ஒன்பது புராணம்
[ஒன்பதுக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு - பாகம் 2]
கொஞ்சம் இருங்கள். ஒரு கோட் மாட்டிக் கொண்டு ஒரு தொப்பி வைத்துக் கொண்டு வந்து விடுகிறேன். கதை கட்டுரை கவிதை எழுதுவதை விட இந்த மாதிரி எழுதுவது கொஞ்சம் ஜாலியாக இருக்கிறது. :-))
- - - - - - - - - - - - - -
உங்க நண்பரிடம் பெரிய எண் ஒன்றை சொல்லச் சொல்லுங்கள். எத்தனை இலக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.
உங்க நண்பர் சொன்ன எண்: 32564 என்று வைத்துக் கொள்வோமா?
அந்த எண்ணிலிருந்து 2ஐக் கழித்துக் கொள்ளுங்கள்.
32562
2 என்கிற எண்ணை முன் இணையுங்கள்.
232562
வானத்தைப் பார்த்து 'ரம்பா' என்று உரக்கக் கூறி, 'சொல் ஒரு எண்' என்று சொல்லி விட்டு, ஏதோ வானத்திலிருந்து பதில் வந்தது போல் ஒரு சின்ன காகிதம் எடுத்துக் கொண்டு இந்த எண்ணை எழுதி, நான்கு முறை மடித்து அதை நண்பரின் சட்டை பாக்கெட்டில் பத்திரப் படுத்துங்கள். [நண்பியாக இருந்தால் கொஞ்சம் ஜாக்கிரதையாக செய்யவும்!]
இப்போது நண்பரை இன்னொரு எண்ணை சொல்லச் சொல்லுங்கள்.
அவர் சொன்ன எண்: 48609
வானத்தைப் பார்த்து 'ஊர்வசி' என்று உரக்கக் கூறி, 'சொல் ஒரு எண்' என்று சொல்லி விட்டு, ஏதோ வானத்திலிருந்து பதில் வந்தது போல் நண்பர் சொன்ன எண்ணின் இலக்கம் ஒவ்வொன்றையும் 9 இல் இருந்து கழித்து, ஒரு எண் உருவாக்கி எழுதுங்கள்.
நீங்கள் உருவாக்கிய எண்: 51390
இப்போது நண்பரை இன்னொரு எண்ணை சொல்லச் சொல்லுங்கள்.
அவர் சொன்ன எண்: 32481
வானத்தைப் பார்த்து 'மேனகா' என்று உரக்கக் கூறி, 'சொல் ஒரு எண்' என்று சொல்லி விட்டு, ஏதோ வானத்திலிருந்து பதில் வந்தது போல் நண்பர் சொன்ன எண்ணின் இலக்கம் ஒவ்வொன்றையும் 9 இல் இருந்து கழித்து, ஒரு எண் உருவாக்கி எழுதுங்கள்.
நீங்கள் உருவாக்கிய எண்: 67518
இப்போது எல்லா எண்களையும் கூட்டுங்கள்:
32564
48609
51390
32481
67518
--------
232562
'என் உற்ற தோழி ரம்பா கொடுத்த எண்ணைக் கொடு நண்பா' என்று சொல்லுங்கள்.
நண்பர் நிச்சயம் விழிப்பார். அவர் சட்டை பாக்கெட்டில் இருந்து, துண்டு சீட்டை எடுத்து, பிரித்துக் காட்டுங்கள்.