Wednesday, January 03, 2007

இரண்டு மணி நேரத் திட்டங்கள்

புல்லில் பனித்துளி
துளி: 10


ன்று முடிக்க வேண்டிய வேலைகளை இன்றே முடித்து விட வேண்டும். நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் கடைபிடிக்க மறுக்கும் விஷயம்.

'என்ன, ஒரு அஞ்சு நிமிட வேலை. நாளை காலையில் செய்தால் ஒன்றும் தலை முழுகிப் போகாது' என்று ரொம்ப தைரியமாக இருப்பவர்கள் நம்மில் மிக அதிகம். மேலாளர் விடாமல், 'அஞ்சு நிமிடம் தானே ஆகும்? முடிச்சுட்டு அஞ்சு நிமிடம் கழித்து போ!' என்று சொல்வார். 'சார், காலையில் 8-55க்கு எல்லாம் வந்து முடிச்சுடுறேன்' என்று அந்த வலையிலிருந்தும் தப்பி நழுவும் மீன்கள் நிறைய!

நான் வேலை பார்த்த பழைய அலுவலக மேலாளர் கொஞ்சம் கூடுதல் ஜாக்கிரதை உணர்வு கொண்டவர். அவருக்கு இன்று முடிக்க வேண்டிய வேலை முடிந்திருக்கிறதா என்று பார்ப்பதை விடவும், நாளை காலை முதல் இரண்டு மணி நேரத்துக்கான வேலைகள் முடிந்திருக்கிறதா என்று கவனிக்க மிகவும் விருப்பம்.

நாளை இரண்டு மணி நேர வேலைகளா என்று நீங்கள் அதிசயிப்பது தெரிகிறது. ஆமாம். காலை 9 மணி முதல் 11 மணி வரை என்னென்ன வேலைகள் முடிய வேண்டும் என்று முன் யோசனை செய்து பட்டியலிட்டு, அதை எல்லாவற்றையும் இன்றே முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும். ஏனெனில், அடுத்த நாள் காலை அடித்துப் பிடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்துடன் எந்த வேலையையும் செய்யத் தேவையில்லை. ஒருவேளை, பணியாளர் வரவில்லை எனினும் பாதகமில்லை என்கிற கருத்து உடையவர்.

இப்போதே நாளைய வேலையையும் முடித்து விட்டால் காலை 9 மணிக்கு வந்து என்ன செய்வதாம் என்று நீங்கள் அங்கலாய்க்க வேண்டாம். 11 மணி முதல் 1 மணி வரை என்ன வேலை இருக்குமோ அதை செய்யலாம்!

எந்த நேரத்திலும் எந்த விதமான குறையுமின்றி நடக்க வேண்டிய எல்லா வேலைகளும் முடிந்திருக்கும். அடுத்த நாளுக்கான இரண்டு மணி நேர வேலையும் முடிந்து விட்டதெனில், இந்த வேலைகளை இன்னும் எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியும் என்று திட்டமிட்டு புதிய ஆலோசனைகளை வழங்கச் சொல்வார். காரியம் முடிந்து விட்டது என்று ஆறு மணிக்கு முன் அலுவலகத்தை விட்டு வெளியேற விடமாட்டார்.

இரவு எட்டு மணி வரை அலுவலகத்திலேயே பழியாகக் கிடப்பார். ஒரு வேளை அடுத்த நாள் மாலை ஐந்து மணி வரைக்கான வேலைகளை முடித்து விட்டு கிளம்புவார் போல என்று நான் நினைப்பதுண்டு.

"இந்த மனுஷனுக்கு பெண்டாட்டி இல்லையா? இங்கேயே கிடந்து மாஞ்சுகிட்டிருக்காரே?" என்றேன் நண்பனிடம் ஒருநாள். "பெண்டாட்டி இருக்காங்க. அதான் விஷயம்!" என்றான் கண்ணடித்து.


மும்பை அலுவலகத்துக்கு முக்கிய செய்தி ஒன்றை ஃபாக்ஸ் மூலம் அனுப்பிவிட்டு, உடனே தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்வார்.

"நந்தினி எப்படி இருக்கீங்க? ஒரு ஃபாக்ஸ் அனுப்பினேன். வந்ததா?" என்று ஆரம்பித்து, முழு ஃபாக்ஸ் செய்தியையும் படித்து விடுவார்.

"சொல்ல முடியாது. ஃபேக்ஸ் சரியா போனதா இல்லையா, யாருக்கு தெரியும்? அதான் டபுள் செக் செய்துடணும்" என்பார்.

வர் ஒருமுறை அலுவலக வேலையாக டெல்லிக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு நகருக்கு செல்ல வேண்டியிருந்தது. டெல்லி வரை விமானத்தில். அங்கிருந்து புகை வண்டியில் நான்கு மணி நேரப் பயணம்.

நான்கு நாட்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அழகாக திட்டமிட்டு விட்டுக் கிளம்பினார். அந்த நான்கு நாட்கள் திட்டத்துக்கு எங்கள் முழுக் குழுவும் பெரும் அல்லோலகல்லோலத்துக்கு உள்ளானோம் என்பதை சொல்லத் தேவையில்லை.

அவர் கிளம்பிய நாள் கேக் வெட்டிக் கொண்டாடாத குறை. 'அப்பாடி, அந்த சனியன் அவஸ்தையிலிருந்து இன்னும் ஐந்து நாட்கள் விடுதலை!' என்று எல்லோரும் குதிகுதி என்று குதித்தோம்.

நான் உரக்க, "பாலா, நாளை காலை 11 மணி வரை செய்ய வேண்டியதையெல்லாம் முடிச்சாச்சா?" என்றேன்.

"இன்னும் அஞ்சு நாளுக்கு பண்ண வேண்டிய காரியம் எல்லாம் முடிச்சாச்சு சார்!" என்றான் பாலா பவ்யமாக.

அன்றைக்கு சீக்கிரம் கிளம்பலாமா என்று திட்டம் போட்டோம். சொல்ல முடியாது, திடீரென்று தொலைபேசியில் தொடர்பு கொண்டால் மாட்டுவோம் என்று அந்த நினைப்புக்கு நாங்களே தடை போட்டுக் கொண்டு விட்டோம்.

ங்கள் மேலாளரின் திட்டங்கள் சரியாக நடந்தேறி ஐந்தாம் நாள் ஊருக்குக் கிளம்பினார். டெல்லியில் இரவு எட்டு மணிக்கு விமானம். புகைவண்டி நான்கு மணிக்கெல்லாம் டெல்லி வந்தடையும். ஒரு வேளை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் தாமதம் ஆனாலும் எந்தவித இடையூறுமின்றி விமானத்தைப் பிடித்து விடலாம் என்று அதிஅற்புத திட்டத்தைப் போட்டிருந்தார்.

டெல்லியை அடைய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் போது, அவர் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தேறியது. ஒரு சிறிய ஸ்டேஷனில் புகைவண்டி நின்றிருந்தது. எக்ஸ்பிரஸ் வண்டி எதற்காக இங்கு நிற்க வேண்டும் என்று குழம்பிப் போனார் எங்கள் மேலாளர். பதினைந்து நிமிடங்களாகியும் வண்டி கிளம்பாததால் என்ன ஏது என்று விசாரிக்க ஆரம்பித்தார். எதிரே வந்து கொண்டிருந்த புகைவண்டியின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விட்ட செய்தி கிடைத்தது.

எங்கள் மேலாளருக்கு இருப்பு கொள்ளவில்லை. தான் இருந்த எஸ்-2 பெட்டியிலிருந்து இறங்கி முழு பிளாட்பாரத்துக்கும் அலைந்தார். குட்டி போட்ட பூனை இவரை பார்த்திருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப் போயிருக்கும்.

எதிரே வந்த ரயில்வே பணியாளர் ஒருவரைக் கூட விடாமல் கேள்வி கேட்டு உண்டு இல்லை என்று செய்து விட்டார்.

முக்கிய கேள்வி - ஒரு பெட்டியை தண்டவாளத்தில் மேலேற்ற எவ்வளவு நிமிடங்கள் பிடிக்கும்?

அந்த ஸ்டேஷன் மாஸ்டர் தன் நெற்றிக் கண்ணைத் திறக்கலாமா என்று யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

"என்ன சார்? உங்க கையிலிருக்கிற பெட்டி மாதிரி கேட்கிறீங்களே? இது ரயில் பெட்டி சார்!" என்று சொல்லி விட்டு நடையைக் கட்டி விட்டார்.

எஸ்-2 பெட்டியில் ஏறி, பக்கத்து பயணியைப் பார்த்து விட்டு, தன் கடிகாரத்தையும் பார்த்து விட்டு, 'எட்டு மணிக்கு ஃப்ளைட்!" என்றிருக்கிறார்.

"நீங்க போன மாதிரி தான்!" என்று அந்த பக்கத்து சீட்டு வழுக்கைத் தலை ஆசாமி சொல்லி விட, மீசையை முறுக்கிக் கொண்டு, பெட்டியைத் தூக்கிக் கொண்டு இறங்கி விட்டார்.

'இப்போது மணி இரண்டு நாற்பத்தைந்து. ஸ்டேஷனுக்கு வெளியே செல்ல, அப்புறம் பஸ் பிடிக்க, மூன்று மணி. அதிக பட்சம் மூன்று மணி பதினைந்து நிமிடங்கள்!' என்று கணக்கு போட்டுக் கொண்டே வெளியே வந்து விட்டார்.

ஆனால், அந்த கிராமத்தில் பஸ் வசதி கிடையாது. அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் போனால் ஒரு சிறு நகரம். அங்கு பஸ் இருக்கிறது என்று ஒரு குதிரை வண்டிக் காரர் சொல்ல, வண்டியில் ஏறி விட்டார். பேசியதற்கு மேல் பத்து ரூபாய் கூடப் போட்டுக் கொடுத்தார். குதிரை குஷியில் கனைத்தது.

'டெல்லி போக பஸ் எங்கே நிற்கும்?' என்று அவர் கேட்டதும் அங்கிருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்காத குறை.

"இங்கேயிருந்து டெல்லிக்கு எல்லாம் பஸ் கிடையாது. நீங்க இங்கிருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்தால் அங்கிருந்து பஸ் கிடைக்கும்!" என்று சொல்ல, 'நல்ல வேளை' என்று மகிழ்ந்தார். "ஆனா அந்த பஸ் இப்ப தான் போனது" என்றான் அந்த ஆள்! அடுத்த பஸ்ஸுக்கு ஒரு மணி நேரம் தேமே என்று காத்திருக்க ஆரம்பித்தார். அப்போதும் கணக்கு போட்டுப் பார்த்து விமானத்தைப் பிடித்து விடலாம் என்று உறுதியாக இருந்தார்.

பக்கத்துக் கடையில் கிடைத்த டிபனை சாப்பிட்டு வைத்தார். டெல்லியில் எதுவும் சாப்பிடாமல் அப்படியே விமான நிலையத்துக்குப் போக வசதியாக இருக்கும் என்பது திட்டம்.

பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்த அந்த லொடலொட பஸ்ஸில் ஏறி ஒரு மணி நேர பயணத்தில் அடுத்த ஊருக்கு வந்தாயிற்று.

இங்கிருந்து சரியாக ஒன்றரை மணி நேரத்துக்குள் டெல்லி போய்விட்டால் போதும். விமானத்தைப் பிடித்து விடலாம்!

அங்கு நின்றிருந்த டெல்லி போகும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து பெருமூச்சு விட்டார். கண்டக்டரிடம் "எப்போது கிளம்பும்?" என்று சந்தேகமாகக் கேட்க, "டிரைவர் வந்தவுடன் கிளம்ப வேண்டியது தான்!" என்று சொல்லி பால் வார்த்தார் கண்டக்டர்.

"நான் ஆறரை மணிக்குள்ளே டெல்லியில் இருக்கணும். விமானத்தைப் பிடிக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே பணத்தை நீட்டியிருக்கிறார்.

"ஆறரை மணிக்கு போகாது சார். ஒரு ஏழு ஏழரை ஆயிடும்!" என்று கண்டக்டர் குண்டைப் போட்டார்.

'ஏழு மணிக்கு இல்லையென்றாலும் ஏழரைக்கு செக்-இன் செய்தாக வேண்டுமே! எப்படி?' என்று தன் திட்டங்கள் தோல்வியைத் தழுவப் போகிறதே என்கிற வேதனையில் அவர் உழல ஆரம்பித்த போது, பக்கத்தில் நின்றிருந்த மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவர் இவருக்கு கடவுளாக வந்து உதவி செய்தார்.

"இப்ப ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லிக்கு இருக்கு சார். இங்கேயிருந்து ஒரே மணி நேரத்தில் போயிடும். இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வருது. என்ன, நின்னுகிட்டு போக வேண்டியிருக்கும்" என்று சொல்ல, அவரைத் தள்ளாத குறையாக, ஸ்டேஷனை நோக்கி ஓட ஆரம்பித்தார்.

டிக்கெட் வாங்கி, முதலாம் பிளாட்பாரம் நோக்கி ஓடி, தூர வந்து கொண்டிருந்த புகைவண்டியைப் பார்த்ததும் தான் மூச்சு விட ஆரம்பித்தார்.

புகைவண்டி வந்து நிற்க, எங்கிருந்து தான் வந்தார்களோ, மக்கள் திமுதிமுவென்று படையெடுக்கின்றனர். எங்காவது இடம் கிடைக்கிறதா என்று தேடித் தேடி, இதோ இந்தப் பெட்டியில் இடம் இருக்கும் போலிருக்கிறதே என்று குதூகலத்துடன் ஏறினார்.

அது எஸ்-2 பெட்டி. உள்ளே உட்கார்ந்திருந்த வழுக்கைத் தலை ஆசாமி இவரைக் கண்டவுடன் நெற்றி சுருக்கி, "அட, நீங்களா?" என்று சொன்னார்!



[நன்றி: http://tamil.sify.com]

0 பின்னூட்டங்கள்: