Tuesday, January 17, 2006

என்னை நோகடிக்க வருவாளோ?

பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாக தேவாவின் நேர்காணலை சன் டிவி வழங்கியது. தேவா சொன்ன இந்த நிகழ்வு என்னை சிரிக்க வைத்ததோடல்லாமல் நிரம்ப சிந்திக்க வைத்து விட்டது.

சென்னையில் நடந்த ஒரு பெரிய விழாவில் தேவா சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக இருந்த போது, ஒரு விஐபி பேச்சாளர் பேச ஆரம்பித்தார். எல்லோருக்கும் நல்வரவு சொல்லிக் கொண்டே வந்த அந்தப் பெருந்தகை தேவாவைப் பற்றி பேச்சை ஆரம்பித்தபோது -

'தேவாவைப் பற்றி நான் சொல்லித் தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அவர் இப்போதிருக்கும் இசையமைப்பாளர்களில் அரிய ஒரு இடத்தை அடைந்திருக்கிறார். அவர் பாடல்களை எல்லாம் கேட்கும் போது எப்படி தான் இவர் இந்த மாதிரி பாடல்கள் அமைக்கிறாரோ என்று வியந்திருக்கிறேன். ஆனால் அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும் அடக்கமாக இருப்பவர். உதாரணத்திற்கு ஒரு பாடலை சொல்ல வேண்டும்.

'என்னைத் தாலாட்ட வருவாளோ!' என்றாராம்.

தேவா உடனே வேகவேகமாக கையசைத்து 'ஐயோ, அது நான் இசையமைத்ததில்லை! இளையராஜா!' என்று அபிநயத்தாலே சொல்லிப் பார்த்தாராம். 'தேவா, நீங்கள் என்றைக்கும் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள்!' என்று சொல்லி விட்டு, 'அப்புறம்.. இந்தப் பாடலைப் பாருங்கள் -

இன்னிசை பாடிவரும்... ' என்றாராம்!!!

'அடடா, அது எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்தது!' என்று கொஞ்சம் உரக்கவே 'எஸ்..' என்று ஆரம்பிக்க 'எஸ் என்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்!' என்று அடுத்த பாடலுக்கு தாவி விட்டாராம்.

'அன்றைக்கு அவர் சொன்ன பாடல்களில் ஒன்று கூட என்னுடையதில்லை என்று வருந்தினேன்!' என்று சிரித்துக் கொண்டே சொன்னார் தேவா.

உடனே சமயோசிதமாக 'கவலைப் படாதே சகோதரா!' இசைத் துணுக்கை ஒளிபரப்பினார்கள்.

லட்சோப லட்சம் பேரை சென்றடையும் ஒரு பேட்டியில் மனதார ஒரு கருத்தை இப்படி சொல்ல எல்லோராலும் முடியாது என்று ஒரு கணம் எனக்கு தோன்றியது.

தமிழ் எங்கே? இங்கே!

பொங்கல் திருநாள். மதுரை மாநகரில் பொங்கல் திருநாள் எப்படி நிகழ்கிறது என்று பார்க்கலாம் என்று சென்றிருந்தேன்.

வீதியெங்கும் வீதியை மறைத்து வைத்ததைப் போல், வண்ணக் கோலங்கள்! ஒவ்வொரு கோலத்திற்கும் பக்கத்தில்..

WELCOME TO HAPPY PONGAL !


[இங்கேயே முடித்து விட்டால் இது ஒரு அருமையான புதுக் கவிதைக்குக் கருவாக அமையும்!]

ஒரு வீட்டின் கதவைத் தட்டினேன். ஒரு பெண் கதவைத் திறந்தாள்.

'யாராவது அமெரிக்காவிலிருந்து வருகிறார்களா?' என்றேன்.

'இல்லை! எனது அப்பா தான் ஆட்டையாம்பட்டியிலிருந்து வருகிறார்!' என்றது அந்தப் பெண்!

'எனக்கு ஒரு சந்தேகம். தமிழர் திருநாளில் எங்கு பார்த்தாலும் HAPPY PONGAL என்று ஆங்கிலம் ஏன்?' என்று கேட்டே விட்டேன்.

'நீங்கள் வீட்டின் முகப்பைப் பார்க்கவில்லை போலிருக்கிறது!' என்றாள் அவள்.

வீட்டின் முகப்பைப் பார்க்க அங்கு -
'இனிய பொங்கல் திருநாளுக்கு நல்வரவு!'
என்று எழுதியிருந்தது.

'தமிழை வீட்டின் முகப்பில் ஏற்றி விட்டோம். ஆங்கிலத்தை வீதியில் வீசி எறிந்து விட்டோம்!' என்றாள் அவள் பெருமிதத்தோடு!

ரசித்து கைதட்ட வைத்து விட்டார் பேராசிரியர் அப்துல் காதர். சென்னையில் 29வது புத்தகக் கண்காட்சியில் மனதைக் கவர்ந்த கவியரங்கத்தில்!

Wednesday, January 11, 2006

[கல் என நகைக்க வைத்த] கல்

விஞ்ஞானம் எப்படியெல்லாம் முன்னேறியிருக்கிறது!

மழை, வெயில், பனி, காற்று, நிலநடுக்கம் இதையெல்லாம் ஒரு கல்லை வைத்தே
கண்டுபிடிக்க முடிகிறது இப்போது!

என்னை சிலிர்க்க வைத்த செய்தியை இதோ பகிர்ந்துகொண்டு விட்டேன்.






Tuesday, January 10, 2006

1234உம் ஒரு துப்பட்டாவும்

1234உம் ஒரு துப்பட்டாவும் [அல்லது]
92 + 64 = 1234 [அல்லது]
1234 - 1 [அல்லது]
அவன் பார்க்கிறான்.. பார்க்கிறான் [அல்லது]
பார்வைகள்



துப்பட்டாவை சரி செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணியபடி பஸ்ஸிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த 1234 சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

'சே, என்ன மடத் தனம்?' என்று மனசுக்குள் தன்னைத் தானே திட்டித் தீர்த்தபடி மானசீகமாக தலையில் நங்கென்று ஒரு குட்டும் வைத்தாள்.

காலையில் தான் அம்மா படித்துப் படித்து சொன்னாள். அவள் சொல்கிற மாதிரியே தான் நானும் ஏதாவது செய்து விடுகிறேன்!

92 எப்போதும் அப்படித் தான். காலையில் எழுந்ததும் பல் விளக்க மறந்தாலும், தன் மகளின் அருமையான ஒளி மயமான எதிர் காலத்துக்கு அறிவுரைகள் சொல்ல மட்டும் மறக்க மாட்டாள். எங்கே தான் மறைத்து வைத்திருப்பாளோ அத்தனை அறிவுரைகளையும்? ஒவ்வொன்றாக எடுத்து விடுவாள்.

ஆனால் 64 அப்படியெல்லாம் இல்லை. மகள் எப்போதும் அப்பா செல்லம் தான். 'சின்ன பொண்ணு! அப்படித் தான் இருப்பா. உன் மாதிரி அவ என்ன எருமை மாடா? இப்ப தான் கன்னுக் குட்டி!' என்று சொல்லி பகபகவென்று சிரிப்பார்.

'நீங்க தான் உங்க பொண்ணை மெச்சிக்கணும்!' என்று 92 கழுத்தை நொடித்துவிட்டு போவாள்.

அம்மா அப்படி எடுத்து எடுத்து சொன்னாலும் நான் ஏன் இப்படி மறந்து போகிறேன்? வயதாகி விட்டதோ எனக்கு? நினைத்து விட்டு க்ளுக்கென்று சிரித்தாள் 1234.

92இன் அடுத்த அறிவுரை ஞாபகத்துக்கு வந்தது. 'கண்ட கண்ட இடத்திலே நின்னுகிட்டு உனக்கு நீயே சிரிச்சுக்கறது - இதென்ன கெட்ட பழக்கம்?'

ஓ, அம்மா, நான் நின்னுகிட்டு சிரிக்கலை, நடந்துகிட்டே சிரிக்கிறேன்! நினைத்தவள் ஓவென்று வாய்விட்டே சிரித்து விட்டாளோ? பக்கத்து பஸ் ஸ்டாப்பில் நான்கு இளைஞர்கள் சட்டென்று திரும்பிப் பார்த்தனர்.

அவர்கள் கண்களைக் கண்டதும் கோபம் கோபமாக வந்தது 1234க்கு.
வேண்டாம்! இப்படியே காலேஜ் போனால் வகுப்பிலிருக்கும் 1180 உம், 1028 உம், அதாவது பரவாயில்லை.. அந்த லெக்சரர் 996உம் 'ஈ..' என்று இளித்து நொள்ளைப் பார்வை பார்ப்பார்கள். பேசாமல் வீட்டுக்கு திரும்பிப் போய் விடலாம். போய் துப்பட்டா அணிந்து கொண்டு திரும்ப வரலாம் என்று நினைத்தபடி பஸ்ஸைப் பிடிக்கக் கிளம்பினாள் 1234.

[இதென்ன 2100 ஆம் வருடத்துக்கான விஞ்ஞானக் கதையா என்றெல்லாம் கேட்க வேண்டாம். வேலியில் ஓடுகிற 121 ஐ எதற்கு வேட்டியில் விட்டுக் கொள்ள வேண்டும்? யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காத வகையில் கதை எழுத நினைப்பவர்கள் இந்த உத்தியைக் கடைபிடிக்கலாம். இதிலும் ஏதாவது தவறு கண்டுபிடிக்கிறவர்களுக்கு இப்போதே சொல்லி விடுகிறேன் - அதற்கு காரணம், இந்தக் கதையை எழுத எனக்கு உதவிய எனது 'பேய்' எழுத்தாளர்கள் தான்!]

Monday, January 09, 2006

தக தக தக ... தக்க!

ப்பு சப்பேயில்லாத கேள்விகள் என்றாலும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறது தங்க வேட்டை.
[சன் டிவி, சனி ஞாயிறு இரவு 9 மணி]

தகதகவென்று நிஜமாகவே மின்னுகிற தேவதை மாதிரி ரம்யா கிருஷ்ணன். சேலையில் என்ன மாதிரி ஜரிகை, என்னென்ன வகை நகைகள் என்றெல்லாம் குட்டி லெக்சர் கொடுக்கும் ரம்யா தன் இளமை கட்டுக்கோப்பு ரகசியத்தை மட்டும் இன்னும் சொல்லவில்லை.

இந்த வாரம் யாராவது கவனித்தீர்களா? போட்டியாளர்கள் அறிமுகப் பகுதியில் பழைய 'கோடீஸ்வரன்' இசைத் துணுக்கை சேர்த்திருந்தார்கள்.

ரம்யா அப்போதைக்கப்போது வார்த்தைகளில் சிறிது திணறினாலும் அருமையாகவே நிகழ்ச்சியை எடுத்து செல்கிறார். 'அதுக்கும் மின்னாடி..' அவ்வப்போது தலைகாட்டுகிறது. (மின்னாடி - தூய தமிழ் வார்த்தை என்று யாரோ சொல்கிறாற்போல் கேட்கிறது!)


'ந்த வயசிலே இதெல்லாம் உனக்கு தேவையா?' என்று கிண்டல்களை எல்லாம் தூரப் போட்டு விட்டு ஒரு பாட்டி இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை சொல்ல வேண்டும். 'வயது முக்கியமில்லை சாதனை படைக்க' என்று எடுத்துச் சொன்னது நிகழ்ச்சி. பாட்டி அருமையாக ஒரு பாட்டு சுந்தராம்பாள் ஸ்டைலில் நடுங்கிக் கொண்டே பாடி ஒரு விநாடி கண்களில் அருவியைத் தேக்க வைத்தார். ரம்யா கிருஷ்ணனுக்கு திருஷ்டி வேறு கழித்து, ஆசி வழங்கினார். ஒரு தவறான விடையும் சொன்னார்!

மக்களை நன்றாக சென்றடைய வேண்டும் என்பது தான் நிகழ்ச்சியின் தாரக மந்திரம் என்பது நன்றாக தெரிகிறது. இரண்டு பேர் அழைக்கப் படுகிறார்கள். ஒருவர் கார்ட் தேர்ந்தெடுக்க, க்ளூ கார்ட் இன்னொருவருக்கு கொடுக்கப் படுகிறது. 'உதவி' என்று சொல்லும் போது மட்டும், விடை தெரிந்திருந்தால் இன்னொருவர் க்ளூ சொல்வார். அந்த க்ளூ கூட தவறாக சொல்லப் படும் போது அவசர அவசரமாக ரம்யா 'அது தவறு' என்று சொல்வதுமில்லாமல், அவரே சரியான க்ளூவைக் கொடுக்கிறார். நேயர் புதையலுக்கு இன்னும் மூன்று கிராம் தங்கம் கிடைப்பதைத் தவிர்த்து விடுகிறார்கள்.

மூன்றாவது ரவுண்ட் மட்டும் கொஞ்சம் குழப்பும் ரவுண்ட். இந்த நிகழ்ச்சியில் சுவாரசியத்தைக் கூட்டும் இடம் இது தான் என்று சொல்ல வேண்டும். ஆனால் அந்த ஒரு நிமிடத்துக்குள் நேயர்களை எது சரியான விடை என்று ஊகிக்க விடாமல் காமிரா கோணங்கள் செய்து விடுகின்றன. நிகழ்ச்சியைக் காண்பவர்களுக்காக ஒரு பத்து விநாடிகள் பொருத்த வேண்டிய வார்த்தைகள் இருக்கும் அந்த பலகையைக் காண்பித்தால் நலம்.

இந்த ரவுண்டுக்காக மெனக்கெடும் கேள்வி தயாரிப்பாளருக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்!

இதெல்லாம் சரி, தங்கம் கிடைத்து விட்டது என்பதற்காக இப்படியா குண்டக்க மண்டக்க என்று டான்ஸ் ஆட வேண்டும்?! 'வீல்ல்ல்ல்ல்ல்..' என்று பூதத்தையே நிஜமாக பார்த்த மாதிரி கத்தல் வேறு!

இந்த விளம்பர யுகத்தில் இதெல்லாம் தேவையே தானோ? இல்லாவிட்டால், இந்தப் பதிவு வந்திருக்குமா என்ன?!


சன் டிவி பாணியில் முடித்து விடவா?
மொத்தத்தில் தக தக தங்க வேட்டை ..

தக்க!

Friday, January 06, 2006

Happy நாய் Year!




வருகிற ஜனவரி 29 ஆம் தேதி நாய் வருடம் தொடங்குகிறதாம்! சுழற்சி முறையில் 12 வருடங்களுக்கு ஒரு முறை இந்த நாய் வருடம் வருகிறது. 12 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் ஒரு விலங்கினத்தைக் குறிக்கிற விதத்தில் அமையும். அப்படி, 2006 ஆம் வருடம் நா.....ய் வ....ருடம்!

(சே, சன் டிவி பார்த்துகிட்டே எழுதிகிட்டிருக்கேன்!)

இந்த லூனார் காலண்டர் முறை சீனா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் கடைபிடிக்கப் படுகிறது. [செய்தி: Hindu 05/01/2006]

சீனாவைச் சேர்ந்த ஒரு அலுவலகத்தில் நாய் வருடத்தில் பிறந்தவர்களை மட்டும் விண்ணப்பிக்கக் கேட்டு ஒரு விளம்பரம் வந்திருக்கிறதாம்! அந்த வருடத்தில் பிறந்தவர்கள் மட்டும் சொன்னதைக் கேட்டு நடக்கும் குணம் உள்ளவர்களாக இருப்பார்களாம். அந்த அலுவலகத்துக்கு அது மிக முக்கிய தேவை ஆகையால் 'நாய்' மனிதர்களை மட்டும் அழைத்திருக்கிறது!

நான் பணிபுரிந்த அலுவலகத்தில் சில சமயம் இதை விட அருமையான கூத்து நடந்தேறியிருக்கிறது.

யூனியன் பிரிவில் இருக்கும் ஒரு நபரை பதவி உயர்வு கொடுத்து சூப்பர்வைசர் ஆக மாற்ற நிர்வாகம் முடிவெடுக்கும். அந்த குறிப்பிட்ட நபரை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அது முடிகிற காரியமா என்ன? அதே தகுதியைக் கொண்ட பத்து பதினைந்து நபர்கள் இலை எப்போது விழும் என்று நாய் (அட! இங்கேயும் நாய்!!) மாதிரி காத்திருப்பார்கள். அவர்களை ஓரம் கட்டுவது என்பது லேசு பட்ட விஷயமா?

நோட்டிஸ் போர்டில் ஒரு விளம்பரம் வந்தமரும்.

Imports பிரிவில் சூப்பர்வைசராக பணிபுரிய ஆள் தேவை. A1 பிரிவில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். (A2இல் இருக்கும் பத்து பேர் அவுட்!)

A1 பிரிவில் குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் பணிபுரிந்தவராக இருந்தால் நலம். ( இப்போது மூன்று பேர் தகுதி பெறுகிறார்கள்)

ஆனால், நான்கு வருடங்களுக்கு மேல் பணி புரிந்திருக்கக் கூடாது! (அடி சக்கை, அந்த இரண்டு பேர் அவுட்!!!)

இப்படியாக விளம்பரம் தூள் கிளப்பும். நான் கூட அந்த மாதிரி விளம்பரங்களைப் பார்த்து விட்டு விளையாட்டாக சொல்வதுண்டு:

விண்ணப்பதாரர் பெயர் 'க' வில் தொடங்கி 'தி' இல் முடிய வேண்டும்.

இப்படி ஒரு கூடுதல் வரி இருந்து விட்டால் தொல்லையே கிடையாது இல்லையோ!

இதை ஏன் சொல்ல வந்தேன் என்றால், சம்பந்தப் பட்ட இந்த விளம்பரத்தைப் பார்த்து வேண்டுமென்றே ஒருவர் விண்ணப்பித்தார். எழுத்து தேர்வு முடித்து, பாவம் நேர்முகத் தேர்வில் அவர் தேர்வு பெறவில்லை.

கொடுக்கப்பட்ட காரணம் -
தங்களுக்கு கூடுதல் தகுதி இருப்பதால் தேர்ந்தெடுக்க இயலவில்லை!

வள்..












எதற்காக இந்த புகைப்படம் இங்கே?!

Thursday, January 05, 2006

சென்னை 2007

புத்தாண்டை வரவேற்பதற்காக சிறப்பு பல்சுவை நிகழ்ச்சி ஒன்றை அறிவித்திருந்தது எமது அலுவலகம். ஒவ்வொரு பிரிவுக்கும் பதினைந்து நிமிட அவகாசம் என்றும் அருமையான நிகழ்ச்சி ஒன்றுக்கு பரிசு என்றும் சொல்லியிருந்தார்கள்.

நான் பணி புரியும் Motorola குழு சார்பாக என்ன நிகழ்ச்சியை அளிக்கலாம் என்று விவாதித்துக் கொண்டிருந்த போது நான் எனது படைப்பைப் பற்றி சொல்லி, நன்றாக இருந்தால் ஓரங்க நாடகம் போல் வழங்கலாம் என்றேன்.

படித்த போதே எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்க, அதையே வழங்குவது என்று முடிவும் செய்யப்பட்டது. தொலைபேசி குரலுக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவர் குரலைப் பதிவு செய்தோம். மேடையில் ஒருவர் ஒரு செல்போனை வைத்துக் கொண்டு, அந்த கம்ப்யூட்டர் குரலுக்கு பதில் சொல்கிற மாதிரி காட்சியை அமைத்து.. மிக அருமையாக வந்தது நிகழ்ச்சி.

சென்னை 2007 என்று பெயரை மற்றும் மாற்றம் செய்தேன்.

நிரம்ப நாட்களுக்குப் பிறகு தமிழ்.. நாடகம்.. மேடை.. இளம் நடிகர்கள்.. பார்வையாளர்கள் என்று எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த நாடகம் அரங்கேறும் நாளை நான் இருந்து காண முடியவில்லை. வார இறுதியில் நான் பெங்களூர் பயணிக்க வேண்டியிருந்தது. நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நான் பயணிக்க முடியாதாகையால், மிக வருத்தமாகத் தான் பெங்களூர் போனேன்.

திரும்ப வந்ததும் வராததுமாக நிகழ்ச்சி எப்படி வந்தது என்று கேட்க, மிக நன்றாக வந்தது என்று சொன்னார்கள். ஆனால்.. கூடவே இன்னொன்றும் சொன்னார்கள்.

ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்கள் பகுதியிலிருந்து நிரம்ப கூச்சல் இருந்ததாம். எந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் படபடவென கை தட்டல்களும், விசில்களும், உற்சாகக் கூக்குரல்களும் இருந்ததாம்! மேடையில் என்ன நடக்கிறது, என்ன வசனம் பேசப்படுகிறது என்று கண்டு கொள்ள முடியாத படி வெறித்தனமாக கத்திக் கொண்டிருந்ததாம் ஒரு குழு!

நல்ல வேளையாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, எங்கள் நிகழ்ச்சி ஆரம்பித்ததால், கொஞ்சம் அமைதி காத்தார்களாம்!

ஏன் இந்த மூர்க்கத்தனம்? கல்லூரி வளாகத்திலிருந்தே இந்தக் காட்டுக் கூச்சல் அநாகரீகம் ஆரம்பமாகி விடுகிறது. நான் செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்த போது, அனைத்துக் கல்லூரிகளுக்கும் இடையே நடக்கும் போட்டிகளின் போது, இந்த மாதிரி கண்ணராவி காட்சிகளைப் பார்த்து நொந்திருக்கிறேன்.

இந்த மூர்க்கத்தனம் புரிகிறவர்கள் மேடையேறி ஒரு இரண்டு நிமிடம் பேச முடியாதவர்கள் தான். தங்களால் எது இயலவில்லையோ அது மற்றவர்களால் கூட இயலாமல் போக வேண்டும் என்று குறுக்கு வழியில் நினைக்கிறவர்கள் இந்த காட்டுமிராண்டிகள்! அத்தகைய மனம் உள்ளவர்கள் ஏன் இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும்? பேசாமல் டிவி முன் உட்கார்ந்து தனக்கு பிடித்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டியது தானே? வேண்டுமானால் அப்போது காட்டுக் கூச்சல் போட்டு தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டியது தானே?!

அழகான இளம் செடிகள் எத்தனையோ தடங்கல்களைத் தாண்டி மேடையேறி தங்கள் வளர்ச்சியைக் காட்டத் துடிக்கின்றன. அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்காவிட்டாலும், வெந்நீர் ஊற்றி சிதைக்க வேண்டாமே!