Tuesday, January 10, 2006

1234உம் ஒரு துப்பட்டாவும்

1234உம் ஒரு துப்பட்டாவும் [அல்லது]
92 + 64 = 1234 [அல்லது]
1234 - 1 [அல்லது]
அவன் பார்க்கிறான்.. பார்க்கிறான் [அல்லது]
பார்வைகள்



துப்பட்டாவை சரி செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணியபடி பஸ்ஸிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த 1234 சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

'சே, என்ன மடத் தனம்?' என்று மனசுக்குள் தன்னைத் தானே திட்டித் தீர்த்தபடி மானசீகமாக தலையில் நங்கென்று ஒரு குட்டும் வைத்தாள்.

காலையில் தான் அம்மா படித்துப் படித்து சொன்னாள். அவள் சொல்கிற மாதிரியே தான் நானும் ஏதாவது செய்து விடுகிறேன்!

92 எப்போதும் அப்படித் தான். காலையில் எழுந்ததும் பல் விளக்க மறந்தாலும், தன் மகளின் அருமையான ஒளி மயமான எதிர் காலத்துக்கு அறிவுரைகள் சொல்ல மட்டும் மறக்க மாட்டாள். எங்கே தான் மறைத்து வைத்திருப்பாளோ அத்தனை அறிவுரைகளையும்? ஒவ்வொன்றாக எடுத்து விடுவாள்.

ஆனால் 64 அப்படியெல்லாம் இல்லை. மகள் எப்போதும் அப்பா செல்லம் தான். 'சின்ன பொண்ணு! அப்படித் தான் இருப்பா. உன் மாதிரி அவ என்ன எருமை மாடா? இப்ப தான் கன்னுக் குட்டி!' என்று சொல்லி பகபகவென்று சிரிப்பார்.

'நீங்க தான் உங்க பொண்ணை மெச்சிக்கணும்!' என்று 92 கழுத்தை நொடித்துவிட்டு போவாள்.

அம்மா அப்படி எடுத்து எடுத்து சொன்னாலும் நான் ஏன் இப்படி மறந்து போகிறேன்? வயதாகி விட்டதோ எனக்கு? நினைத்து விட்டு க்ளுக்கென்று சிரித்தாள் 1234.

92இன் அடுத்த அறிவுரை ஞாபகத்துக்கு வந்தது. 'கண்ட கண்ட இடத்திலே நின்னுகிட்டு உனக்கு நீயே சிரிச்சுக்கறது - இதென்ன கெட்ட பழக்கம்?'

ஓ, அம்மா, நான் நின்னுகிட்டு சிரிக்கலை, நடந்துகிட்டே சிரிக்கிறேன்! நினைத்தவள் ஓவென்று வாய்விட்டே சிரித்து விட்டாளோ? பக்கத்து பஸ் ஸ்டாப்பில் நான்கு இளைஞர்கள் சட்டென்று திரும்பிப் பார்த்தனர்.

அவர்கள் கண்களைக் கண்டதும் கோபம் கோபமாக வந்தது 1234க்கு.
வேண்டாம்! இப்படியே காலேஜ் போனால் வகுப்பிலிருக்கும் 1180 உம், 1028 உம், அதாவது பரவாயில்லை.. அந்த லெக்சரர் 996உம் 'ஈ..' என்று இளித்து நொள்ளைப் பார்வை பார்ப்பார்கள். பேசாமல் வீட்டுக்கு திரும்பிப் போய் விடலாம். போய் துப்பட்டா அணிந்து கொண்டு திரும்ப வரலாம் என்று நினைத்தபடி பஸ்ஸைப் பிடிக்கக் கிளம்பினாள் 1234.

[இதென்ன 2100 ஆம் வருடத்துக்கான விஞ்ஞானக் கதையா என்றெல்லாம் கேட்க வேண்டாம். வேலியில் ஓடுகிற 121 ஐ எதற்கு வேட்டியில் விட்டுக் கொள்ள வேண்டும்? யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காத வகையில் கதை எழுத நினைப்பவர்கள் இந்த உத்தியைக் கடைபிடிக்கலாம். இதிலும் ஏதாவது தவறு கண்டுபிடிக்கிறவர்களுக்கு இப்போதே சொல்லி விடுகிறேன் - அதற்கு காரணம், இந்தக் கதையை எழுத எனக்கு உதவிய எனது 'பேய்' எழுத்தாளர்கள் தான்!]

5 பின்னூட்டங்கள்:

said...

சரி நக்கலுங்க..நம்ம பதிவுக்கு வந்ததுக்கு நன்றி

said...

1028 என்று எங்கள் தங்கத்தலைவரின் சிறை எண்ணைக் குறிப்பிட்டு உள்நோக்கத்தோடு கதை எழுதிய சுபமூகாவைக் கண்டிக்க, தோழர்களே திரண்டு வாரீர்.

இது எப்படி இருக்கு??

said...

சுரேஷ்,

கருத்துக்கு நன்றி.

நல்லா இருக்கு :-)

said...

good one.

said...

இப்போது தான் காணக்கிடைத்தது...கதை அருமை...ஆமாம் அந்த நெம்பருக்கெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கு தானே ????