Tuesday, January 30, 2007

உண்மையில் அது போலி

சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு - இன்னொரு கிளையின் அமோக ஆரம்பம்
கெட்ட கெட்ட வார்த்தைகள்
நான் அவனில்லை!
இந்து முஸ்லீம் கிறித்தவர்கள் - இவர்களுக்கும் எனக்கும் இருக்கும் தூரம்!

தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு


வணக்கம் நண்பரே! [நண்பியே! ;-) ]

நான் அதிகமாக யாருக்கும் பின்னூட்டம் இடுவது கிடையாது. 'அட!' என்று என் மனதைக் கவரும் பதிவுக்கு மட்டும் பின்னூட்டம் இடுவேன். [அதுவும் வருடத்துக்கு ஒன்று இரண்டு!]

இந்து முஸ்லீம் கிறித்தவர் என்று வார்த்தை கண்ணில் பட்டால் மேற்கொண்டு படிக்கக் கூட மாட்டேன்!

கெட்ட வார்த்தைகள் - 'அப்படீன்னா?' என்று கேட்கக் கூடிய அபூர்வப் பிறவி. அந்த வார்த்தைகளுக்கும் எனக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரம்.

சரி, சரி, எதுக்கு இவ்வளவு முன்னோட்டம்?

உங்கள் பதிவுகளில் இனி என் பெயரில் ஏதாகிலும் பின்னூட்டம் வந்தால் அதில் எக்கச்சக்கச்சக்க கெட்ட வார்த்தைகள் இருந்தால் தயவு செய்து வெளியிட வேண்டாம். அது நானில்லை, மண்டபத்தில் யாரோ வேலை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிக!

சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவுக்கு போட்டியாக 'சுபமூகா' என்கிற பெயருக்கு விளம்பரம் கொடுக்கும் அந்தப் புண்ணியவான் நீடூழி வாழ்க! ;-)

Thursday, January 25, 2007

ரகசிய மெயில்

ரகசியமாய் ஒரு ஈமெயில் - அனுப்ப முடியுமா?


டோண்டு ராகவனுக்கு பின்னூட்டம் இடுவது எப்படி?


தேன்கூட்டில் தமிழ் மணத்தில் பதிவுகள் மாயம்!

[தலைப்புகள்: சுபமூகா பக்கங்கள் விளம்பரப் பிரிவு]

கசியமாய்.. ரகசியமாய்..

ஏதாவது செய்தி அனுப்ப வேண்டுமா? வந்து விட்டது புதிய ஈமெயில் வசதி!


நீங்கள் அனுப்ப வேண்டிய ரகசிய செய்தியை தட்டச்சி ஈமெயில் முகவரி கொடுத்து அனுப்பு என்று சொன்னால் போதும். பெறுநர் அந்த செய்தியைப் படித்து முடித்ததும் அந்த ஈமெயில் வந்த சுவடு தெரியாமல் அழிக்கப் பட்டு விடும். அங்கு மாத்திரம் அல்ல, அனுப்புநரிடம் கூட அந்த ஈமெயில் இருக்காது.


மக்கள் என்னென்ன மாதிரி எல்லாம் கண்டுபிடிக்கிறாங்கப்பா!!


நினைத்துப் பாருங்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் என்னென்ன மாதிரியான கண்டுபிடிப்புகள் வரக் கூடும்?!!

  1. அன்பு காதலன் தான் தேர்ந்தெடுத்த புதிய காதலிக்கு [ ;-) ] காதல் கடிதம் எழுதி தைரியமாக அவளிடம் கொடுக்கிறான். அவள் கோபமாக வாங்கி படிக்கிறாள். படித்து முடிக்கும் போது அவள் கையில் கடிதம் இருக்காது!
  2. அலுவலகத்தில் ஊதிய உயர்வு கடிதம் கைக்கு கிடைக்கிறது. தொகையைப் பார்த்து விட்டு, இப்போது வாங்கும் சம்பளத்தை விட இது எவ்வளவு அதிகம் என்று மனதுக்குள் கணக்கு போட்டுக் கொண்டே கண்களை மூடி ஒரு விநாடி சிந்தித்து விட்டு கண்களைத் திறப்பதற்குள் கடிதம் மாயம்!
  3. வங்கியில் காசோலை கொடுத்து டோக்கன் வாங்கி, டோக்கன் கொடுத்து பணம் வாங்கி எண்ணி முடிக்கும் போது, காசோலை காணலை [காணவில்லை]!
  4. தமிழ் மணமோ, தேன் கூடோ எங்கோ ஓரிடத்தில் இந்து மதம், இந்த மதம், அந்த மதம் என்று ஒரு பதிவைப் படித்து முடித்ததும் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ய்ய்ய்க்க்க்க்.. பதிவு எங்கோ ஓடி ஒளி[ழி]ந்து விட்டது.
  5. டோண்டு ராகவன் பதிவுக்கு தைரியமாக பின்னூட்டம் இடலாம். வாசகர் பின்னூட்டத்தைப் படித்து முடித்ததும் அது மறைந்து விடும்!

Thursday, January 18, 2007

சால்ட் லேக் நகர் வலம்


ப்ரோவோவில் இருந்து சால்ட்லேக் [யூட்டா - அமெரிக்கா] சென்ற போது எடுக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு.

சிறு மீன் போதும்!

புல்லில் பனித் துளி

துளி: 12


தவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருங்கள். கதவில் சிறு அசைவு தெரிந்தாலும் கவனியுங்கள்.


அதிர்ஷ்டம் எப்போது கதவைத் தட்டும் என்பது புரிபடாத ஒரு நிகழ்வு. கதவைத் தட்டிய அடுத்தவிநாடியே அந்தப் பரிசை நிராகரிக்காமல் பெற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றிப் படிகளைக் கடந்தவர்களின் சரித்திரத்தைப் படிக்கும் போது இந்த உண்மை புரிபடும்.


பெரிய மீன் வரட்டும் என்று ஒற்றைக்கால் கொக்காக இருக்காமல் கிடைத்த சிறிய மீனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, பட்டினியில் கீழே விழாமல் தற்காத்துக் கொள்ளுங்கள்.


கிடைக்கிற எந்த சிறிய வாய்ப்பையும் தவற விடாமல் இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்கிற இந்த வித்தையை எனக்குக் கற்றுத் தந்தவர் எனது தூரத்து உறவினர் ஒருவர். சென்னையில் நடந்த ஒரு திருமணத்தில் எனக்கு பரிச்சயமான அவர் முதல் சந்திப்பிலேயே கவர்ந்து விட்டார்.


நான் அப்போது தான் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதி விட்டு முடிவுக்காகக் காத்திருந்தேன். சென்னையில் பிரபல தொழிலகம் ஒன்றில் வேலை காலி இருப்பதாக அன்றைய செய்தித் தாளில் விளம்பரம் வெளியாகியிருந்தது. பட்டதாரிகளுக்கு முதலிடம். எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப் படும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.


உடனே என்னை அந்த வேலைக்கு விண்ணப்பிக்க சொன்னார். நான் திருதிருவென்று விழித்தேன் என்றே சொல்ல வேண்டும். அந்த வேலைக்கான தகுதி ஒன்றுமே எனக்கு இல்லாத போது எப்படி அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று தயங்கினேன்.


"இன்னும் ரிஸல்ட்டே வரலை மாமா!" என்று இழுத்தேன்.


"நல்லா எழுதியிருக்கே தானே?" என்றார்.


"ம்.." என்றேன்.


"பின்னே? நல்ல மார்க் வரப் போகுது. நீ வேலையில் சேரப் போறே!" என்றார் விடாப்பிடியாக.


இந்தக் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என் தந்தை நடுவில் புகுந்தார்.


"உங்களுக்கு யாரையாவது அந்த ஃபேக்டரியில் தெரியுமா என்ன?" என்று தன் சந்தேகத்தை எடுத்து வைத்தார்.


"என்ன நீங்க? உங்க மகனுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும். எந்த ரெக்கமெண்டேஷனும் தேவையில்லை!" என்று மேசையில் அடிக்காத குறையாக சொன்னார்.


"நம்பிக்கை வேணும். இந்தக் காலப் பசங்களுக்கு அது இல்லை. நம்பிக்கை இருந்தா கண்டிப்பா சாதிக்கலாம்!"


சொன்னவர் அப்படியே கழன்று கொள்ளவில்லை. தானே போய் எனக்காக விண்ணப்பத் தாளை தட்டச்சு செய்து கொண்டு வந்து, என்னிடம் ஒரே ஒரு கையொப்பம் மட்டும் வாங்கிக் கொண்டு, தானே தபால் தலை ஒட்டி, தானே போய் தபால் பெட்டியிலும் போட்டுவிட்டு வந்தார்.


"எழுதி வச்சுக்க. முதல் மாத சம்பளத்தில் எனக்கு ஸ்வீட் வாங்கிக் கொடுக்கணும். ஓகே?"


னக்கு நம்பிக்கையின் முதல் துளியை இரத்தத்தில் சேர்த்த நிகழ்ச்சி இது. சினிமாவில் நடக்கிற மாதிரி எல்லாம் உடனே வேலை எல்லாம் கிடைக்கவில்லை தான். ஆனால் அருமையான உற்சாக டானிக் குடிக்கக் கிடைத்து விட்டது.


அந்த நம்பிக்கை தான் எனக்கு முதல் வேலையை வாங்கிக் கொடுத்தது. அக்கவுண்ட்ஸ் அஸிஸ்டண்ட் வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன்.

அக்கவுண்ட்ஸுக்கும் பி.எஸ்.சி பட்டதாரியான எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று விட்டிருக்கலாம் தான்.


விண்ணப்பித்துப் பார்க்கலாம் என்று முயற்சித்தேன்.


நேர்முகத் தேர்வில் முக்கியமான தகுதியே இல்லை என்று உதடு பிதுக்கப் பட்ட போது, என் மதிப்பெண்கள் மற்றும் மற்ற தகுதிகளை எடுத்துச் சொல்லி அந்த வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டு விட்டேன். எனக்கே எனக்காக ஒரு புதிய வேலையையே உருவாக்கி விட்டார் அந்தப் புண்ணியவான்.


அப்படித்தான் எனக்கு அதிர்ஷ்டம் மோதிரம் போட்டுக் கொண்டிருந்த விரலால் கதவைத் தட்டியது.


அன்று கிடைத்த சின்ன மீன் என்னை மயங்க விடாமல் காப்பாற்றி பெரிய மீன் கிடைத்த போதுகெட்டியாக அதைப் பற்றிக் கொள்ளத் தெம்பையும் அளித்தது.


திருச்சி புனித வளனார் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டம். அதில் பங்கு பெற வாய்ப்பு கிடைப்பதே ஒரு பெரிய பாக்கியம். சல்லடை போட்டுத் தேடி ஆட்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அங்கிருந்த விடுதியில் மற்றும் என்.எஸ்.எஸ் முகாம்களில் நான் நாடகங்களில் நடித்திருந்ததால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவை நாடகம். பெண் வேடம்!


மீசையை இழக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு வருத்தத்தைத் தவிர மற்றபடி குதிக்காத குறை தான்.


முதல் நாள் ஒத்திகைக்கு போன போது எனக்கு வருத்தமான செய்தி காத்திருந்தது. ஐந்தே ஐந்து நிமிடங்கள் வந்து போகிற மாதிரியான வேடம் அது என்று சொன்ன போது கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் 'சரி' என்று ஒப்புக் கொண்டேன்.


நாடகத்தில் இரண்டு பெண் வேடங்கள் இருந்தன. முக்கிய பெண் வேடம் அந்த நாடகத்துக்கே உயிரூட்டக் கூடிய வேடம். ஒவ்வொரு வசனமும் நகைச்சுவையில் ஊறி வெளிப்படும். அந்த அம்சமான வேடம் எனக்கு கிடைக்காமல் போய் விட்டதே என்று மனதுக்குள் பொருமித் தீர்த்தேன்.


நாடகத்தை இயக்கிய தமிழாசிரியருக்கு என் மீது என்ன கோபமோ தெரியவில்லை. அவருக்கு மிகவும் பிடித்தமான இன்னொரு மாணவருக்கு அந்த வேடத்தை அளித்து விட்டார்.


அந்த மாணவரும் அருமையான நடிகர் தான். அவர் அந்த வசனங்களை சொன்ன போது, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள் தான். ஆனால் என்னவோ ஒரு செயற்கைத் தனம் இருப்பதாக எனக்கு தோன்றியது. வேடம் கிடைக்காத கோபத்தில் அப்படி தோன்றுவதாக எனக்கு நானே திட்டிக் கொண்டு, சமாதானப் பட்டுக் கொண்டேன்.


மற்றவர்கள் அவரவர் வேடத்துக்கான வசனங்களைப் பேசி முடித்து விட்டு கேண்ட்டீன் பக்கம் போய் விடுவார்கள். நான் ஐந்து நிமிடங்கள் வசனம் பேசி விட்டு எங்கும் போகாமல் முழு நாடக ஒத்திகையையும் பார்ப்பேன். சில சமயம் அந்தப் பெண் வேட நண்பன் வசனத்தை மறக்கும் போது உடனே என் ஞாபகத்திலிருந்து எடுத்துக் கொடுப்பேன். அவ்வளவு அழகாக வசனங்கள் மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது. அது மட்டுமில்லை, முற்றிலும் மாறுபட்ட நடிப்போடு என் மனசுக்குள் அந்தப் பெண் வேடம் புகுந்து விட்டிருந்தது.


நாளை நாடக அரங்கேற்றம். அந்த திடுக்கிடும் செய்தி வந்தது. பெண் வேடம் ஏற்ற அந்த நண்பனின் தாயார் இறந்த செய்தி தான் அது!


காலை அவசரக் கூட்டம் கூட்டப் பட்டது. கல்லூரி முதல்வரிடம் கலந்தாலோசித்து விட்டு வந்த நாடக இயக்குனர் இறுகிய முகத்தோடு சொன்னார்.


"நாடகம் ரத்து செய்யப் பட்டது. அதற்கு பதிலாக இன்னும் இரண்டு நடன நிகழ்ச்சிகளும் ஒரு மிமிக்ரி நிகழ்ச்சியும் நடத்த முடிவு செய்திருக்கிறோம்!"


நான் எழுந்தேன். "அந்த வேடத்தை நான் செய்யலாமா?" என்று அனுமதி கேட்டேன்.


இயக்குனர் என்னை ஒரு புழுவைப் போலப் பார்த்தார்.


"அவ்வளவு சுலபமான விஷயமில்லை அது. அவனே எவ்வளவு கஷ்டப் பட்டு கிட்டிருக்கான் தெரியும் தானே? நாடகத்தோட முக்கிய வேடம் அது. கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வசனங்கள் அந்த கேரக்டர் பேசக்கூடியவை! எப்ப ரிகர்சல் பண்ண முடியும்? சாயங்காலம் நாடகம்!" என்றார்.


"ஒரே ஒரு ரிகர்சல் பார்ப்போம். உங்களுக்கு பிடிக்கலைன்னா வேணாம்!" என்றேன் நான். நண்பர்கள் எல்லோரும் எனக்கு ஆதரவளித்தார்கள்.


"முக்கிய விஐபிகள் வர்றாங்க. எல்லா கல்லூரிகளிலிருந்தும் எக்கச்சக்க மாணவர்கள் வருவாங்க. அவங்க முன்னாலே ஒரு சின்ன தவறு நடந்தாலும் கூட அது கல்லூரிக்கே அவப் பெயரிலே வந்துமுடியும். சாரி!" என்று மறுத்து விட்டார்.


அப்போது அங்கு வந்த கல்லூரி முதல்வர் குறுக்கிட்டார்.


"வசனங்களை மனப் பாடம் பண்ண எவ்வளவு நேரம் எடுத்துக்குவே?" என்றார்.


"சார், நான் இப்பவே ரெடி!" என்றேன் உற்சாகமாக.


இயக்குனரைப் பார்த்து "ஒரு ரிகர்சல் பார்த்து விட்டு முடிவுக்கு வருவோம்" என்றார்.


ன்று மாலை நாடகம் இனிதே அரங்கேறியது. நான் என் மனதிலிருந்த அந்த நகைச்சுவைப் பெண்ணை மேடையில் ஏற்றி அழகு பார்த்தேன். ஒவ்வொரு வசனத்துக்கும் கைத்தட்டல் வானைப் பிளந்தது. ஒரு சில காட்சிகளில் அந்த ஓசை அடுத்த வசனத்தையே மறக்கடித்து வேடிக்கை காட்டியது!


நான் முன்பு செய்த அந்த ஐந்து நிமிட பெண் வேடத்துக்கு என் நண்பன் அறைக் கதவை அதிர்ஷ்டம் தட்டியதையும் இங்கு சொல்லியாக வேண்டும்!

நன்றி: http://tamil.sify.com

Monday, January 15, 2007

பயக்க வயக்கங்கல்




அப்புரம் எதர்க்கு இன் த மாதிரி வேரு வேரு எலுத்துகலைப் போட்டுக் குலப்பிக்
கொல்ல வேன்டும்?!



மேலும்..

Friday, January 12, 2007

F1

புல்லில் பனித்துளி
துளி: 11



பிறருக்கு F1 செய்வது, அதாவது உதவி செய்வது மிக முக்கியம். ஆனால் சரியாக உதவி செய்கிறோமா என்று கவனிக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

அது என்ன சரியாக?

நான் மிகப் பிரபலமான அந்தத் தொழிலகத்தில் சேர்ந்து ஓரிரு வருடங்களாகியிருந்த சமயம். Telephone-cum-Telex Operator!

இதற்கு முன் ஒரு டிராவல் ஏஜென்சியில் மூன்று வருடங்கள் General Clerk ஆக இருந்தேன். General Clerk என்றால் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று பொருள்.

'ஒரு லெட்டர்' என்பார் பாஸ். ஷார்ட் ஹேண்ட் பேட் சகிதம் போய் அவர் முன் உட்காருவேன். ஷார்ட் ஹேண்ட் எல்லாம் தெரியாது. லாங் ஹேண்ட் தான். ஒரு பந்தாவுக்கு ஷார்ட் ஹேண்ட் பேட்.

கவுண்ட்டரில் இருந்த பெண் சாப்பிட வெளியே போய் விட்டாள். ஒரு டிக்கெட் உடனடியாக வேண்டும். 'கணேஷ், ஏர் புக்கிங்' என்பார்கள். கவுண்ட்டரில் உட்கார்ந்து டிக்கெட் தயார் செய்வேன்.

'கணேஷ், ஒரு பன்னிரண்டு ரூபாய் எங்கேயோ இடிக்குது' என்பார் அக்கவுண்டண்ட். 'இதோ, இங்கே' என்று கண்டுபிடித்து சரி செய்வேன்.

திடீரென்று முப்பது பெட்டிகள் கார்கோ வந்திறங்கும். 'கொஞ்சம் கை கொடுப்பா' என்பார்கள். எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற்றி இறக்க உதவுவேன். தபால் எடுத்து செல்பவர் விடுப்பு எடுத்தால் frank ஆன ஒரே ஆள் என்று என்னை franking செய்யச் சொல்வார்கள்.

ஒரு நாள் கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை. யாருக்கு சொல்வது என்பதில் குழப்பம். எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். கோரஸாக ஒரே குரலில் 'கணேஷ்' என்றார்கள்!

அது தான் General Clerk!


அப்படித்தான் நான் டெலக்ஸ் எப்படி அனுப்புவது என்று கற்றுக் கொண்டேன். டெலக்ஸில் யாரையும் உட்கார விட மாட்டார்கள். முரளி என்று ஒரு ஸ்டெனோகிராபர் இருந்தார். அதி பயங்கர வேகத்தில் டெலக்ஸ் அனுப்புவார். அவர் பின்னால் நின்று கொண்டு அவரது விரல்கள் ஆடும் நாட்டியத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்.


அப்போதெல்லாம் மெக்கானிக்கல் டெலக்ஸ் தான். எண்கள் மற்றும் எழுத்துகள் ஒவ்வொன்றுக்கும் முன்னால் வேறு வேறு விதமாக பட்டன்களை உபயோகிக்க வேண்டியிருந்தது. வார்த்தைகள் எல்லாவற்றையும் தந்தி போல் சுருக்கி டைப் செய்ய வேண்டியிருந்தது.

வேலை அவ்வளவாக இல்லாத போது நான் கொஞ்சம் கொஞ்சமாக டெலக்ஸ் அனுப்புவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். வந்தது வம்பு. முரளிக்கு அருமையான வேலை கிடைத்து ராஜினாமா செய்து விட, அந்தப் பணியும் என்னிடம் வந்தது.

அப்படி கற்றுக் கொண்ட அந்தப் பணி தான் பின்னாளில் எனக்கு அந்தப் பெருமைக்குரிய தொழிலகத்தில் வேலை வாங்கிக் கொடுத்தது. 'வருகிற எந்த வாய்ப்பையும் விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்' என்று நான் பார்க்கிற எல்லோருக்கும் இந்த ஒரு நிகழ்ச்சியையே உதாரணமாகக் காட்டி சொல்வேன்.

மெக்கானிக்கல் டெலக்ஸ் போய் எலெக்ட்ரானிக்ஸ் டெலக்ஸ் வந்தது டும் டும் டும்!
எலெக்ட்ரானிக்ஸ் டெலக்ஸும் போய் கம்ப்யூட்டர் டெலக்ஸ் வந்தது டும் டும் டும்!!

ஒரு நாளுக்கு நூறிலிருந்து நூற்றி ஐம்பது டெலக்ஸ் செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்த சமயம். அப்போது தான் எங்களது பிரிவில் வேலை செய்ய இன்னொரு ஆள் தேவை என்று விளம்பரம் செய்தார்கள்.

முக்கிய தகுதி - கம்ப்யூட்டர் டெலக்ஸ் தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் டெலக்ஸில் பணிபுரிகிறவர்கள் மிகக் குறைவாக இருந்தார்கள். ஆகையால் அந்தப் பணி தெரிந்தவர்கள் யார் வந்தாலும் சுலபமாகத் தேர்வாகி விடுவார்கள் என்று நாங்கள் அனுமானித்திருந்தோம். 'அப்படி யாரும் வரவில்லை என்றால் நல்ல Telephone Operatorஐத் தேர்வு செய்து விட்டு அவரை டெலக்ஸில் பணிபுரியத் தயார் படுத்தி விட வேண்டியது தான்!' என்று எங்கள் மேலாளர் சொன்னதைப் பக்கத்துப் பிரிவில் இருந்த ஒருவர் கேட்டு விட்டார்.

மதிய உணவு வேளையில் என் முன் வந்து உட்கார்ந்தார். "கணேஷ், நீ எப்படியாவது உதவி பண்ணனும்!" என்று ஆரம்பித்தார்.

அவரது தூரத்து உறவினரான ஒரு பெண்மணிக்கு நான் உதவ வேண்டும் என்றார். "என்ன உதவி?" என்றேன் சற்று தயங்கி.

"அந்தப் பொண்ணு Telephone Operatorஆ வேலை செஞ்சுகிட்டிருக்கா. ரொம்ப கம்மியா உதவித் தொகை மாதிரி என்னமோ கொடுத்துகிட்டிருக்கான். அவளுக்கு எப்படியாவது இந்த வேலை கிடைக்கிற மாதிரி பண்ணப்பா. கோடி புண்ணியமாப் போகும். அவங்க குடும்பம் ரொம்பக் கஷ்டப் படற குடும்பம்" என்றார்.

"கம்ப்யூட்டர் டெலக்ஸ் தெரியுமா?" என்று முதல் அஸ்திரத்தை உபயோகித்தேன்.

"டெலக்ஸ் தெரியும்"

"கம்ப்யூட்டர் டெலக்ஸ்?"

"என்னப்பா, எல்லாம் ஒண்ணு தானே? என்ன பெரிய மாற்றம் இருக்கப் போகுது?" என்றார் ரொம்ப பவ்யமாக.

"நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அது வேற, இது வேற" என்று சொல்லிக் கொண்டே என் அறைக்குள் நுழைய, அவரும் பின் தொடர்ந்தார்.


"உள்ளே அனுமதியில்லை சார்" என்றேன். "யாராவது பார்த்தால் என்னை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள்" என்று நான் சொல்லிக் கொண்டே இருக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளாத மாதிரி அவர் அந்த கம்ப்யூட்டர் டெலக்ஸ் முன் போய் நின்று அதையே உற்றுப் பார்த்தார்.

"டைப் ரைட்டர் மாதிரி தான் இருக்கு! என்ன பெரிய கம்ப்யூட்டர் டெலக்ஸ்?" என்றார் சிரித்து.

இந்த ஆளை என்ன பண்ணுவது என்கிற பாவத்தில் பாவமாக அவரைப் பார்த்தேன்.



"கணேஷ், சின்ன உதவி பண்ணப்பா. எந்த எந்த பட்டனைத் தட்டினா என்னென்ன ஆகும்னு மாத்திரம் சொல்லிக் கொடப்பா. மத்ததை நான் பார்த்துக்கறேன். ப்ளீஸ்!" என்றார்.

"சார், அது நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு ஈஸி இல்லை சார். மெஸேஜ் எடிட் பண்றதுக்கு ஒரு கீ, சேவ் பண்றதுக்கு ஒரு கீ, அனுப்புறதுக்கு ஒரு கீ, வேணாம்னா டெலீட் செய்ய ஒரு கீ, ஷெட்யூல் பண்ண ஒரு கீ, பிரிண்ட் எடுக்க ஒரு கீ. இப்படி எக்கச்சக்க கீ!" என்று பச்சைக் கிளி மாதிரி சொல்லிப் பார்த்தேன்.

"பாரு, நீயே சொல்லிட்டே. அந்த கீ, இந்த கீ.. அப்படீன்னு. அதையெல்லாம் ஒவ்வொண்ணா சொல்லு. நான் எழுதிக்கிறேன். அவளை மனப்பாடம் பண்ணிக்க சொல்லிட்டா ஆச்சு. ஜமாய்ச்சுடலாம்" என்றவர் பக்கத்திலிருந்த நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு காகிதத்தைக் கிழித்து வைத்துக் கொண்டு தயாராகி விட்டார்.

நான் அவரையே பார்க்க, "சொல்லுடா கண்ணா!" என்றார் கொஞ்சி.

ஒரு நிமிடம் யோசித்தேன். உதவி செய்வதில் என்ன தவறு? அதுவும் ஒரு பெண்ணுக்கு!! கம்ப்யூட்டர் டெலக்ஸ் வந்த புதிதில் நானும் தலைகீழாக நின்று தானே கற்றுக் கொண்டேன்! பாவம், உதவி செய்து விடுவோம்.

"எழுதிக்குங்க சார்" என்றேன் உற்சாகத்தோடு.

"F2: Edit, F3: Save, F6: Schedule, F7: Print, F10: Exit" என்றேன்.

ரொம்பப் பொறுமையாக அழகாக எழுதினார்.

"திவ்யா செலக்டட்" என்றார் குஷியாக!

'திவ்யா, பெயர் நல்லாத் தான் இருக்கு!' என்று மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அவர் நகர்ந்ததும், 'எப்படி இருப்பாள் திவ்யா?!!'

சரி, முதல் வரிக்கான சம்பவத்துக்கு வந்து விடுகிறேன்.
இண்டர்வியூ தினம் வந்தது.
திவ்யாவின் முறையும் வந்தது.

அழகான தேவதை போல் அவள் அறைக்குள் நுழைந்தாள்.

எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம். நான் என் பெயரைச் சொன்னதும் அவளது கண்கள் மூன்று நான்கு விநாடிகள் என் முகத்தில் நீந்தி விட்டுக் கடந்தன. நண்பர் என் பெயரை சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

எங்கள் மேலாளர் கணீர் குரலில் ஆரம்பித்தார்.

"கம்ப்யூட்டர் டெலக்ஸில் பணிபுரிந்த அனுபவம் இருக்கிறதா?"

"ஓ!" என்றாள் திவ்யா கண்களை அகல விரித்து. என் பக்கம் வேறு ஒரு முறை திரும்பிப் பார்த்தாள்.

அவளை கம்ப்யூட்டர் டெலக்ஸ் முன் உட்காரச் சொன்னார். திவ்யா பரத நாட்டிய அபிநயங்களோடு நடந்து சென்று கம்ப்யூட்டர் டெலக்ஸ் முன் உட்கார்ந்து கொண்டாள்.

ஒரு முறை 'டைப்ரைட்டர்' போலிருந்த கம்ப்யூட்டரைப் பார்த்து விட்டு மனதுக்குள் சமாதானப் பட்டது போல் எனக்குத் தெரிந்தது.

"எவ்வளவு வருடங்களாக கம்ப்யூட்டர் டெலக்ஸில் பணி புரிந்திருக்கிறீர்கள்?" என்றார் மேலாளர்.

"மூன்று வருடங்கள்" என்றாள் திவ்யா பளிச்சென்று.

"மூன்று வருடங்கள்?" என்றார் மேலாளர் கேள்விக்குறியைச் சேர்த்து.

"பெங்களூருக்கு கம்ப்யூட்டர் டெலக்ஸ் வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அது எப்படி மூன்று வருடங்கள்?" என்றார் ஒவ்வொரு வார்த்தையையும் மெதுவாக உச்சரித்து.

"கம்ப்யூட்டர் டெலக்ஸ்? அது ஒரு வருடம் தான். நான் சொன்னது ஆர்டினரி டெலக்ஸ்!" என்றாள்.

"ஆர்டினரி டெலக்ஸ்? யூ மீன் மெக்கானிக்கல்?" என்றார் திருத்தி.

"எஸ், எஸ்.." என்றாள் அவசரமாக!

'அடி பாவி, அப்படியென்றால் உனக்கு மெக்கானிக்கல் டெலக்ஸ் கூடத் தெரியாதா?!'

நினைத்தவன் ஏதோ நானே இண்டர்வியூ செய்யப் படுவது போல் நடுங்க ஆரம்பித்தேன்.

"சரி, ஒரு டெலக்ஸ் மெஸேஜ் அனுப்பிக் காட்ட முடியுமா?" என்று தயாராக இருந்த ஒரு செய்தியை எடுத்துக் கொடுத்தார்.

திவ்யா உடனே விமானம் ஓட்ட ஆரம்பித்தாள்.

"F2 for Edit, F3 for Save, F5 இல்லை, இல்லை, சாரி, F6 for Schedule, F7 for .."

"ஓகே, ஓகே" என்று இடை மறித்தார் மேலாளர். "எங்கே, எடிட் செய்து காட்டுங்கள்" என்றார்.

திவ்யா பதவிசாக உட்கார்ந்து கொண்டாள். திரும்ப ஒரு முறை அந்த 'டைப் ரைட்டர்' போலிருந்த கம்ப்யூட்டரைப் பார்த்தாள்.

தேடிக் கண்டுபிடித்து 'F' என்ற பட்டனைத் தட்டிவிட்டு, தேடிக் கண்டுபிடித்து '2' என்ற பட்டனையும் தட்டிவிட்டு "F2 for Edit" என்று கூறிப் புன்னகைத்தாள்!



[நன்றி: http://tamil.sify.com]

Wednesday, January 03, 2007

இரண்டு மணி நேரத் திட்டங்கள்

புல்லில் பனித்துளி
துளி: 10


ன்று முடிக்க வேண்டிய வேலைகளை இன்றே முடித்து விட வேண்டும். நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் கடைபிடிக்க மறுக்கும் விஷயம்.

'என்ன, ஒரு அஞ்சு நிமிட வேலை. நாளை காலையில் செய்தால் ஒன்றும் தலை முழுகிப் போகாது' என்று ரொம்ப தைரியமாக இருப்பவர்கள் நம்மில் மிக அதிகம். மேலாளர் விடாமல், 'அஞ்சு நிமிடம் தானே ஆகும்? முடிச்சுட்டு அஞ்சு நிமிடம் கழித்து போ!' என்று சொல்வார். 'சார், காலையில் 8-55க்கு எல்லாம் வந்து முடிச்சுடுறேன்' என்று அந்த வலையிலிருந்தும் தப்பி நழுவும் மீன்கள் நிறைய!

நான் வேலை பார்த்த பழைய அலுவலக மேலாளர் கொஞ்சம் கூடுதல் ஜாக்கிரதை உணர்வு கொண்டவர். அவருக்கு இன்று முடிக்க வேண்டிய வேலை முடிந்திருக்கிறதா என்று பார்ப்பதை விடவும், நாளை காலை முதல் இரண்டு மணி நேரத்துக்கான வேலைகள் முடிந்திருக்கிறதா என்று கவனிக்க மிகவும் விருப்பம்.

நாளை இரண்டு மணி நேர வேலைகளா என்று நீங்கள் அதிசயிப்பது தெரிகிறது. ஆமாம். காலை 9 மணி முதல் 11 மணி வரை என்னென்ன வேலைகள் முடிய வேண்டும் என்று முன் யோசனை செய்து பட்டியலிட்டு, அதை எல்லாவற்றையும் இன்றே முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும். ஏனெனில், அடுத்த நாள் காலை அடித்துப் பிடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்துடன் எந்த வேலையையும் செய்யத் தேவையில்லை. ஒருவேளை, பணியாளர் வரவில்லை எனினும் பாதகமில்லை என்கிற கருத்து உடையவர்.

இப்போதே நாளைய வேலையையும் முடித்து விட்டால் காலை 9 மணிக்கு வந்து என்ன செய்வதாம் என்று நீங்கள் அங்கலாய்க்க வேண்டாம். 11 மணி முதல் 1 மணி வரை என்ன வேலை இருக்குமோ அதை செய்யலாம்!

எந்த நேரத்திலும் எந்த விதமான குறையுமின்றி நடக்க வேண்டிய எல்லா வேலைகளும் முடிந்திருக்கும். அடுத்த நாளுக்கான இரண்டு மணி நேர வேலையும் முடிந்து விட்டதெனில், இந்த வேலைகளை இன்னும் எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியும் என்று திட்டமிட்டு புதிய ஆலோசனைகளை வழங்கச் சொல்வார். காரியம் முடிந்து விட்டது என்று ஆறு மணிக்கு முன் அலுவலகத்தை விட்டு வெளியேற விடமாட்டார்.

இரவு எட்டு மணி வரை அலுவலகத்திலேயே பழியாகக் கிடப்பார். ஒரு வேளை அடுத்த நாள் மாலை ஐந்து மணி வரைக்கான வேலைகளை முடித்து விட்டு கிளம்புவார் போல என்று நான் நினைப்பதுண்டு.

"இந்த மனுஷனுக்கு பெண்டாட்டி இல்லையா? இங்கேயே கிடந்து மாஞ்சுகிட்டிருக்காரே?" என்றேன் நண்பனிடம் ஒருநாள். "பெண்டாட்டி இருக்காங்க. அதான் விஷயம்!" என்றான் கண்ணடித்து.


மும்பை அலுவலகத்துக்கு முக்கிய செய்தி ஒன்றை ஃபாக்ஸ் மூலம் அனுப்பிவிட்டு, உடனே தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்வார்.

"நந்தினி எப்படி இருக்கீங்க? ஒரு ஃபாக்ஸ் அனுப்பினேன். வந்ததா?" என்று ஆரம்பித்து, முழு ஃபாக்ஸ் செய்தியையும் படித்து விடுவார்.

"சொல்ல முடியாது. ஃபேக்ஸ் சரியா போனதா இல்லையா, யாருக்கு தெரியும்? அதான் டபுள் செக் செய்துடணும்" என்பார்.

வர் ஒருமுறை அலுவலக வேலையாக டெல்லிக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு சிறு நகருக்கு செல்ல வேண்டியிருந்தது. டெல்லி வரை விமானத்தில். அங்கிருந்து புகை வண்டியில் நான்கு மணி நேரப் பயணம்.

நான்கு நாட்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று அழகாக திட்டமிட்டு விட்டுக் கிளம்பினார். அந்த நான்கு நாட்கள் திட்டத்துக்கு எங்கள் முழுக் குழுவும் பெரும் அல்லோலகல்லோலத்துக்கு உள்ளானோம் என்பதை சொல்லத் தேவையில்லை.

அவர் கிளம்பிய நாள் கேக் வெட்டிக் கொண்டாடாத குறை. 'அப்பாடி, அந்த சனியன் அவஸ்தையிலிருந்து இன்னும் ஐந்து நாட்கள் விடுதலை!' என்று எல்லோரும் குதிகுதி என்று குதித்தோம்.

நான் உரக்க, "பாலா, நாளை காலை 11 மணி வரை செய்ய வேண்டியதையெல்லாம் முடிச்சாச்சா?" என்றேன்.

"இன்னும் அஞ்சு நாளுக்கு பண்ண வேண்டிய காரியம் எல்லாம் முடிச்சாச்சு சார்!" என்றான் பாலா பவ்யமாக.

அன்றைக்கு சீக்கிரம் கிளம்பலாமா என்று திட்டம் போட்டோம். சொல்ல முடியாது, திடீரென்று தொலைபேசியில் தொடர்பு கொண்டால் மாட்டுவோம் என்று அந்த நினைப்புக்கு நாங்களே தடை போட்டுக் கொண்டு விட்டோம்.

ங்கள் மேலாளரின் திட்டங்கள் சரியாக நடந்தேறி ஐந்தாம் நாள் ஊருக்குக் கிளம்பினார். டெல்லியில் இரவு எட்டு மணிக்கு விமானம். புகைவண்டி நான்கு மணிக்கெல்லாம் டெல்லி வந்தடையும். ஒரு வேளை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் தாமதம் ஆனாலும் எந்தவித இடையூறுமின்றி விமானத்தைப் பிடித்து விடலாம் என்று அதிஅற்புத திட்டத்தைப் போட்டிருந்தார்.

டெல்லியை அடைய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் போது, அவர் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தேறியது. ஒரு சிறிய ஸ்டேஷனில் புகைவண்டி நின்றிருந்தது. எக்ஸ்பிரஸ் வண்டி எதற்காக இங்கு நிற்க வேண்டும் என்று குழம்பிப் போனார் எங்கள் மேலாளர். பதினைந்து நிமிடங்களாகியும் வண்டி கிளம்பாததால் என்ன ஏது என்று விசாரிக்க ஆரம்பித்தார். எதிரே வந்து கொண்டிருந்த புகைவண்டியின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விட்ட செய்தி கிடைத்தது.

எங்கள் மேலாளருக்கு இருப்பு கொள்ளவில்லை. தான் இருந்த எஸ்-2 பெட்டியிலிருந்து இறங்கி முழு பிளாட்பாரத்துக்கும் அலைந்தார். குட்டி போட்ட பூனை இவரை பார்த்திருந்தால் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப் போயிருக்கும்.

எதிரே வந்த ரயில்வே பணியாளர் ஒருவரைக் கூட விடாமல் கேள்வி கேட்டு உண்டு இல்லை என்று செய்து விட்டார்.

முக்கிய கேள்வி - ஒரு பெட்டியை தண்டவாளத்தில் மேலேற்ற எவ்வளவு நிமிடங்கள் பிடிக்கும்?

அந்த ஸ்டேஷன் மாஸ்டர் தன் நெற்றிக் கண்ணைத் திறக்கலாமா என்று யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

"என்ன சார்? உங்க கையிலிருக்கிற பெட்டி மாதிரி கேட்கிறீங்களே? இது ரயில் பெட்டி சார்!" என்று சொல்லி விட்டு நடையைக் கட்டி விட்டார்.

எஸ்-2 பெட்டியில் ஏறி, பக்கத்து பயணியைப் பார்த்து விட்டு, தன் கடிகாரத்தையும் பார்த்து விட்டு, 'எட்டு மணிக்கு ஃப்ளைட்!" என்றிருக்கிறார்.

"நீங்க போன மாதிரி தான்!" என்று அந்த பக்கத்து சீட்டு வழுக்கைத் தலை ஆசாமி சொல்லி விட, மீசையை முறுக்கிக் கொண்டு, பெட்டியைத் தூக்கிக் கொண்டு இறங்கி விட்டார்.

'இப்போது மணி இரண்டு நாற்பத்தைந்து. ஸ்டேஷனுக்கு வெளியே செல்ல, அப்புறம் பஸ் பிடிக்க, மூன்று மணி. அதிக பட்சம் மூன்று மணி பதினைந்து நிமிடங்கள்!' என்று கணக்கு போட்டுக் கொண்டே வெளியே வந்து விட்டார்.

ஆனால், அந்த கிராமத்தில் பஸ் வசதி கிடையாது. அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் போனால் ஒரு சிறு நகரம். அங்கு பஸ் இருக்கிறது என்று ஒரு குதிரை வண்டிக் காரர் சொல்ல, வண்டியில் ஏறி விட்டார். பேசியதற்கு மேல் பத்து ரூபாய் கூடப் போட்டுக் கொடுத்தார். குதிரை குஷியில் கனைத்தது.

'டெல்லி போக பஸ் எங்கே நிற்கும்?' என்று அவர் கேட்டதும் அங்கிருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்காத குறை.

"இங்கேயிருந்து டெல்லிக்கு எல்லாம் பஸ் கிடையாது. நீங்க இங்கிருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்தால் அங்கிருந்து பஸ் கிடைக்கும்!" என்று சொல்ல, 'நல்ல வேளை' என்று மகிழ்ந்தார். "ஆனா அந்த பஸ் இப்ப தான் போனது" என்றான் அந்த ஆள்! அடுத்த பஸ்ஸுக்கு ஒரு மணி நேரம் தேமே என்று காத்திருக்க ஆரம்பித்தார். அப்போதும் கணக்கு போட்டுப் பார்த்து விமானத்தைப் பிடித்து விடலாம் என்று உறுதியாக இருந்தார்.

பக்கத்துக் கடையில் கிடைத்த டிபனை சாப்பிட்டு வைத்தார். டெல்லியில் எதுவும் சாப்பிடாமல் அப்படியே விமான நிலையத்துக்குப் போக வசதியாக இருக்கும் என்பது திட்டம்.

பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்த அந்த லொடலொட பஸ்ஸில் ஏறி ஒரு மணி நேர பயணத்தில் அடுத்த ஊருக்கு வந்தாயிற்று.

இங்கிருந்து சரியாக ஒன்றரை மணி நேரத்துக்குள் டெல்லி போய்விட்டால் போதும். விமானத்தைப் பிடித்து விடலாம்!

அங்கு நின்றிருந்த டெல்லி போகும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து பெருமூச்சு விட்டார். கண்டக்டரிடம் "எப்போது கிளம்பும்?" என்று சந்தேகமாகக் கேட்க, "டிரைவர் வந்தவுடன் கிளம்ப வேண்டியது தான்!" என்று சொல்லி பால் வார்த்தார் கண்டக்டர்.

"நான் ஆறரை மணிக்குள்ளே டெல்லியில் இருக்கணும். விமானத்தைப் பிடிக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே பணத்தை நீட்டியிருக்கிறார்.

"ஆறரை மணிக்கு போகாது சார். ஒரு ஏழு ஏழரை ஆயிடும்!" என்று கண்டக்டர் குண்டைப் போட்டார்.

'ஏழு மணிக்கு இல்லையென்றாலும் ஏழரைக்கு செக்-இன் செய்தாக வேண்டுமே! எப்படி?' என்று தன் திட்டங்கள் தோல்வியைத் தழுவப் போகிறதே என்கிற வேதனையில் அவர் உழல ஆரம்பித்த போது, பக்கத்தில் நின்றிருந்த மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவர் இவருக்கு கடவுளாக வந்து உதவி செய்தார்.

"இப்ப ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லிக்கு இருக்கு சார். இங்கேயிருந்து ஒரே மணி நேரத்தில் போயிடும். இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வருது. என்ன, நின்னுகிட்டு போக வேண்டியிருக்கும்" என்று சொல்ல, அவரைத் தள்ளாத குறையாக, ஸ்டேஷனை நோக்கி ஓட ஆரம்பித்தார்.

டிக்கெட் வாங்கி, முதலாம் பிளாட்பாரம் நோக்கி ஓடி, தூர வந்து கொண்டிருந்த புகைவண்டியைப் பார்த்ததும் தான் மூச்சு விட ஆரம்பித்தார்.

புகைவண்டி வந்து நிற்க, எங்கிருந்து தான் வந்தார்களோ, மக்கள் திமுதிமுவென்று படையெடுக்கின்றனர். எங்காவது இடம் கிடைக்கிறதா என்று தேடித் தேடி, இதோ இந்தப் பெட்டியில் இடம் இருக்கும் போலிருக்கிறதே என்று குதூகலத்துடன் ஏறினார்.

அது எஸ்-2 பெட்டி. உள்ளே உட்கார்ந்திருந்த வழுக்கைத் தலை ஆசாமி இவரைக் கண்டவுடன் நெற்றி சுருக்கி, "அட, நீங்களா?" என்று சொன்னார்!



[நன்றி: http://tamil.sify.com]