Monday, April 10, 2006

நான் காத்திருக்கிறேன்! நீங்கள்??

ஞாயிறு தோறும் நான் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியின் சங்கமம். இந்த வாரம் எஸ்.பி.பி. என்றால் கேட்க வேண்டுமா?! மிக மிக மகிழ்ச்சி அளித்து விட்ட நிகழ்ச்சி என்று நிச்சயம் சொல்லலாம். இன்னும் ஒரு வாரம் காத்திருந்து அடுத்த பகுதியும் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன்.

என்னவோ பக்கத்து வீட்டு நண்பருடன் பேசுகிற மாதிரி அதி அற்புதமாக ஆத்மார்த்தமாக எஸ்.பி.பி. பேசியதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. கூடுதல் போனஸாக அவரது அப்போதைய அருமையான பாடல்களை அவர் மெருகேற்றிப் பாடும் போது.. பரம சுகம்!!

எம்ஜிஆருக்கு பாட வந்த தன்னை அந்த காலத்து இசையுலகம் எப்படி கவனித்தது என்பதை சொன்னார். (ஒரு சின்ன கோல்ட்டி பையன்!)

கண்ணதாசனுக்கு கொடுக்கப் பட்ட சரணத்துக்கு (லா ல லால லால லா..) கண்ணதாசன் 'என்னய்யா மலையாளத்தான், இந்த மாதிரி எல்லாம் பாட்டு எழுத வைக்கிறே?' என்று சொல்ல, விஸ்வநாதன் 'ஓய் செட்டியார், நீ எழுத முடிஞ்சா எழுது, இல்லைன்னா இன்னொரு ஆளை எழுத வைக்கிறேன்' என்று சவால் விட, எழுதப் பட்ட அந்த அருமை பாடல்.. 'வான் நிலா நிலா அல்ல, உன் வாலிபம் நிலா!'

இந்த பாடலில் 'பாதர் இன் லா' 'மதர் இன் லா' 'ப்ரதர் இன் லா' 'சிஸ்டர் இன் லா' தவிர மற்ற எல்லா லாவையும் பயன் படுத்தி இருக்கிறார் கண்ணதாசன் என்று சொல்லி சிரித்தார் எஸ்.பி.பி.

சங்கமத்துக்கு ஒரு மணி மகுடம்!

0 பின்னூட்டங்கள்: