Friday, December 22, 2006

ஆற்றில் இறங்கிய பிறகு..

புல்லில் பனித்துளி
துளி - 9

[அழகிகள் உலகில் - தொடர்ச்சி..]

நட்ட நடுவில் இருந்த மேடையில் பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில் அந்த பெண் நின்றிருந்தாள். அழகென்றால் அவ்வளவு அழகு! அந்த அழகை மறைக்க விரும்பவில்லையோ என்னவோ சிக்கனமாக இரண்டே இரண்டு இடங்களை மட்டும் 'போனால் போகிறதென்று' மறைத்திருந்தாள்.

ஒயிலாக நடந்து வந்து, தூணில் சாய்ந்து நின்று தன் வலது காலால் இடது காலில் மேலிருந்து கீழாகத் தடவ, என்னவோ பெரிய சாதனை செய்தது போல் முழுக் கூட்டமும் விசிலடித்து ஆர்ப்பரித்தது.

இப்போது மெல்ல மேடையிலிருந்து இறங்கி ஒவ்வொரு மேசையாக செல்கிறாள். அந்த அறையின் பல பகுதிகளிலிருந்தும் 'இங்கே. இங்கே..' என்று குரல்கள் எழுகின்றன.

மதுக் கிண்ணத்தை ஏந்தியபடி ஒருவர் அமர்ந்திருக்க, அவரருகே சென்று அந்தக் கிண்ணத்தைப் பிடுங்கி கிடுகிடுவென்று ஒரே மடக்கில் குடிக்க, கூட்டம் ஹோவென்று ஆர்ப்பரிக்கிறது. மைக்கில் 'நோ கிக் யா!" என்று அவள் சொல்ல, திரும்ப 'ஹோ!'

அவள் செல்லுமிடமெல்லாம் ஒளி வெள்ளம் தொடர்ந்து வருகிறது. கதவருகில் இருட்டைத் துணையாக வைத்துக் கொண்டு நான் நின்றிருந்தேன்.

இப்போது அந்த பெண் எனக்கு நேர் எதிரே இருந்த வரிசை நோக்கி வர ஆரம்பிக்க, ஒளி வெள்ளம் என்னைத் தாண்டிச் சென்றது.

என்னைக் கடந்து சென்ற அந்தப் பெண் ஒரு விநாடி தயங்கி நின்று, என்னைத் திரும்பிப் பார்த்தாள். ஒரு விநாடி தான். சட்டென்று தோள்களைக் குலுக்கியபடி நடக்க ஆரம்பிக்க, ஒளி வட்டம் அவளை விழுங்குவது போல் தொடர்ந்தது.

அவளுக்கு முன்னமேயே என்னைத் தெரிந்திருக்குமா என்ன? சார்லஸ் சொன்ன ஸ்டெல்லாவாக இருக்குமோ? நான் இண்டியன் செஷனில் வாசிக்கும் போது என்னைப் பார்த்திருக்க வேண்டும். நான் மிக நல்லவன் என்று நினைத்திருந்ததற்கு மாறாக இப்போது கேபரே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவள் திடுக்கிட்டிருப்பாளோ என்றெல்லாம் மனதில் மாய்ந்து போனேன்.

அல்லது, இந்த மாதிரி வயதில் இளையவர்களின் முன் இப்படி நிற்க வேண்டியிருக்கிறதே என்று கூட வருத்தப் பட்டிருக்கலாம். எனக்கு உடுக்கை இழந்து போன தடுமாற்றம் ஒரு விநாடி ஏற்பட்டது.

அடுத்த காட்சி தொடங்கும் நேரம் ரொம்ப நல்ல பிள்ளை போல், காங்கோ ட்ரம் பக்கம் போன நான், யாரோ என்னையே உற்று நோக்குவது போல் தோன்றத் திரும்பினேன். பாபு மாஸ்டர் தான் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"வணக்கம் சார்" என்றார்.

நான் தடுமாறினேன்.

"கேபரே பார்க்கிறீங்களா சார்? வர்றேன் சார். உங்க சித்தப்பா கிட்டே சொல்றேன் சார்" என்றார்.

நான் தலை குனிய, என் முதுகில் ஒங்கித் தட்டி விட்டு, சிரித்தார். நான் தப்பிவிட்ட மகிழ்ச்சியில் மெல்ல புன்னகைத்தேன்.

"வேலை பண்ண வந்திருக்கோம். நம்ம வேலை உண்டு, நாம உண்டு அப்படின்னு இருக்கணும். புரியுதா?" என்றார்.

புரியவில்லை என்றாலும் தலையாட்டினேன்.

"நான் இப்ப தான் ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னே வந்தேன்!" என்றேன்.

"ரெண்டு நிமிஷமானா என்ன? ஒரு மணியானா என்ன? எல்லாம் ஒண்ணு தான்!" என்றார் சார்லஸ் சிரித்து விட்டு.

என்னவோ ஒரு பெரிய தவறு செய்து விட்டது போல் அன்று என்னால் ஒன்றி வாசிக்க முடியவில்லை.

அடுத்த நாள் இண்டியன் செஷன் முடிந்த பிறகு, நான் வெளியே போகவில்லை. கதவருகே போடப் பட்டிருந்த ஒரு ஒற்றை நாற்காலியில் அமர்ந்து விட்டேன்.

'ஆற்றில் இறங்கியாகி விட்டது. சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன?' என்று எனக்கு நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.

இது ஒரு காரணம் என்றால், இன்னுமொரு முக்கிய காரணமும் இருந்தது. அந்த வயதிற்கேயுரிய சொல்ல முடியாத ஒரு எதிர்பார்ப்பு மனதில் இருந்தது.

கேபரே என்றால் நான் என்னவோ ஏதோ என்று நினைத்திருந்தேன். சிற்றாடைகள் இரண்டு தரித்து சுற்றி சுற்றி வருவது தான் கேபரேயா என்ன? ஒரு வேளை, நான் வருவதற்கு முன் முக்கிய காட்சி முடிந்திருக்குமோ என்று ஐயம் ஏற்பட இன்றைக்கு தவற விடாமல் முதலிலிருந்து கடைசி வரை பார்த்து விடுவது என்று முடிவு செய்து அங்கேயே இருந்து விட்டேன்.

ஐந்து பெண்கள் வந்தார்கள். ஒவ்வொருவரும் ஐந்தைந்து நிமிடங்கள் ஒவ்வொரு வகையாக நேர்த்தியாக நடனமாடிச் சென்றார்கள். நான் நினைத்த மாதிரி எல்லாம் எதுவும் ஏடாகூடமாக ஆகவில்லை. எனக்கு ஒருவகையில் இது ஏமாற்றமாக இருந்தாலும், நான் இன்னும் நல்லவன் தான் என்று மனசுக்குள் மகிழ்ச்சியடைந்தேன்.

டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவு சிறப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

புது வருடத்தை வரவேற்க எல்லோரும் காத்திருந்தனர். ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரும் மது வெள்ளத்தில் மூழ்கி நீந்திக் கொண்டிருக்க முயன்று கொண்டிருந்தனர். அப்போது தான் அது நடந்தது.

இரண்டு பேர் ஏதோ ஒரு உப்புசப்பில்லா காரணத்துக்கு வாக்குவாதத்தில் இறங்கப் போக, அதில் ஒருவர் பக்கத்திலிருந்த பாட்டிலை எடுத்து மேசையில் உடைத்து வீசும் வரை போனது. சிலீர் என்று கண்ணாடிச் சிதறல்கள் அறையெங்கும் பரவ, 'வீல்' என்று அலறியபடி கேபரே ஆடிக் கொண்டிருந்த பெண் உள்ளே ஓடி விட்டாள்.

பயந்து போன அந்த பெண் அதிர்ச்சி மிகுதியில் மயங்கிச் சாய, சார்லஸ் சட்டென்று அந்தப் பெண்ணைப் பிடித்து, கைத்தாங்கலாக மெள்ளப் படுக்க வைத்தார்.

"தண்ணி கொண்டாங்கப்பா!" என்று சார்லஸ் சொல்ல, நான் ஓடினேன். நான் கொண்டு வந்த தண்ணீரைத் தெளித்தவுடன், அந்த பெண் மெல்ல கண் திறந்து எழுந்து உட்கார்ந்தாள்.

தண்ணீரைக் குடித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டவள், சார்லஸைப் பார்த்து "பயந்தே போயிட்டேன் அண்ணே!" என்றாள்.


நான் திடுக்கிட்டேன். இதே பெண் சில நிமிடங்களுக்கு முன் அந்த மேடையில் என்னவெல்லாம் செய்தாள்! சார்லஸ் அதி வேகத்துடன் கிடார் வாசிக்க அதே வேகத்துக்கு ஈடு கொடுத்து அவர் முன் நின்று ஆடிய அந்த காட்சி ஞாபகத்துக்கு வந்தது. சார்லஸை சுற்றி வந்து அவர் முதுகில் தன் முதுகு வைத்து ஆட, சார்லஸ் குனிந்து அவளை இன்னும் அழகாக அனுமதித்தது எல்லாம் மனசுக்குள் காட்சிகளாக ஓடின.

"அந்த பாட்டில் எனக்கு பக்கத்தில் வந்து விழுந்ததும் ஒரு நிமிஷத்துக்கு என்ன பண்றதுன்னே தெரியலை அண்ணே!" என்றாள். தோள்களைக் குலுக்கி அழகாக பயப்பட்டாள்.

தம்ளரை என்னிடம் திரும்பக் கொடுத்து விட்டு, "தேங்க்ஸ் பிரதர்!" என்றாள். நான் புன்னகைத்து விட்டு நடந்தேன்.

'வேலை பண்ண வந்திருக்கோம். நம்ம வேலை உண்டு, நாம உண்டு அப்படின்னு இருக்கணும்' என்று பாபு மாஸ்டர் சொன்னதற்கு அர்த்தம் இப்போது புரிகிற மாதிரி இருந்தது.

[நன்றி: http://tamil.sify.com]