சிறு மீன் போதும்!
புல்லில் பனித் துளி
துளி: 12
கதவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருங்கள். கதவில் சிறு அசைவு தெரிந்தாலும் கவனியுங்கள்.
அதிர்ஷ்டம் எப்போது கதவைத் தட்டும் என்பது புரிபடாத ஒரு நிகழ்வு. கதவைத் தட்டிய அடுத்தவிநாடியே அந்தப் பரிசை நிராகரிக்காமல் பெற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றிப் படிகளைக் கடந்தவர்களின் சரித்திரத்தைப் படிக்கும் போது இந்த உண்மை புரிபடும்.
பெரிய மீன் வரட்டும் என்று ஒற்றைக்கால் கொக்காக இருக்காமல் கிடைத்த சிறிய மீனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, பட்டினியில் கீழே விழாமல் தற்காத்துக் கொள்ளுங்கள்.
கிடைக்கிற எந்த சிறிய வாய்ப்பையும் தவற விடாமல் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்கிற இந்த வித்தையை எனக்குக் கற்றுத் தந்தவர் எனது தூரத்து உறவினர் ஒருவர். சென்னையில் நடந்த ஒரு திருமணத்தில் எனக்கு பரிச்சயமான அவர் முதல் சந்திப்பிலேயே கவர்ந்து விட்டார்.
நான் அப்போது தான் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதி விட்டு முடிவுக்காகக் காத்திருந்தேன். சென்னையில் பிரபல தொழிலகம் ஒன்றில் வேலை காலி இருப்பதாக அன்றைய செய்தித் தாளில் விளம்பரம் வெளியாகியிருந்தது. பட்டதாரிகளுக்கு முதலிடம். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப் படும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
உடனே என்னை அந்த வேலைக்கு விண்ணப்பிக்க சொன்னார். நான் திருதிருவென்று விழித்தேன் என்றே சொல்ல வேண்டும். அந்த வேலைக்கான தகுதி ஒன்றுமே எனக்கு இல்லாத போது எப்படி அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தயங்கினேன்.
"இன்னும் ரிஸல்ட்டே வரலை மாமா!" என்று இழுத்தேன்.
"நல்லா எழுதியிருக்கே தானே?" என்றார்.
"ம்.." என்றேன்.
"பின்னே? நல்ல மார்க் வரப் போகுது. நீ வேலையில் சேரப் போறே!" என்றார் விடாப்பிடியாக.
இந்தக் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என் தந்தை நடுவில் புகுந்தார்.
"உங்களுக்கு யாரையாவது அந்த ஃபேக்டரியில் தெரியுமா என்ன?" என்று தன் சந்தேகத்தை எடுத்து வைத்தார்.
"என்ன நீங்க? உங்க மகனுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும். எந்த ரெக்கமெண்டேஷனும் தேவையில்லை!" என்று மேசையில் அடிக்காத குறையாக சொன்னார்.
"நம்பிக்கை வேணும். இந்தக் காலப் பசங்களுக்கு அது இல்லை. நம்பிக்கை இருந்தா கண்டிப்பா சாதிக்கலாம்!"
சொன்னவர் அப்படியே கழன்று கொள்ளவில்லை. தானே போய் எனக்காக விண்ணப்பத் தாளை தட்டச்சு செய்து கொண்டு வந்து, என்னிடம் ஒரே ஒரு கையொப்பம் மட்டும் வாங்கிக் கொண்டு, தானே தபால் தலை ஒட்டி, தானே போய் தபால் பெட்டியிலும் போட்டுவிட்டு வந்தார்.
"எழுதி வச்சுக்க. முதல் மாத சம்பளத்தில் எனக்கு ஸ்வீட் வாங்கிக் கொடுக்கணும். ஓகே?"
எனக்கு நம்பிக்கையின் முதல் துளியை இரத்தத்தில் சேர்த்த நிகழ்ச்சி இது. சினிமாவில் நடக்கிற மாதிரி எல்லாம் உடனே வேலை எல்லாம் கிடைக்கவில்லை தான். ஆனால் அருமையான உற்சாக டானிக் குடிக்கக் கிடைத்து விட்டது.
அந்த நம்பிக்கை தான் எனக்கு முதல் வேலையை வாங்கிக் கொடுத்தது. அக்கவுண்ட்ஸ் அஸிஸ்டண்ட் வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன்.
அக்கவுண்ட்ஸுக்கும் பி.எஸ்.சி பட்டதாரியான எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று விட்டிருக்கலாம் தான்.
விண்ணப்பித்துப் பார்க்கலாம் என்று முயற்சித்தேன்.
நேர்முகத் தேர்வில் முக்கியமான தகுதியே இல்லை என்று உதடு பிதுக்கப் பட்ட போது, என் மதிப்பெண்கள் மற்றும் மற்ற தகுதிகளை எடுத்துச் சொல்லி அந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டு விட்டேன். எனக்கே எனக்காக ஒரு புதிய வேலையையே உருவாக்கி விட்டார் அந்தப் புண்ணியவான்.
அப்படித்தான் எனக்கு அதிர்ஷ்டம் மோதிரம் போட்டுக் கொண்டிருந்த விரலால் கதவைத் தட்டியது.
அன்று கிடைத்த சின்ன மீன் என்னை மயங்க விடாமல் காப்பாற்றி பெரிய மீன் கிடைத்த போதுகெட்டியாக அதைப் பற்றிக் கொள்ளத் தெம்பையும் அளித்தது.
திருச்சி புனித வளனார் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டம். அதில் பங்கு பெற வாய்ப்பு கிடைப்பதே ஒரு பெரிய பாக்கியம். சல்லடை போட்டுத் தேடி ஆட்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அங்கிருந்த விடுதியில் மற்றும் என்.எஸ்.எஸ் முகாம்களில் நான் நாடகங்களில் நடித்திருந்ததால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவை நாடகம். பெண் வேடம்!
மீசையை இழக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு வருத்தத்தைத் தவிர மற்றபடி குதிக்காத குறை தான்.
முதல் நாள் ஒத்திகைக்கு போன போது எனக்கு வருத்தமான செய்தி காத்திருந்தது. ஐந்தே ஐந்து நிமிடங்கள் வந்து போகிற மாதிரியான வேடம் அது என்று சொன்ன போது கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் 'சரி' என்று ஒப்புக் கொண்டேன்.
நாடகத்தில் இரண்டு பெண் வேடங்கள் இருந்தன. முக்கிய பெண் வேடம் அந்த நாடகத்துக்கே உயிரூட்டக் கூடிய வேடம். ஒவ்வொரு வசனமும் நகைச்சுவையில் ஊறி வெளிப்படும். அந்த அம்சமான வேடம் எனக்கு கிடைக்காமல் போய் விட்டதே என்று மனதுக்குள் பொருமித் தீர்த்தேன்.
நாடகத்தை இயக்கிய தமிழாசிரியருக்கு என் மீது என்ன கோபமோ தெரியவில்லை. அவருக்கு மிகவும் பிடித்தமான இன்னொரு மாணவருக்கு அந்த வேடத்தை அளித்து விட்டார்.
அந்த மாணவரும் அருமையான நடிகர் தான். அவர் அந்த வசனங்களை சொன்ன போது, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள் தான். ஆனால் என்னவோ ஒரு செயற்கைத் தனம் இருப்பதாக எனக்கு தோன்றியது. வேடம் கிடைக்காத கோபத்தில் அப்படி தோன்றுவதாக எனக்கு நானே திட்டிக் கொண்டு, சமாதானப் பட்டுக் கொண்டேன்.
மற்றவர்கள் அவரவர் வேடத்துக்கான வசனங்களைப் பேசி முடித்து விட்டு கேண்ட்டீன் பக்கம் போய் விடுவார்கள். நான் ஐந்து நிமிடங்கள் வசனம் பேசி விட்டு எங்கும் போகாமல் முழு நாடக ஒத்திகையையும் பார்ப்பேன். சில சமயம் அந்தப் பெண் வேட நண்பன் வசனத்தை மறக்கும் போது உடனே என் ஞாபகத்திலிருந்து எடுத்துக் கொடுப்பேன். அவ்வளவு அழகாக வசனங்கள் மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது. அது மட்டுமில்லை, முற்றிலும் மாறுபட்ட நடிப்போடு என் மனசுக்குள் அந்தப் பெண் வேடம் புகுந்து விட்டிருந்தது.
நாளை நாடக அரங்கேற்றம். அந்த திடுக்கிடும் செய்தி வந்தது. பெண் வேடம் ஏற்ற அந்த நண்பனின் தாயார் இறந்த செய்தி தான் அது!
காலை அவசரக் கூட்டம் கூட்டப் பட்டது. கல்லூரி முதல்வரிடம் கலந்தாலோசித்து விட்டு வந்த நாடக இயக்குனர் இறுகிய முகத்தோடு சொன்னார்.
"நாடகம் ரத்து செய்யப் பட்டது. அதற்கு பதிலாக இன்னும் இரண்டு நடன நிகழ்ச்சிகளும் ஒரு மிமிக்ரி நிகழ்ச்சியும் நடத்த முடிவு செய்திருக்கிறோம்!"
நான் எழுந்தேன். "அந்த வேடத்தை நான் செய்யலாமா?" என்று அனுமதி கேட்டேன்.
இயக்குனர் என்னை ஒரு புழுவைப் போலப் பார்த்தார்.
"அவ்வளவு சுலபமான விஷயமில்லை அது. அவனே எவ்வளவு கஷ்டப் பட்டு கிட்டிருக்கான் தெரியும் தானே? நாடகத்தோட முக்கிய வேடம் அது. கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வசனங்கள் அந்த கேரக்டர் பேசக்கூடியவை! எப்ப ரிகர்சல் பண்ண முடியும்? சாயங்காலம் நாடகம்!" என்றார்.
"ஒரே ஒரு ரிகர்சல் பார்ப்போம். உங்களுக்கு பிடிக்கலைன்னா வேணாம்!" என்றேன் நான். நண்பர்கள் எல்லோரும் எனக்கு ஆதரவளித்தார்கள்.
"முக்கிய விஐபிகள் வர்றாங்க. எல்லா கல்லூரிகளிலிருந்தும் எக்கச்சக்க மாணவர்கள் வருவாங்க. அவங்க முன்னாலே ஒரு சின்ன தவறு நடந்தாலும் கூட அது கல்லூரிக்கே அவப் பெயரிலே வந்துமுடியும். சாரி!" என்று மறுத்து விட்டார்.
அப்போது அங்கு வந்த கல்லூரி முதல்வர் குறுக்கிட்டார்.
"வசனங்களை மனப் பாடம் பண்ண எவ்வளவு நேரம் எடுத்துக்குவே?" என்றார்.
"சார், நான் இப்பவே ரெடி!" என்றேன் உற்சாகமாக.
இயக்குனரைப் பார்த்து "ஒரு ரிகர்சல் பார்த்து விட்டு முடிவுக்கு வருவோம்" என்றார்.
அன்று மாலை நாடகம் இனிதே அரங்கேறியது. நான் என் மனதிலிருந்த அந்த நகைச்சுவைப் பெண்ணை மேடையில் ஏற்றி அழகு பார்த்தேன். ஒவ்வொரு வசனத்துக்கும் கைத்தட்டல் வானைப் பிளந்தது. ஒரு சில காட்சிகளில் அந்த ஓசை அடுத்த வசனத்தையே மறக்கடித்து வேடிக்கை காட்டியது!
நான் முன்பு செய்த அந்த ஐந்து நிமிட பெண் வேடத்துக்கு என் நண்பன் அறைக் கதவை அதிர்ஷ்டம் தட்டியதையும் இங்கு சொல்லியாக வேண்டும்!
நன்றி: http://tamil.sify.com
0 பின்னூட்டங்கள்:
Post a Comment