Monday, July 23, 2012

ஆலயம் - தன்னந்தனியே ஒரு குழந்தை!

ருணகிரி கோவிலை விட்டு வெளியே வரும் போது சட்டென்று திரும்பி மனைவியைப் பார்த்து கேட்டான்.


"குழந்தை எங்கே?"

"அவ குரு கூட விளையாடிகிட்டிருக்கா!" என்றாள் ப்ரியா.

அது ஒரு பெரிய கோவில். அருமையான சுற்றளவு. பெரியவர்கள் அந்த கோவிலை ஒரு முறை சுற்றி வருவதற்குள் ஆயாசப் பட்டு விடக் கூடிய அளவுக்கு பெரிய கோவில் என்று சொல்லலாம்.


ஆனால் குழந்தைகள் இந்த கோவிலுக்குள் நுழைகிற போது, அவர்கள் முகத்தில் பிறக்கும் அந்த அபரிமிதமான மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே?   பெரியவர்கள் ஒரு முறை சுற்றி வரும் முன்னர், அவர்கள் மூன்று முறை சுற்றி வந்து, குதி குதி என்று குதித்து தங்கள் மகிழ்ச்சியைக் காட்டிக் கொள்வார்கள்.


 அவர்கள் போடுகிற சத்தம் பிரகாரங்களுக்கு பயணம் செய்து எதிரொலியோடு இரட்டிப்பாக திரும்பும்.






குரு அந்த கோவிலுக்குள் நுழைகிற போதே, தன் மானசீக பேருந்தை ஓட்ட ஆரம்பித்து விடுவான். அதி பயங்கர வேகத்தில் அந்த பேருந்து உறுமிக் கிளம்பும். எண்பது,  நூறு கிலோ மீட்டர் வேகத்தில் போகிற மகிழ்ச்சி அவன் உடல் முழுக்க வியாபித்திருக்கும்.

அருணகிரியும் ப்ரியாவும் கோவிலை விட்டு வெளியேறி, இரண்டு தெருக்கள் தாண்டியிருக்கும் தங்கள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றனர்.  அப்போது எதிர்ப்படுகிற தனது பழைய ஆசிரியரை வணங்கி "எப்படி இருக்கீங்க சார்?" என்று நலம் விசாரிக்கிறான் அருணகிரி.  அவரைப் பார்த்து நிரம்ப நாட்களாகி விட்டிருந்தபடியால்,  பழைய கதைகளைக் கொஞ்சம் கிளறி விட்டு, அங்கிருந்து நகர,  அரை மணி நேரமாகி விடுகிறது.

வீட்டுக்குள் நுழைகிற தம்பதிக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.  வீட்டில் குரு இருந்தான். ஆனால் குழந்தை இல்லை!

"எங்கடா சரண்யா?" என்று மிரட்டும் தொனியில் அப்பாவின் குரல் வரவும், பயத்தில் அழ ஆரம்பித்து விடுகிறான் குரு.

குழந்தையைக் கூட்டிக் கொண்டு பிரகாரத்தில் ஒரு முறை வலம் வந்த குரு, அவளை துர்க்கையம்மனின் ஆலயத்தில் விட்டு விட்டான். குழந்தை அவனிடம் இருப்பதாக எண்ணிக் கொண்டு தம்பதியரும் கோவிலை விட்டு வெளியேறி விட்டனர்.

பதற்றம் மேலோங்க திரும்ப கோவிலுக்கு ஓடி வருகின்றனர் தம்பதியர். ஆனால், அதற்குள் கோவில் பூட்டப் பட்டு விட்டது!

அக்கம்பக்கம் விசாரித்து, அந்த கோவிலில் வேலை செய்கிற ஒருவரின் வீட்டை அணுகி, உதவி கேட்கின்றனர்.

"இல்லைங்க, கோவிலைப் பூட்டிட்டா, திரும்ப காலையில் தான் திறப்பாங்க. காலம் காலமா இருக்கிற பழக்கங்க, மாத்த முடியாது. குழந்தைக்கு ஒண்ணும் ஆகாது. அந்த தாயை வேண்டிக்கிட்டு நிம்மதியா போய் தூங்குங்க!"  என்றவர் கோவில் இருக்கும் திசையைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டார்.

அருணகிரி அந்த கோவிலின் உயர் அதிகாரியின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, கெஞ்சிக் கேட்டுப் பார்க்கிறான். அதே பதில்!

எல்லோர் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது அருணகிரிக்கு. இரவு முழுக்க அந்த கோவிலின் பூட்டிய கதவுக்கு முன் கழிக்கிறது அந்த குடும்பம்.

மறு நாள் காலை சிறிது சீக்கிரமாகவே கோவில் திறக்கப் பட்டு விடுகிறது.  


குழந்தையைத் தேடி, கோவிலுக்குள் ஓடுகின்றனர் தம்பதியர். முழு பிரகாரத்தையும் சுற்றி வருகின்றனர். குழந்தை அழுகிற குரல் எங்காவது கேட்கிறதா என்று உற்று கவனித்தபடி நடக்கின்றனர்.

ஒரு வேளை?  தெப்பக்குளத்தில் கொஞ்சம் நடுக்கத்துடன் எட்டிப் பார்க்கின்றனர். எங்கும் குழந்தை இல்லை. கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியபடி இருக்க, துர்க்கா பரமேஸ்வரி ஆலயத்தை அடைகின்றனர்.

துர்க்கை சிலையின் அருகில் அந்த குழந்தை அமர்ந்திருக்கிறது. என்னவோ புரியாத மொழியில் தனக்கு தானே பேசியபடி இருக்கும் அந்தக் குழந்தையின் கீழ் உதட்டுக்கருகில் சர்க்கரை பொங்கலின் மீதமான இரண்டு பருக்கைகள் ஒட்டியிருக்கின்றன!


[வேதாரண்யம் துர்க்கா பரமேஸ்வரி ஆலயத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப் பட்டது]