Monday, December 06, 2004

வந்து விட்டது.. இன்றைய ஏப்பம்! படித்து விட்டீர்களா?!

ஏப்பம்
வயித்துவலி
இஞ்சி மரப்பா
மண்டைகனம்
பித்தம்
அஜீரணம்
ரணம்
பித்தவெடி
ஆர்டினரி வெடி
சிரங்கு
கட்டி

என்ன இதெல்லாம் என்கிறீர்களா?

புதுமையான பெயர்கள் வாஆஆஆஆஆரம்!

புதுமையான வலைப் பதிவு பெயர்கள் வலம் வர ஆரம்பித்திருக்கின்றன.

வாந்தி என்று ஒன்று வந்திருக்கிறது.

மேற்கூறியவை சீக்கிரமே வரக்கூடும்! :-))

Thursday, December 02, 2004

ஹிஹி.. மையல்!

நான் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறது. அதுவும் உடனடியாக!!

பாருங்கள்.. என் நேற்றைய மடலை அடித்து முடித்து நிமிர்வதற்குள்
மரத்தடியில் இன்று ஒரு மடல். சுரேஷ் கண்ணன் எழுதியிருக்கிறார்:

நகைச்சுவைக்கான சிறுகதைப் போட்டியில்,

மூன்றாம் பரிசு பெற்றிருக்கிற
நாகரத்தினம் கிருஷ்ணாவின்
'ருக்குமணியின் சபதம்' என்கிற சிறுகதை

என்னைக் கவர்ந்தது. இதற்கு முன்னால்
வெளியான முதல், இரண்டாம்,
மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதைகளை விட,

இந்தக் கதை - என்னைப் பொருத்த வரை -
சிறப்பாகவே இருந்தது.

மருந்துக்கும் சிரிப்பே வராத முந்தையக்
கதைகளுக்கு பரிசு கொடுத்திருப்பது
நடுவர்களின் நகைச்சுவை ரசனையை
கேள்விக்குரியதாக ஆக்கியிருக்கிறது.

முதல் மூன்று பரிசு பெற்றவர்கள்

(ஆனந்த் ராகவ், மாலதி, சுபமூகா கணேஷ்)
மற்றும் இந்தக் கதையை எழுதிய நாகி
உட்பட அனைவரும் இணையத்திலும்

எழுதுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

--

படித்து விட்டு மனம் விட்டு
சிரித்துக் கொண்டிருக்கிறேன்!

அன்புடன்,
'சுபமூகா'

Wednesday, December 01, 2004

ஈ-மையல் பற்றி..

அமுதசுரபி இதழில் வெளியான எனது கதையைப் பற்றி
['நான் அனுப்புவது ஈமெயில் அல்ல, மையல்']
கருத்துகள் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

'நன்றாக இருந்தது', 'சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சு' போன்ற

கருத்துகளுடன் சில மாறுபட்ட கருத்துகளையும் பார்க்க முடிந்தது.

நம்ம மரவண்டு, கதையை இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கணும்னு

சொன்னார். வாங்கிற தர்ம அடி இன்னும் கொஞ்சம்
ஜாஸ்தி ஆகணும்னு சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்.
கதையை இப்போது படிக்கும் போது, சில இடங்களில்
கொஞ்சம் இழுவையாக எனக்கே தோன்றுகிறது!

எழுத்தாளர் சித்ரன் என்னோட இன்னொரு கதையை

இது ஞாபகப் படுத்தியதாக சொன்னார். அரைச்ச மாவையே
அரைச்சிருக்கே என்று நேரடியாக சொல்லாமல்,
வாழைப் பழ ஊசி போட்டிருக்கார்னு நினைக்கிறேன்.

அவர் மேற்கோள் காட்டிய அந்த கதை - 'தண்ணி எடுக்கவந்த மச்சான்'.
சாவி அவர்களின் பாராட்டைப் பெற்ற கதை. தண்ணீர் கஷ்டத்தில்

பரிதவிக்கும் சென்னை மாநகரில், தண்ணீர் பிடிக்க வரும் காதலன், காதலி
அவர்கள் நடுவில் மலரும் காதலை கடிதங்கள் வாயிலாக சொல்லும் கதை.

இந்த காதலன், காதலி, காதல், மறுக்கிற மாதிரி ஆக்டிங் கொடுத்தல்

இதெல்லாம் எத்தனை தடவை எப்படி சொன்னாலும் அலுக்காத விஷயம்!!

நான் நகைச்சுவை என்று எழுத ஆரம்பித்தால், காதல் தான்

என் பேனா முனையில் வந்து அமர்கிறது! நான் என்ன செய்ய?! இன்னும்
மச்சான்களும் மையல்களும் தொடரத்தான் செய்யும்! :-))

த.எ.வ.ம கதை முடிவில், பயங்கரமாக மழை பெய்து தண்ணீர்

கஷ்டம் நீங்கி விடுவதாக முடித்திருந்தேன். அந்த இதழ் வெளியான வாரம்,
சென்னை மாநகரில் நிஜமாகவே பயங்கர மழை!
இசை மூலம் மழை பெய்ய வைக்கிற மாதிரி,
ஒரு நகைச்சுவை கதை மூலம் மழை பெய்ய வைக்கலாம்
என்பது அன்று புரிந்தது! [என் நகைச்சுவை கதையைப் படித்து,
அந்த கடவுளே கண்ணீர்விட்டிருக்கிறார் என்றும் கூறலாம்!]

எழுத்தாளர் உஷா ராமச்சந்திரன் 'சிரிப்பே வரவழைக்காத சிரிப்புக் கதை'
என்று மரத்தடியில் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.
இரண்டாம் பரிசு பெற்ற இரண்டு கதைகளில் இந்தக் கதை
முதல் கதையை விட எவ்வளவோ தேவலாம் என்று
பின்குறிப்பு வேறு! இப்போது மூன்றாம் பரிசு பெறும்
மூன்று கதைகளுக்கு என்ன மாதிரி விமர்சனம் வரும்
என்று நினைக்கும் போது, வயிற்றை என்னவோ செய்கிறது..

- - - அந்த இரண்டாம் பரிசு பெற்ற மையல் கதையை விட
இது எவ்வளவோ மேல்!

:-)))

எழுத்தாளர் ஷைலஜா, கதை தூள் என்றிருக்கிறார்.

என் அறிமுகம் இன்னும் அருமை என்றிருக்கிறார்.
[நீ எழுதின கதையை விட உன் கதை அருமை???!!!]

அமுதசுரபி இதழில் என் புகைப்படம் வந்திருப்பதாக சொன்னார்கள்.
இன்னும் பார்க்கவில்லை. [தற்போது லண்டனில் இருப்பதால்]
நான் புகைப்படத்தில் பார்க்க ரொம்பப் பாவமாக இருப்பதாக
நண்பர் ஐயப்பன் சொன்னார்.
சட்டியில் உள்ளது தானே அகப்பையில் வரும்?!

கருத்துகள் சொன்ன அனைவருக்கும், சொல்ல நினைத்து பிறகு
மறந்தோருக்கும், போனால் போகிறது என்று இனி சொல்லப்
போகிறவர்களுக்கும் நன்றிகள்.

அன்புடன்,
'சுபமூகா'



Monday, November 29, 2004

ஈ-மையல்!

எனது சிறுகதை 'நான் அனுப்புவது ஈமெயில் அல்ல மையல்'
அமுதசுரபி இதழ் நடத்திய சிரிப்புச் சிறுகதைப் போட்டியில்
இரண்டாவது பரிசு பெற்றிருக்கும்
மகிழ்ச்சியான செய்தியை
நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
இந்தப் பதிவு..

கதையைப் படிக்க..

மறக்காமல் கருத்து தெரிவியுங்கள்.

அன்புடன்,
'சுபமூகா'

Friday, October 15, 2004

ராசா....

லண்டன்
காலை 6:45

ஒரு தடிமனான ஜெர்க்கினைப் போட்டுக் கொண்டு,
கையில் ஒரு குடை வைத்துக்கொண்டு
வாக்கிங் போவது ஒரு புதுமையான அனுபவம்.

குளிர் கொஞ்சம் படுத்துகிற,
இருள் விலக தயங்கிக் கொண்டிருந்த அதிகாலை!
சூரியன்இங்கு கொஞ்சம் சோம்பேறி தான். வருவதா வேண்டாமா
என்று முடிவெடுக்கவே ஏழு மணியாகி விடுகிறது!

அருமையான சாலைகள்.
விரைந்து கொண்டிருக்கிற எக்கச்சக்க கார்கள்.. கார்கள்.. கார்கள்..
அப்போதைக்கப்போது, புகையைக் கக்கிக் கொண்டு எதிர்ப்படும் காரிகைகள்.
ஒரு மணி நேர நடையை 'நடை கட்டி விட்டுத்' திரும்பும் போது..

அந்த பல்பொருள் அங்காடியில் நுழைந்தேன்.

'நான் breadக்கு மாறிட்டேனே!' அதுக்கு JAM வேண்டியிருந்தது!
கடையில் இருந்த பொருள்களில், அட.. காஞ்சிபுரம் கைக்குத்தல் அரிசி,

ரசப் பொடி.. இப்படியெல்லாம் தமிழ் எழுத்துகள் தெரிந்தன.
அப்போது தான், திடீரென்று அந்தப் பாடல் ஒலித்தது...

மன்மத ராசா, மன்மத ராசா!

ஒரு ஆட்டம் ஆடி விடலாமா என்று கூட யோசித்து விட்டேன்.
15 நாட்கள் கழித்து தமிழ் வார்த்தைகள் காதில் விழுகின்றன.

[அதுவும் முதல் வார்த்தையே மன்மத ராசா!]

இந்தப் பாட்டை சில நாட்களுக்கு முன் என் நண்பர்களிடம் விவாதத்தின் போது கிண்டலடித்துக்கொண்டிருந்தேன்.

இப்போது யோசிக்கையில்..
பாட்டு நன்றாகத் தான் இருக்கிறது!!


சிரித்துக் கொண்டே,
'சுபமூகா'

Thursday, October 07, 2004

சம்பவத்தை மாற்ற நான் ரெடியா?

உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை மாற்ற சந்தர்ப்பம் கிடைத்தால் எதை மாற்றுவீர்கள் ?

வில்லங்கமான கேள்வி. நான் என் தர்மப்பத்தினியின் கழுத்தில் தட்டுத் தடுமாறி மூன்று முடிச்சுகள்போட்ட அந்தத் தருணம் என்று நான் சொல்லி அகப்பட்டுக் கொள்வேன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அப்படி சொன்னாலும் கூட, தட்டுத் தடுமாறாமல் முடிச்சுகள் போட அந்த சம்பவத்தை மாற்றுவேன் என்று மாற்றி விடுவேன்! இதே கேள்வியை என் 'வெகுமதி' இடம் கேட்டிருந்தால், 'சம்பவம் மாத்திரம் மாத்தணுமா? ஆளை மாத்த சான்ஸ் இல்லியா?' என்றிருப்பார்! அவரவருக்கு ஒரு சோகக் கதை!

ம்ம்.. எதை மாற்றலாம்? பிறந்த அந்தத் தருணத்தையே மாற்றியிருந்தால் இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் [இது எப்படி இருக்கு?!] பதில் சொல்ல வேண்டியிருக்காது!


கம்ப்யூட்டர் கனவுகள் பலிக்காமல் ஒரு Travel Agency இல் ஒரு சாதாரண தொழிலாளி ஆன அந்த நேரத்தை சொல்லலாமா? கிடைக்காத விஷயத்தை நினைத்துக் கொண்டு, கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை ஏன் நழுவ விடுவதுஎன்று அருமையான முடிவு எடுத்த தருணம் அல்லவா அது!

இலண்டனில் ஒரு அருமையான அலுவலகத்தில் இருந்து இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு Telephone Operator ஆக என் பயணம் தொடங்கியது. தொடர்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்த உழைப்பில் இன்று கணினி உலகில் உலாவிக் கொண்டிருக்கிறேன். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் திரைப்படத்தில் இதே மாதிரி ஒரு காட்சிவரும். என் கண்கள் கலங்கிப் போகும்.

சம்பவங்களை எதற்கு நாம் மாற்ற ஆசைப் பட வேண்டும்? அது பாட்டுக்கும் அது நடக்கட்டும். அது நம்மை எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாக்கட்டும்! நம் தொடர்ந்த விடா முயற்சி இருக்கிற வரை நமக்கு என்றும் நல்லதே நடக்கும். இது என் வாழ்வு எனக்களித்த அருமையான தீர்ப்பு!

சரி தானே அன்பர்களே!!

[தமிழோவியம் 07/10/2004]



Friday, September 24, 2004

ந.தொ.பே

ந்தக் காலத்தில், ஒரு தெரு முனையில் ஒருவன் இரண்டு கைகளையும் ஆட்டி ஆட்டி பேசி, அப்போதைக்கப்போது சிரித்தும் கொண்டிருந்தால் நாங்கள் கொஞ்சம் தூர ஒதுங்கிப் போவோம். சிறிது தூரம் சென்று, நின்று, திரும்பிப் பார்ப்போம். 'பாவம், யார் பெத்த பிள்ளையோ?!' என்று கூட கரிசனப்பட்டதுண்டு. அடுத்த முறை இதே தெருவில் 'அது' இருக்காது, எங்காவது ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் மோட்டுவளையை வெறித்துப் பார்த்தபடி படுத்திருக்கலாம் என்று கூட மனக்கணக்கு போட்டிருக்கலாம்!

இப்போது அப்படியெல்லாம் இல்லை! ஒரு பைத்தியமே தெரு முனையில் நின்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தால் கூட, யாரோ 'நடமாடும் தொலை பேசியில்' [அதாங்க, மொபைல் ஃபோன்] உரையாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்து, முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் விலகி விடுகிறோம்!

இந்த நடமாடும் தொ[ல்]லை பேசி எந்த அளவுக்கு நம் வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத அளவுக்கு ஒட்டிப் போய்விட்டது!
யாரிடமாவது 'இன்னைக்கு என்ன தேதி?' என்று கேட்டுப் பாருங்கள். படக்கென்று, பேண்ட் பெல்ட்டில் இருந்து ந.தொ.பேயை எடுத்துப் பார்த்துதான் சொல்கிறார்கள்! ஒருவரிடம் நேரம் கேட்ட போது கூட, கடிகாரத்தைப் பார்க்காமல், இதைத் தான் பார்த்தார்! நேரம்!!

சின்னஞ்சிறு குழந்தைகள் பஸ், லாரி, கார் பொம்மை வைத்திருப்பது போல், பெரியவர்களுக்கு இப்போது ந.தொ.பே! அதில் இருக்கிற பித்தான்களை வைத்து, அப்பப்போ இராமாயணம், மகாபாரதம் கணக்காக என்னவோ எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள்! அது என்ன தான் எழுதுகிறார்களோ?!
சிலர் இருக்கிற இசைத் துணுக்குகளைத் தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள். நமக்கு அந்த இசைத் துணுக்குகள் மேல் முழு எரிச்சல் வரும் வரை விடமாட்டார்கள். இதில் வேறு, காதலி எண் ஒன்று கூப்பிட்டால் இந்த இசை, காதலி எண் இரண்டு கூப்பிட்டால் அந்த இசை, மானேஜர் கூப்பிட்டால் 'லொள், லொள்' இப்படியெல்லாம் வகைப் படுத்தல் வேறு வைத்துக் கொண்டு, படுத்துகிறார்கள்.

அவர்களுக்கு ந.தொ.பே அழைப்பு வரும்போது நீங்கள் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? முதல் இசை வரும். அவர் கவனிக்கவே மாட்டார். இரண்டாம் அழைப்புக்கு, டக்கென்று ந.தொ.பேயைக் கையில் எடுப்பார். மூன்றாம் அழைப்பு ஓஓஓவென்று பெரும் குரலில் கூக்குரலிடும்! அப்போது தான் அவர் உன்னிப்பாக அழைத்தவர் யார் என்று நெற்றி சுருக்கி யோசித்துக் கொண்டிருப்பார். ஒரு வழியாக அந்த ஒலியை நிறுத்தி அவர் 'ஹலோ' சொல்வதற்குள், நமக்கு இரத்தக் கொதிப்பு எகிறியிருக்கும்!

ங்கள் அலுவலகத்துக்கு வரும் வெளியாட்கள் பலரையும் கவனித்துப் பார்த்த போது ஒன்று மட்டும் எனக்கு புரிபடவில்லை. அவர் அலுவலகப் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது, அது எப்படி சொல்லி வைத்தாற்போல் சரியாக அழைப்பு வருகிறது? 'ஹய் [அய்??], நான் ஈ ஓட்டீஸ் அண்ட் கம்பெனியில் இருக்கேன்பா, டிஸ்கஷன்!' என்று சொல்லி அணைத்து விடுவார்கள். சிலருக்கு விடாமல் டக்கென்று இன்னொரு அழைப்பு கூட உடனடியாக வந்து பார்த்திருக்கிறேன்! 'எருமை சாணி!' என்று சொல்லி விட்டு, அதற்கும் பதில் சொல்வார். சிலர் ந.தொ.பேயை தற்காலிகமாக சாகடித்தும் பார்த்திருக்கிறேன்! இவர்கள் எல்லாம் தங்கள் நண்பர்களிடம் முன்னமேயே சொல்லி வைத்து, அழைக்க வைக்கிறார்களோ என்று கூட சில சமயங்களில் யோசித்ததுண்டு!

'லோ, சொல்லு!'
'எங்கேயிருக்கே?'
'ஹ்ம்? பல்லவி தியேட்டர்ல? என்ன விஷயம்?'

பக்கத்து சீட் ஆளின் நிலையை நினைத்துப் பாருங்கள். அதுவும் வில்லன் ஹீரோவைக் குறி வைத்து நெருங்கிக் கொண்டிருக்கிற காட்சியாக இருந்தால்?! நற.. நற.. நற..

பெரிய பெரிய கட்டிடங்களுக்குள் இந்த ந.தொ.பே. அழைப்பு வந்து விட்டால், அவர்கள் பாடு பார்ப்பதற்கு ரொம்ப சுவாரசியமாக இருக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பக்கம் திரும்பி விட்டு, முடியாமல், வட மேற்கு, தென் கிழக்கு பக்கம் கொஞ்சம் முயன்று, அப்போதும் முடியாமல் 'ஒரு நிமிஷம்' சொல்லி, அவசரமாக 'இயற்கை அழைப்பு'க்கு பதில் சொல்ல ஓடுகிற மாதிரி, அவர்கள் திறந்த வெளி நோக்கி ஓடும் அழகே அழகு!

'லோ முண்டம்'
'சொல்லுப்பா!'
'என்ன சொல்லுப்பா? நான் நேத்திக்கு என்ன சொன்னேன்?'
'என்ன சொன்னே? சரியா எட்டு மணிக்கு வரச் சொன்னே..'
'அதெல்லாம் வக்கணையா சொல்லு. இப்ப மணி என்ன?'
'எட்டுக்கு இன்னும் ரெண்டு நிமிஷம் இருக்கு! நீ எங்கே இருக்கே?'
'ரொம்ப ஒழுங்கு. நான் சொன்ன நேரத்துக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னேயே இங்கே இருக்கேன்'
'எங்கே இருக்கே?'
'நான் சொன்ன இடத்திலேயே! ஜனதா பஜார் எதிர்க்க.. பஸ் ஸ்டாப்லே!'
'ஓ, நானும் அங்க தான் இருக்கேன். திரும்பிப் பாருடா முட்டாள், உனக்கு அடுத்து நாலாவது ஆளா நான் தான் நின்னுகிட்டிருக்கேன்!'
'ஓ, வந்துட்டியா? இப்ப 12A வரும். அதுல போயிடலாமா?'
'இல்லை, ஆட்டோல போயிடலாம்.'
'ஓகே. பை!'

இரண்டு பேரும் ந.தொ.பே.களை அணைக்கிறார்கள்! இதற்குப் பெயர்தான் விஞ்ஞான முன்னேற்றம்!

என் நண்பன் ஒருவன் ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை தன் நண்பிக்கு SMS அனுப்புவான். அப்படி என்ன தான் அனுப்புவார்களோ என்று நான் ரொம்பத்தான் கவலைபட்டுக் கொண்டதுண்டு. ஒவ்வொரு நிமிடமும் அவன் முகத்தில் குறும்பு நர்த்தனமாடிக் கொண்டிருக்கும்!

இன்னும் சில பல வருடங்களில் காதல் என்பது தன் முக்கியத்துவத்தை, தனித்துவத்தை இழந்து விடுமோ என்று தோன்றுகிறது! அப்போதெல்லாம் ஒரு கடுதாசி எழுதி நம் மனம் கவர்ந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவள் என்ன பதில் எழுதுவாளோ என்று பரிதவித்துக் காத்திருந்து, அந்த மடல் வரும் போது, மனம் அடையும் அந்த குதூகலம் இப்போது இருக்கிறதா?!

'இன்னாமே! நான் உன்னை விரும்புறேன்! நீ என்னை விரும்புறியா?' கீய்ய்ய்ய்ய்ய்க்.. அனுப்பப் பட்டது! ஐந்து விநாடிகளுக்குப் பிறகு. கீய்ய்ய்ய்ய்ய்க்.. 'இல்லை! நான் அப்படியெல்லாம் பழகவில்லை!'

இப்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு, இந்த ந.தொ.பேயை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
'அம்பது பைசா குடு சார். காஷ்மீரோட பேசிக்க!'
'ராத்திரி பேசு நைனா, காசே குடுக்காதே!'
'எத்தினி வாட்டி வேணா sms அனுப்பிக்க! free!!'
'உன் ஊட்டுக்கு மாத்திரம் பேசு. பேசு. பேசு. பேசிக்கிட்டே இரு!'

இப்படியெல்லாம் ஆட்களை இழுத்துப் போட எக்கச்சக்க தந்திரங்கள்!
ஒரு காலத்தில், தூர்தர்ஷன் வெள்ளிக்கிழமை தோறும் ஒளியும் ஒலியும் என்று ஒரு நிகழ்ச்சி வழங்கியது. ஏழரை மணிக்கே எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, கைகளில் ஈரத்தை ஒற்றி எடுத்தபடி, ஒரு கும்பல் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமரும்! நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன், எல்லோர் முகங்களிலும் ஒரு ஆர்வம் வந்து அமர்ந்திருக்கும்.

இப்போது நிமிடத்துக்கு நிமிடம், சேனலுக்கு சேனல், ஒளியும் ஒலியும் நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. அடுப்படியில் இருந்து அப்போதைக்கப்போது எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லும் ஆர்வமின்மையும் வந்தாயிற்று.

'ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்!'

இந்த மாதிரி கவித்துவமாக நினைத்து அவசரமாகத் தொலைபேசியை எடுத்து ஆரவாரமாகப் பேசும் நிலை போய்.... இன்னும் சில நாட்களில்..

'ம் ம் ம் ம் ம்.. சொல்லுப்பா, எதுக்கு போன் பண்ணே?'

Sunday, August 22, 2004

பெங்களூரில் ஒரு மழை நாள் மாலையில்..

என் மேல் விழுந்த மழைத் துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
இப்படியெல்லாம் பாட மனம் வரவில்லை. 'பாவி ஐயப்பா, என்னை இந்த மாதிரி மழையில்
மாட்ட வைத்து விட்டாயே!' என்று திட்டிக் கொண்டே Hotel Woodlands நோக்கி
ஓடினேன்.

செல் போன் ஒலித்தது.
'என்ன ஐயப்பன்? எங்க இருக்கீங்க? நீங்க உட்லண்ட்ஸ் முன்னால என்னை வரவேற்க
மாலையோட காத்திருப்பீங்கன்னு நினைச்சேன்..'

'நான் உங்களை வரச் சொன்னது ஏழு மணிக்கு. அங்கேயே ரோட்டில போற
வர்றவங்களைப் பார்த்தபடி நில்லுங்க. நான் வந்துடறேன்' என்றார் ஐயப்பன் கொஞ்சம்
கூட இரக்கமில்லாமல்!

'நான் இங்க காவேரியில் இருக்கேன். பயங்கர ட்ராபிக் ஜாம். வந்து சேர ஒரு
அரை மணி ஆகும்! நான் மேடத்துக்கு போன் போட்டு சொல்லிடறேன். நாங்க
வர்ற வரைக்கும் நீங்க பேசிக்கிட்டிருங்க' என்றார்.


'ஹல்லெல்லா ஹோக்கூடுது!'
அட! நான் இருபது வருடத்துக்கு முன் பேசிய கன்னடம் அல்லவா இது! வியந்து,
பேசியது யார் எனப் பார்க்கலாம் என்று திரும்ப...

ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க பெண்மணி, தன் பதினாறு வயது
மதிக்கத் தக்க மகளிடம் பேசிக் கொண்டிருந்தார். [பெண்களுக்கு வயது - என்றும் பதினாறு!]

என் செல்போன் மீண்டும் ஒலிக்க.. 'கணேஷ், எங்க இருக்கீங்க?' என்றது ஒரு பெண்குரல்.

'உட்லண்ட்ஸ் ரிசப்ஷன்'
'நானும் தான்!'
என்றபடி திரும்பினார்.. அட, அதே கன்னட பெண்மணி தான்!!!!

அடடா, அவர் நம்ம இன்றைய guest .. தமிழில் வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளர் ..
அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

'எனக்கும் தாய் மொழி கன்னடம் தான்!'
'ஹவ்தா?' என்று மலர்ந்தார்.

'உங்க படைப்புகள் எல்லாம் படிச்சிருக்கேன். நல்லா எழுதறீங்க!'

உச்சந் தலை஢யில், குளுகுளு எண்ணெய் வைத்த மாதிரி இருந்தது எனக்கு.

'சமீபத்தில் நீங்க எழுதின அந்த கவிதை சூப்பர்' என்றார் தொடர்ந்து.

க.. வி.. தை.. யா???!!! அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரமாச்சே?!

என் 'தேள் கடி கிடைத்த திருடன்' பார்வை பார்த்ததும் அவரும் குழம்பி..

'நீங்க தானே மரவண்டு?' என்று சொல்ல எனக்கு வண்டு குடைந்த மாதிரி இருந்தது.
'இல்லீங்க, நான் ரொம்ப நல்லவன். நான் கணேச மூர்த்தி!' என்று திருத்தினேன்.
[கணேஷ் வண்டு, கோச்சுக்காதப்பா, சும்மாச்சுக்கும் உண்மைய சொன்னேன்!]

'சின்ன வயதிலிருந்தே எழுதறீங்களா?' [இப்ப உங்களுக்கு வயசாச்சுன்னு சொல்லாம சொல்லிட்டேன்ல!!]

'இல்லை, இப்ப தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே தான் 'அ' போட்டேன்' என்றார்.

அப்படிப் போடு!...

உயிர்மை விழா பற்றி .. அங்கு பார்த்த எழுத்தாளர்களைப் பற்றி .. [அடடா, நான் பார்க்க முடியாத
சுஜாதாவைப் பார்த்துப் பேசி இருக்கீங்களே!] எல்லாம் சொல்லி, காமிராவில் படம் காட்டிக்
கதை சொன்னார்.

ஐயப்பன் திரும்ப செல்லில்.. 'வந்துகிட்டே இருக்கேன்!' என்றார்.
'இப்ப எங்க இருக்கீங்க?'
'காவேரியில்!' என்று சொல்லி கட் பண்ணி விட்டார்.
'அடப்பாவிகளா?! இன்னும் காவேரியிலயா?' என்று விவேக் பாணியில் புலம்பினேன்.
அவர் காவேரி ஹேண்டிகிராப்ட்ஸை சொன்னாரா? இல்லை, காவேரி ஆற்றில் நீந்திக்
கொண்டிருக்கிறாரா என்று புது சந்தேகம் வந்தது!

உட்லண்ட்ஸ் ஹோட்டலில் இவ்வளவு நேரம் இசைத்துக் கொண்டிருந்த மெல்லிய
மேல் நாட்டு சங்கீதம் நிறுத்தப்பட்டு, கர்நாடக சங்கீதம் இசைக்க ஆரம்பித்தது.
'ஏன் இந்த திடீர் மாற்றம்?' என்று சந்தேகத்துடன் பார்த்தால்.. நம்ம
லலிதா ராம் வந்து கொண்டிருந்தார். புன்னகை பரிமாற்றம்.. மற்றும் நல
விசாரிப்புகள்.. லலிதா ராம் 'நான் யார்னு சொல்ல மாட்டேன். நீங்களே
கண்டு பிடிங்க பார்க்கலாம்!' என்று அடம் பிடித்தார். 'ஒரு பாட்டு பாடினா
கண்டு பிடிச்சிடலாம்!' என்று நான் க்ளூ கொடுக்க, நம் எழுத்தாள விருந்தினர்
கண்டு பிடித்து விட்டார்.

அப்படி.. இப்படி என்று ஒரு பதினைந்து நிமிடம் கழித்து.. ஐயப்பன் வந்து சேர,
பின்னாலேயே புலி வந்தது. மன்னிக்க வேண்டுகிறேன்.. ஐயப்பனைப் பார்த்த
மகிழ்ச்சியில் சரியாக கவனிக்கவில்லை. அது.. ஷக்தி.

ஷக்தி கூட இலவச இணைப்பாக, நம் மரத்தடியின் எதிர்கால உறுப்பினரும்
வந்திருந்தார். அவரது மகள்! 'ஏன் இந்த சந்திப்புக்கு வந்து வாங்கிக்
கட்டிக் கொண்டோ ம்?!' என்று அவர் வருத்தப் பட்ட கதையைப் பிறகு
சொல்கிறேன்!

செவிக்கு உணவு கொஞ்சம் வயிற்றுக்கும் சேர்த்து என்று முடிவு
செய்து களத்தில் இறங்கினோம்!

அப்போது இடி இடிக்க ஆரம்பித்தது. உட்லண்ட்ஸ் கலகலத்துப் போனது.
அந்த ஹோட்டலில் எல்லோரும் கிசுகிசுவென்று பேசிக் கொண்டிருக்க
நம் குழு உரத்த குரலில் மரத்தடி பற்றி 'கிசுகிசு' பரிமாறிக் கொண்டிருந்தது.
[என்ன கிசுகிசு? விபரங்கள் தனி மடலில் மட்டும்!]

பல பல பக்கங்கள் கொண்ட மெனு புத்தகத்தைப் பக்கம் பக்கமாக ஆராய்ந்து
உதடு பிதுக்கி, போனால் போகிறது என்கிற மாதிரி
எல்லோருக்கும் தோசை ஆர்டர் செய்தார்கள்.
நமது 'குட்டி இலவச இணைப்புக்கும்' ஒரு தோசை
ஆர்டர் செய்ய, ஷக்தி 'வேணாம், வேணாம். அவ
அதெல்லாம் சாப்பிடமாட்டா. எனக்கு கொடுக்கிற
தோசையில் கொஞ்சம் கொடுத்துக்கிறேன்!' என்று
தடுத்து விட்டார்.

தோசை வர வழக்கம் போல் தாமதமாக.. [இப்ப தான்
மாவு அரைக்கிறாங்கப்பா!] ஒருவரை ஒருவர் கலாய்க்க
ஆரம்பித்தனர். ஒரே சிரிப்பு மழை..


'ஒரே பாடலில் வேறு வேறு ராகங்கள்
இருக்க சாத்தியமா?' என்று கேட்டார்
நம் விருந்தினர் ராமிடம்.

'அதுக்கு பேர் ராகமாலிகா' என்று
சொல்லி, அழகாக அதற்கு சில
உதாரணங்களையும் சொன்னார் ராம்!

[எனக்கு தெரிஞ்சு, கலை, இலக்கியம்
பத்தி நாங்க ஒழுங்கா பேசினது இது
ஒண்ணு தான்னு நினைக்கிறேன்!]

வந்திருந்த கஸ்டமர்கள் இரண்டு மூன்று பேர் இனி
உட்லண்ட்ஸ் பக்கமே தலை வைத்துப்
படுப்பதில்லை என்று வெளியேறியதும், நாங்கள்
பில் கேட்காமலேயே பில் கொடுக்கப் பட்டது.

ஷக்தி, தன் நெற்றிக் கண்ணைத் திறக்காதது
தான் பாக்கி. அந்த சோகக் கதையையும்
சொல்லி, முடித்து விடுகிறேன்..

ஷக்திக்கு எதிரே வைக்கப் பட்ட தோசையில்
ஒரு சிறு பகுதி கூட ஷக்திக்கு கிடைக்கவில்லை.
கொஞ்சம் கூட விட்டு வைக்காமல், முழுக்க
தின்று தீர்த்தார் அவரது மகள். 'போதுமா?
போதுமா?' என்று திரும்பத் திரும்ப ஷக்தி
கேட்பதும், 'இன்னும், இன்னும்' என்று
மகள் தின்பதுமாக..

'ஷக்தி, இன்னொரு தோசை ஆர்டர்
செய்துடலாமா?'

'இல்லை, வேணாம். அவங்க திரும்ப
மாவரைக்க லேட்டாயிடும். இவ
முழுக்க சாப்பிடமாட்டா, கொடுத்துடுவா!'
என்று மிக நம்பிக்கையுடன் சொல்லிக்
கொண்டிருந்தார்!!!!

ஊஹும், அவர் நம்பிக்கை பலிக்கவில்லை.
'ஏண்டி, வீட்ல நான் தோசை போட்டு
கொடுத்தா மூஞ்சியை திருப்பி வச்சுக்கறே!
இங்க விழுந்து விழுந்து சாப்பிடுறயே?'
என்று பொரிந்து தள்ளினார்.

'நீ நல்லாவே பண்றதில்லை!'


அட, யார் அந்த எழுத்தாள விருந்தினர்னே சொல்லலியா?
அது, வேறு யாருமல்ல,
நமது தோழி, ராமச்சந்திரன் உஷா!

அவரது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக
பெங்களூர் மற்றும் மைசூரை சுற்றிப் பார்க்க
வந்திருந்தார். பெங்களூர் மரத்தடி
நண்பர் குழுவுடன் அருமையான
மாலைப் பொழுது அவருக்கு
கிடைத்ததா என்பதை அவர் தான்
சொல்ல வேண்டும்!


அன்புடன்,
'சுபமூகா'

Saturday, August 21, 2004

நண்பர்களுக்கு வணக்கங்கள்.

என் வீட்டுக்கு வந்திருக்கீங்க.

மத்தவங்க வீடு மாதிரி நம்ம வீடு பெரிய வீடு எல்லாம் இல்லீங்கோ!
சின்னவீடுன்னு சொன்னாலும் வேறஅர்த்தம் வர்றதாலே..
ஜஸ்ட் வீடு..அம்புட்டுதேன்!

நான் அப்பப்ப எழுதற கதை,கட்டுரைகளை
இங்க போட்டுவைக்கப் போறேன்.

நீங்களும்என்னைக் கொஞ்சம் தட்டிக்கொடுத்தா
[இங்கேயும் ரெண்டுஅர்த்தம் இருக்கோ?!]
ரொம்ப பெருமைப் படுவேன்.

அப்பப்ப வாங்க..

அன்புடன்,
'சுபமூகா'