Monday, December 06, 2004

வந்து விட்டது.. இன்றைய ஏப்பம்! படித்து விட்டீர்களா?!

ஏப்பம்
வயித்துவலி
இஞ்சி மரப்பா
மண்டைகனம்
பித்தம்
அஜீரணம்
ரணம்
பித்தவெடி
ஆர்டினரி வெடி
சிரங்கு
கட்டி

என்ன இதெல்லாம் என்கிறீர்களா?

புதுமையான பெயர்கள் வாஆஆஆஆஆரம்!

புதுமையான வலைப் பதிவு பெயர்கள் வலம் வர ஆரம்பித்திருக்கின்றன.

வாந்தி என்று ஒன்று வந்திருக்கிறது.

மேற்கூறியவை சீக்கிரமே வரக்கூடும்! :-))

Thursday, December 02, 2004

ஹிஹி.. மையல்!

நான் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறது. அதுவும் உடனடியாக!!

பாருங்கள்.. என் நேற்றைய மடலை அடித்து முடித்து நிமிர்வதற்குள்
மரத்தடியில் இன்று ஒரு மடல். சுரேஷ் கண்ணன் எழுதியிருக்கிறார்:

நகைச்சுவைக்கான சிறுகதைப் போட்டியில்,

மூன்றாம் பரிசு பெற்றிருக்கிற
நாகரத்தினம் கிருஷ்ணாவின்
'ருக்குமணியின் சபதம்' என்கிற சிறுகதை

என்னைக் கவர்ந்தது. இதற்கு முன்னால்
வெளியான முதல், இரண்டாம்,
மூன்றாம் பரிசு பெற்ற சிறுகதைகளை விட,

இந்தக் கதை - என்னைப் பொருத்த வரை -
சிறப்பாகவே இருந்தது.

மருந்துக்கும் சிரிப்பே வராத முந்தையக்
கதைகளுக்கு பரிசு கொடுத்திருப்பது
நடுவர்களின் நகைச்சுவை ரசனையை
கேள்விக்குரியதாக ஆக்கியிருக்கிறது.

முதல் மூன்று பரிசு பெற்றவர்கள்

(ஆனந்த் ராகவ், மாலதி, சுபமூகா கணேஷ்)
மற்றும் இந்தக் கதையை எழுதிய நாகி
உட்பட அனைவரும் இணையத்திலும்

எழுதுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

--

படித்து விட்டு மனம் விட்டு
சிரித்துக் கொண்டிருக்கிறேன்!

அன்புடன்,
'சுபமூகா'

Wednesday, December 01, 2004

ஈ-மையல் பற்றி..

அமுதசுரபி இதழில் வெளியான எனது கதையைப் பற்றி
['நான் அனுப்புவது ஈமெயில் அல்ல, மையல்']
கருத்துகள் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

'நன்றாக இருந்தது', 'சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சு' போன்ற

கருத்துகளுடன் சில மாறுபட்ட கருத்துகளையும் பார்க்க முடிந்தது.

நம்ம மரவண்டு, கதையை இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கணும்னு

சொன்னார். வாங்கிற தர்ம அடி இன்னும் கொஞ்சம்
ஜாஸ்தி ஆகணும்னு சொல்லியிருப்பார்னு நினைக்கிறேன்.
கதையை இப்போது படிக்கும் போது, சில இடங்களில்
கொஞ்சம் இழுவையாக எனக்கே தோன்றுகிறது!

எழுத்தாளர் சித்ரன் என்னோட இன்னொரு கதையை

இது ஞாபகப் படுத்தியதாக சொன்னார். அரைச்ச மாவையே
அரைச்சிருக்கே என்று நேரடியாக சொல்லாமல்,
வாழைப் பழ ஊசி போட்டிருக்கார்னு நினைக்கிறேன்.

அவர் மேற்கோள் காட்டிய அந்த கதை - 'தண்ணி எடுக்கவந்த மச்சான்'.
சாவி அவர்களின் பாராட்டைப் பெற்ற கதை. தண்ணீர் கஷ்டத்தில்

பரிதவிக்கும் சென்னை மாநகரில், தண்ணீர் பிடிக்க வரும் காதலன், காதலி
அவர்கள் நடுவில் மலரும் காதலை கடிதங்கள் வாயிலாக சொல்லும் கதை.

இந்த காதலன், காதலி, காதல், மறுக்கிற மாதிரி ஆக்டிங் கொடுத்தல்

இதெல்லாம் எத்தனை தடவை எப்படி சொன்னாலும் அலுக்காத விஷயம்!!

நான் நகைச்சுவை என்று எழுத ஆரம்பித்தால், காதல் தான்

என் பேனா முனையில் வந்து அமர்கிறது! நான் என்ன செய்ய?! இன்னும்
மச்சான்களும் மையல்களும் தொடரத்தான் செய்யும்! :-))

த.எ.வ.ம கதை முடிவில், பயங்கரமாக மழை பெய்து தண்ணீர்

கஷ்டம் நீங்கி விடுவதாக முடித்திருந்தேன். அந்த இதழ் வெளியான வாரம்,
சென்னை மாநகரில் நிஜமாகவே பயங்கர மழை!
இசை மூலம் மழை பெய்ய வைக்கிற மாதிரி,
ஒரு நகைச்சுவை கதை மூலம் மழை பெய்ய வைக்கலாம்
என்பது அன்று புரிந்தது! [என் நகைச்சுவை கதையைப் படித்து,
அந்த கடவுளே கண்ணீர்விட்டிருக்கிறார் என்றும் கூறலாம்!]

எழுத்தாளர் உஷா ராமச்சந்திரன் 'சிரிப்பே வரவழைக்காத சிரிப்புக் கதை'
என்று மரத்தடியில் உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.
இரண்டாம் பரிசு பெற்ற இரண்டு கதைகளில் இந்தக் கதை
முதல் கதையை விட எவ்வளவோ தேவலாம் என்று
பின்குறிப்பு வேறு! இப்போது மூன்றாம் பரிசு பெறும்
மூன்று கதைகளுக்கு என்ன மாதிரி விமர்சனம் வரும்
என்று நினைக்கும் போது, வயிற்றை என்னவோ செய்கிறது..

- - - அந்த இரண்டாம் பரிசு பெற்ற மையல் கதையை விட
இது எவ்வளவோ மேல்!

:-)))

எழுத்தாளர் ஷைலஜா, கதை தூள் என்றிருக்கிறார்.

என் அறிமுகம் இன்னும் அருமை என்றிருக்கிறார்.
[நீ எழுதின கதையை விட உன் கதை அருமை???!!!]

அமுதசுரபி இதழில் என் புகைப்படம் வந்திருப்பதாக சொன்னார்கள்.
இன்னும் பார்க்கவில்லை. [தற்போது லண்டனில் இருப்பதால்]
நான் புகைப்படத்தில் பார்க்க ரொம்பப் பாவமாக இருப்பதாக
நண்பர் ஐயப்பன் சொன்னார்.
சட்டியில் உள்ளது தானே அகப்பையில் வரும்?!

கருத்துகள் சொன்ன அனைவருக்கும், சொல்ல நினைத்து பிறகு
மறந்தோருக்கும், போனால் போகிறது என்று இனி சொல்லப்
போகிறவர்களுக்கும் நன்றிகள்.

அன்புடன்,
'சுபமூகா'