Tuesday, January 25, 2005

ஹைஸ்ட்ரீட் - ஒரு ஞாயிற்றுக் கிழமை!

ண்டனுக்கு பெருமை சேர்க்கும் ஹைஸ்ட்ரீட்.

ஞாயிற்றுக்கிழமை-
மாலை நான்கு முப்பது.

சூரியன் கோபித்துக் கொண்டு கீழ் வானில்
மறைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின்
இரவு எட்டு மணியை நினைவூட்டும் இருள்
கவ்விக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

குளிர் எல்லா எலும்புகளிலும் புகுந்து
உறுத்திக் கொண்டிருக்க, நடக்க முடியாமல்
நடந்து கொண்டிருக்கிறேன்.

கடைகள் எல்லாம் பூட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
மக்கள் மெல்ல தங்கள் தங்கள் வீடுகளுக்குள் பதுங்கிக்
கொள்ள விரைந்து கொண்டிருக்கின்றனர்.

நான் அங்கு போடப் பட்டிருந்த இருக்கை
ஒன்றில் அமர்கிறேன். ச்ச்சில்லென்று குளிர்
பாய்ந்து ஒரே விநாடியில் 'தொடை'
நடுங்கி ஆகி விடுகிறேன்.

அப்போது தான் அவரை கவனிக்கிறேன்.
குளிரிலிருந்து தப்பிக்க வைக்கும் அருமையான
உடையை அணிந்து கொண்டு டிப்-டாப்பாக நடந்து
வந்த அவர் -

அந்த பூட்டப் பட்ட கடையின் முன் ஒரு
போர்வையை விரித்து விட்டு அதன் மீது
அமர்ந்து ஆற அமர ஒரு சிகரெட்டைப் பற்ற
வைக்கிறார். என்னை நோக்கி அருமையான
புன்னகையை வழங்கி விட்டு, 'Happy New Year'
என்கிறார்.

இன்று 23ஆம் தேதி ஆயிற்றே என்று மனதில்
நினைத்துக் கொண்டாலும், 'Thank you, Same
to you' என்கிறேன்.

என்னை முடிக்க விடாமல், 'Can you give me
fifty pence please' என்கிறார்.

அவர் ஒரு பிச்சைக் காரர் என்பதே ஓரிரு விநாடிகள்
ஆன பிறகு தான் என் மரமண்டைக்கு உரைக்கிறது!

அதே மிஸ்டர் பிச்சை அங்கிருந்த டெலிபோன் பூத்தில்
நுழைந்து, நாணயங்கள் போட்டு, கிட்டத் தட்ட
பத்து நிமிடங்கள் யாருடனோ கலகலக்கப் பேசி விட்டு,
வெளியேறியது கூடுதல் செய்தி!

இன்னுமொருவர் செய்தது மேலும் வியக்க வைத்தது.
புகை பிடித்தபடி வந்து கொண்டிருந்த ஒரு
பெண்மணியை நெருங்கி, 'one cigarette please'
என்றார்!


பிச்சைக்காரர்களைப் பற்றி விகடனில் வெளியாகும்
துணுக்குகளைப் படிக்கும் போது 'ரொம்பத் தான்
வாருகிறார்கள்' என்று நினைப்பதுண்டு. [நானும்
ஓரிரண்டு துணுக்குகள் அனுப்பி வெளியாகி
இருக்கின்றன!! :-))]

எந்த நாட்டுக்குப் போனாலும் இதே கதை தான்
போலும்!


2 பின்னூட்டங்கள்:

said...

அன்புள்ள சுபமூகா!

லண்டன் வாசமா? பேஷ் பேஷ்!

இந்த ஹை ஸ்ட்ரீட் என்ற பேரு எல்லா வெள்ளைக்கார ஊர்களிலும் இருக்கறதைக் கவனிச்சீங்களா? இங்கேயும் ஒண்ணு இருக்கு!
ஆனா இந்தப் 'பிச்சைக் காரர்கள்' இங்கே இல்லை!

என்றும் அன்புடன்,
துளசி.

said...

//லண்டன் வாசமா? பேஷ் பேஷ்!//

தற்காலிகமாக!
மார்ச் வரை இருப்பேன் என்று நினைக்கிறேன்.