விட்டேன் - ஏலேலோ ஐலசா!

வலைப் பதிவுகளில் உங்களை மிகக் கவர்ந்த வலைப் பதிவு எது? [ஒன்றே ஒன்று தான் சொல்ல வேண்டும்!]

[பாவிகளா எவ்வளவு நாளா என்னை மாட்டி விடணும்னு காத்திருக்கிறீர்கள்?!]
வலைப் பதிவுகளில் கவர்ந்த வலைப் பதிவுகள் ஏராளம். குழந்தை மாதிரி ஒன்றோடு எல்லாம் நிறுத்திக் கொள்ள முடியாது!
என்னை மிக மிக மிகக் கவர்ந்த வலைப் பதிவு: சுபமூகா பக்கங்கள்!

நாய், எலி, கரப்பான் பூச்சி எதற்கு பயப் படுவீர்கள்?

தெருவில் நடக்கும் போது நாய். கழிப்பறையில் கரப்பான் பூச்சி. இரவு தூங்கும் போது எலி![காலையில் முதல் வேலையாக சிகை அலங்காரக் கடைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தபடி படுத்துக் கொண்டேன். காலையில் எழுந்து கண்ணாடியைப் பார்க்க தூக்கி வாரிப் போட்டது. கடைக்கு செல்லாமலேயே என் சிகை அலங்காரம் 'முடி'ந்து விட்டிருந்தது! எங்கள் வீட்டு எலி முடியைக் கூட விட்டு வைக்காது!]

உங்கள் முதல் காதல் தோல்வியைப் பற்றி சிறு குறிப்பு வரைக.

பச்சைக் கிளி போல் பச்சை கலர் தாவணி போட்டு சிக்கென்று இருந்தாள் அவள். அவளைப் பார்த்ததுமே ஒரு கிக்! பார்த்த இடம்: மருத்துவ மனை! மனசுக்குள்ளேயே அவளுடன் ஒரு நடனம் ஆடி, கடலோரம் வாங்கிய காற்று என்று ஒரு பாட்டும் பாடி.. எம்.ஜி.ஆர் பாணியில் கிழிந்த தாவணியைக் கொண்டு வந்து தாவணி சுற்றாத அவள் மார்பின் மீது அதைப் போர்த்தி விடாதது ஒன்று தான் பாக்கி! பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, முடியாமல், அவளை நோக்கி ஒரு கண் சிமிட்டினேன்! அவ்வளவு தான். "ஐயோ, இந்தப் பையன் என்னைப் பார்த்து கண்ணடிக்குது!" என்று உரக்கக் கத்தினாளே பார்க்க வேண்டும். பறந்து விட்டேன்! என் பதினோரு வயது ஆட்டோகிராப் இது!

உங்கள் காரில் உங்களுடன் உங்கள் தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். காரில் இடம் இல்லை. போகும் வழியில் த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா அனைவரும் ஒரு சேர நின்று லிப்ட் கேட்டால் யாரை இறக்கி விட்டு விட்டு யாருக்கு லிப்ட் கொடுப்பீர்கள்?

த்ரிஷாவை எனக்குப் பிடிக்கும் என்பதை விட என் மனைவி, மகளுக்குப் பிடிக்கும் என்பதால், வேண்டுமானால் என்னையே இறக்கிவிட்டுவிட்டு அவரை ஏற்றிக் கொண்டு விடுவார்கள்.
அசின் - அவருக்கு லிப்ட் கொடுக்கவில்லை என்றால் it is a sin!
ஷ்ரேயா - இவருக்குக் கொடுக்கவில்லை என்றால் பெய்யும் 'மழை'யும் நின்று விடாதா?
நமீதா - யார் தான் கொடுக்க மாட்டார்கள்?! நான் கொடுக்கவில்லை எனில், கடவுளின் சாபம் 'நம் மீதா' இல்லையா சொல்லுங்கள்.

அது சரி, என்னை என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? குடும்பத்தினரில் ஒருவரை இறக்கிவிட்டு, யாரையாவது ஏற்றிக் கொள்ளும் அளவுக்கு நான் இறங்கி விட மாட்டேன். குடும்பத்தினர் எல்லோரையும் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு, திரும்ப வந்து எல்லோரையும் ஏற்றிக் கொண்டு செல்வேனாக்கும்!
நீங்களும் சுவாரசியமான கேள்விகளை அனுப்பலாம். பின்னூட்டத்தில் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.

3 பின்னூட்டங்கள்:

said...

ஏன் இன்னும் ஒரு பின்னூட்டம்கூட வரலை? இதான் என்னோட கேள்வி?

said...

பின்னூட்டங்கள் வெளியிடப் படவில்லை. சுவாரசியமான கேள்விகள் ஏலேலோ ஐலசா பகுதியில்
வெளியிடப்படும்.

said...

Test please ignore