Thursday, August 31, 2006

காலை வணக்கங்கள்

புல்லில் பனித்துளி
துளி - 1

ள்ளியில் முதன் முதலாகக் காலடி வைத்திருக்கும் சின்னச் சின்னக் குழந்தைகளைக் கூப்பிட்டு
இன்று என்ன சொல்லிக் கொடுத்தார்கள் என்று கேட்டுப் பாருங்கள். ராகம் போட்டு
'குட் மார்னிங் மேம்!' என்று அழகாக சொல்வார்கள். பெற்றோர் முகத்தில் வந்தமரும் அந்தப்
பெருமையைப் பார்க்க வேண்டுமே!

குழந்தையாக இருக்கும் போதே இந்தக் காலை வணக்கம் சொல்லும் பண்பு விதைக்கப் பட்டு
விடுகிறது. முன்பின் தெரியாத யாரை எதிர்கொள்ளும் போதும் கூட பேச்சை ஆரம்பித்து வைக்க
இந்த வணக்கம் மிக உதவி புரிகிறது என்பது எனது கருத்து. அவர் யாரோ, இன்று தான்
பார்க்கிறேன், ஆனாலும் அவரது இன்றைய பொழுது அருமையாக அமைய என்னால் இயன்ற
அளவிலான இரண்டு வார்த்தைகளை நான் அளிக்கிறேன். மேன்மேலும் அவருடன் வார்த்தைப்
பரிமாற்றங்கள் ஏற்பட இதை விட சுலபமான வழி இல்லை என்றே சொல்லலாம். ஆனால்,
இந்த இரண்டு வார்த்தைகள் கூட சுருங்கி ஒரு 'Hi' அல்லது ஒரு சிறு கையசைப்பில் முடிந்து
விடுகிறது. பேச எல்லாம் நேரம் இல்லை. மிக மிக இயந்திரத் தனமான வாழ்க்கை!

எங்கள் அலுவலகப் பேருந்தில் ஏறும் ஒரு நபரைப் பார்க்கும் போது எனக்கு எப்போதும்
பொறாமையாகத் தான் இருக்கும். முதல் இருக்கை நபரைத் தட்டி 'குட் மார்னிங்' என்பார்.
முந்தைய தினத்தின் ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஏதோ கேள்வி கேட்டு
பதிலுக்கு காத்திருப்பார். அவருக்கு அடுத்து ஏறியவர் சிறிது தயங்கி பின்
'எக்ஸ்க்யூஸ் மீ' சொல்வார். "நீங்க போங்க" என்று சொல்லி இவர் வழி விட்டு விடுவார்.
"என்ன அவ்வளவு அவசரம்? ஆபீஸ் போனபிறகு கேட்டால் என்ன குறைந்து விடும்?" என்று
கூட நான் நினைத்ததுண்டு. அவர் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் அந்த பேருந்தின் ஆட்டத்திற்கு
ஈடு கொடுத்தபடி நின்று அந்த பதிலைப் பெற்றுக் கொண்டு புன்சிரிப்புடன் அடுத்த சீட்டுக்கு
முன்னேறி, அங்கிருந்து ஒவ்வொரு இருக்கையில் அமர்ந்திருப்பவருக்கும் 'குட் மார்னிங்' சொல்லிக்
கொண்டே வருவார். நடுவில் யாராவது ஒருவரிடம் "நேற்று அங்கு இறங்கினாயே? போன காரியம்
என்ன ஆச்சு?" என்று விசாரிப்பு நிச்சயம் இருக்கும். கடைசி இருக்கைக்குத் தான் சென்று
அமர்வார். அவர் அங்கு போய் சேர நிச்சயம் பத்து நிமிட நேரம் ஆகியிருக்கும்!

எத்தனை நண்பர்களைப் பெற்றிருக்கிறார் இவர் என்று நான் அதிசயப் பட்டதுண்டு. இவர் இந்த
மாதிரி செய்வதற்கு எப்படி இவருக்கு நண்பர்கள் கிடைக்கிறார்கள் என்று கூட ஆச்சரியப்
பட்டதுண்டு! யாராவது அவரிடம் முகம் கொடுத்து பேசவில்லையெனில் அவ்வளவு தான். இன்னும்
ஒரு ஐந்து நிமிடம் அவரிடம் நின்று அவர் சரியாகப் பேசுகிற வரைக்கும் விடாமல் வெற்றி பெற்று
விடுவார்! அவர் ஒரு நாள் அந்த பேருந்தில் வரவில்லை என்றால் எனக்கு ஏதோ ஒரு இழப்பு ஏற்பட்ட மாதிரி தோன்றும்.

நம்மில் எத்தனை பேர் இந்த மாதிரி வலியப் போய் பேசுகிறோம்?

நானும் அந்தப் பேருந்தில் ஏறும் போது நான் பணிபுரியும் அதே பிரிவில் இருக்கும் நண்பர்
ஒருவருக்கு வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் அந்த அலுவலகத்தில் சேர்ந்த புதிதில்!
தினந்தோறும் அவர் பக்கத்தில் அமர்ந்து ஏதாவது பேசிக் கொண்டு வருவது வழக்கம்.
பேச்சு எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கும். பேருந்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்
பயணம் புரிகையில் இந்த மாதிரி பேசிக் கொண்டே செல்வதால் நேரம் போவதே தெரியாது.

அலுவலகத்தில் எனக்கு கொஞ்சம் மதிப்பு கூடியது. என்னுடைய பணியில் நான் காட்டும்
சுறுசுறுப்பு பற்றி ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்தன. அப்போது தான் எதேச்சையாக அதை
கவனித்தேன். ஒரு நாள் நான் வணக்கம் சொல்லி அமர்கையில் அந்த பேருந்து நண்பர் கண்டு
கொள்ளாமல் ஜன்னல் வழியாக என்னவோ நிரம்ப உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பது
போல் காட்டிக் கொண்டிருந்தார். நான் திரும்ப வணக்கம் சொல்ல, ஒரு தலையசைப்பு மாத்திரம் பதிலாக வந்தது!

அதற்கடுத்த நாள், அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அவரைத் தொந்தரவு செய்யாமல் அவர்
பக்கத்தில் அமர்ந்தேன். அலுவலகம் வந்த போது தான் எழுந்தார். ஒரே ஒரு புன்னகை. "நேற்று
ரொம்ப லேட்டாத் தான் தூங்கினேன்!" என்றார். "குட் மார்னிங்" என்றேன். "ம்ம்.. மார்னிங்!"
என்றார்.

அடுத்த நாள் நான் அமர்வதைக் கூட கவனிக்காத மாதிரி ஆங்கில பேப்பரில் மூழ்கியிருந்தார்.
"குட் மார்னிங்" என்றேன். "சாரி, நான் பேப்பர் படிக்கலை, அங்க உட்கார்ந்துக்கிறேன்" என்று
சட்டென்று எழுந்து பின்னால் வேறு இருக்கைக்கு சென்று விட்டார்!

அடுத்த நாள் அவர் பேப்பரில் மூழ்கியிருக்க "குட் மார்னிங்" என்று சொல்லிவிட்டு பதிலுக்குக்
காத்திருக்காமல் வேறு இருக்கைக்கு சென்றேன்! நான் அமர்ந்தவுடன் என்னைப் பார்த்து
'தேங்க்ஸ்" என்றார். எனது இதயத்தில் குண்டூசி வைத்துக் குத்திய மாதிரி உணர்ந்தேன்.
அதற்கப்புறம் அவரைக் காணும் போதெல்லாம் ஒரு புன்னகை மாத்திரம் உதட்டில்
தோன்றி உறைகிறது!

அதே பேருந்தில் வேறு எவரையேனும் நட்பு வட்டத்தில் சிக்கி வைக்க ஆசை தான். தினம்
தினம் குட் மார்னிங் சொல்ல விருப்பம் தான். திரும்ப ஒரு குண்டூசி என் இதயத்தை
நெருங்குவதை நான் விரும்பவில்லை.

காலை வணக்கம் சொல்வது ஒரு விருப்பமான விஷயமாக, ஒரு கடமையாக இல்லாமல், கடனே
என்று ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பயத்துடன் காலை வணக்கம் சொன்னதே
நன்றாக இருந்ததோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அது என்ன? பயத்துடன்?!

பெங்களூரின் வேலை இல்லா பட்டதாரிகள் கூட்டத்தில் புதிய வரவாக நான் வந்த அந்த நேரம்!
என்னையும் மதித்து 'பிழைத்துப் போ!' என்று வேலை கொடுத்தது ஒரு டிராவல் ஏஜென்சி!

நான் இந்த அளவுக்கு முன்னேற்றம் பெற முதல் முக்கிய காரணமாக எனக்கு வேலை கொடுத்த
அந்தப் புண்ணியவானைத் தான் சொல்ல வேண்டும். திருவாளர் பாண்டுரங்கன்!

நான் சிவாஜி படம் பார்ப்பதையே விட்டுவிட்டிருந்தேன். தினமும் எதிர்க்க ஒரு சிவாஜியைப்
பார்க்கும் போது எதற்கு தியேட்டரில் போய் பார்க்க வேண்டும்?! அவர் மிடுக்காக ஆபீசுக்குள்
நுழையும் அந்த அழகைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் குட்
மார்னிங் சொல்லி விட்டுத் தான்! அவர் உள்ளே வரும் போது "குட் மார்னிங் சார்" "குட் மார்னிங்
சார்" "குட் மார்னிங் சார்" "குட் மார்னிங் சார்" "குட் மார்னிங் சார்" என்று ஒவ்வொருவரும்
கீ கொடுத்த பொம்மை போல் எழுந்து நின்று சொல்லிவிட்டு திரும்ப உட்காருவார்கள். ஏதோ
ஒத்திகை எடுத்து செய்த ஒரு நாடகக் காட்சி மாதிரி இருக்கும்.

யாராவது குட் மார்னிங் சொல்லவில்லை என்றால் உண்மையாகவே அவருக்கு குட் மார்னிங்
இல்லை என்று அர்த்தம்!

குட் மார்னிங் குறித்து நிறைய கதைகள் இருந்தாலும் ராம் மோகன் கதை ரொம்ப பிரசித்தம்.
அவன் சேர்ந்து ஒரு வார காலம் ஆகியிருந்தது. பாண்டு ரங்கன் பற்றி எல்லோரும் மாய்ந்து
மாய்ந்து சொல்லி வைத்திருந்தோம். அவன் அதைப் பற்றிக் கண்டுகொண்டதாகவே
தோன்றவில்லை.

ரொம்ப சீரியஸாக இரண்டு ஸ்டேட்மெண்ட்களை வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பான்.

"செக் பண்ணிகிட்டிருக்கேன் மச்சி!" என்பான். பின்னர் கண்ணடிப்பான்.
"இது ஒரிஜினல் ஸ்டேட்மெண்ட்! இது ஃபோட்டோ காப்பி! செக் பண்ணிகிட்டிருக்கேன்!"
என்று சொல்லி சிரிப்பான்.

"என்ன எழவு ஆபிஸ்டா இது! ஒரு வேலையும் குடுக்கலைன்னா இப்படித் தான் பாவ்லா
காட்ட வேண்டியிருக்கு!" என்பான். பாவி!

இந்த மாதிரி தகிடுதத்தம் செய்யும் போது மாட்டாமல், உண்மையாகவே வேலை செய்து
கொண்டிருக்கும் போது மாட்டிக் கொண்டான்!

பாண்டுரங்கன் ஆபீசுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.

"குட் மார்னிங் சார்!" "குட் மார்னிங் சார்!" "குட் மார்னிங் சார்!" "குட் மார்னிங் சார்!"

ராம் மோகன் இருக்கை பக்கத்தில் வந்தவர் ஒரு நொடி தயங்கினார். ராம் மோகன் நிரம்ப
உன்னிப்பாக வேலையில் மூழ்கிப் போயிருந்தான்! எங்களுக்கெல்லாம் உள்ளங்காலில் வியர்த்து
சாக்ஸ் நனைய ஆரம்பித்து விட்டிருந்தது. ராம் மோகன் தலையை உயர்த்தக் கூட இல்லை.
பாண்டுரங்கன் தன் அறைக்குள் புகுந்து கொள்ள...

நாங்கள் வேகவேகமாக ராம் மோகனை நெருங்கினோம். "மோசம் போனாயே மோகன்!" என்று
கவிதை பாடினோம். "நான் பார்க்கவே இல்லைடா. இங்க ஒரு ரூபா இருபது காசு டாலி ஆகாம
ஆட்டம் காண்பிச்சுகிட்டு இருந்ததா? அந்த வேலை மும்முரத்துலே கவனிக்கவே இல்லைடா
மச்சி! திட்டுவாராடா?" என்றான் பாவமாக.

"சீட்டு கிழிச்சிருக்கார் ஒருத்தனுக்கு!" என்று சீதாராமன் கதையை சொல்ல ஆரம்பித்தான் போஸ்.
இரண்டாயிரத்து ஆறாவது தடவையாக அதை ரொம்ப சுவாரசியமாகக் கேட்டோம்!

இன்டர்காம் அலறியது.
"எஸ் சார்!" என்று மோகன் தடுமாறிய போதே தெரிந்தது அந்தப் பக்கம் பாண்டு ரங்கன் என்பது!

"எதுக்கு பயப்படணும்? உண்மையை சொல்வேன்!" என்று கூட ஒரு ஃபைலை 'துணைக்கு'
எடுத்துக் கொண்டான். "நான் உங்க மாதிரி எல்லாம் பயப் பட மாட்டேன்!" என்று கிளம்பினான்.
நாங்கள் எல்லோரும் எங்கள் வேலைகளை ஒத்தி வைத்து விட்டுக் காத்திருந்தோம்.

ஆயிரத்தெட்டு பேய் அடித்தது போல் திரும்ப வந்தான் ராம் மோகன். அவன் கொண்டு சென்ற
ஒரு ஃபைல் ஆறு ஃபைல்களாக மாறியிருந்தது!

"குட் மார்னிங் கூட சொல்லாம என்ன மேன் பண்ணிகிட்டிருந்தே?" என்று அவர் கேட்ட போது
இவன் அந்த ஃபைலைக் காட்ட அதைப் பிடுங்கி முகத்தில் விட்டெறிந்திருக்கிறார்! ஒன்று
ஆறு ஆகி விட்டது!

"என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரி ஆக்ட் கொடுக்கிறியா? இந்த மாதிரி ஆளுங்களை
எத்தனை பேரை நான் பார்த்திருக்கேன்?" என்று உரக்க கத்தி விட்டு,

"பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்காத ஆளுங்க என் ஆபீசில் தேவையில்லை! கெட் அவுட்!"
என்று கதவைக் காட்டி விட்டாராம்!

காலில் விழாத குறையாக தப்பி விட்டான். "இனி இது மாதிரி பண்ணக் கூடாது, என்ன?" என்று
புத்தி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.

ராம் மோகன் ரொம்ப நேரத்துக்கு வியர்வையைத் துடைத்தபடி இருந்தான்.

மதிய உணவு வேளை முடிந்தது. பாண்டுரங்கன் வீட்டுக்கு போய் சாப்பிட்டு விட்டு இதோ இன்னும்
இரண்டு நிமிடத்தில் வந்து விடுவார். நாங்கள் எல்லோரும் வேலையில் மூழ்கும் பாவ்லா காட்ட
ஆரம்பித்தோம்! சரியாக ஒரு நிமிடம் ஐம்பத்தொன்பது விநாடிகள் கழிந்த போது, பாண்டு ரங்கன்
உள்ளே நுழைந்தார். சட்டென்று கூடுதல் அமைதி அலுவலகத்தை நிறைத்தது.

ராம் மோகன் அவசர அவசரமாக எழுந்தான்.
"குட் ஆஃப்டர்நூன் சார்!" என்றான் பவ்யமாக.

"கம் இன்!" என்று விட்டு [கர்ஜித்து விட்டு!] தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

திருதிருவென்று ஒரு வித பாக்யராஜ் பார்வையை எங்கள் மேல் பாய்ச்சி விட்டு அவர் பின்னால்
பலி ஆடு மாதிரி போனான். அரைமணி நேரம் கழித்து தொய்ந்து வந்தான்.

"என்னடா ஆச்சு?"
அவர் மாதிரியே பேசிக் காட்டினான்:
"என்ன கிண்டலா? வாலை ஒட்ட நறுக்கிடுவேன். குட் மார்னிங் சொன்னாப் போதும். அதுவும்
ஒரு தடவை சொன்னா போதும். குட் ஆஃப்டர்நூன், குட் ஈவ்னிங், குட் நைட் எல்லாம்
சொல்லத் தேவையில்லை! என்ன தெரிஞ்சுதா?" என்று ஒரு விநாடி நிறுத்தியவன்..

"சொன்னாலும் தப்பு! சொல்லாட்டியும் தப்பு! என்னடா உலகம் இது?" என்றான் வருத்தத்தோடு!



[தொடரும்]


நன்றி: http://tamil.sify.com

புல்லில் பனித் துளி - அறிமுகம்

னி நனைக்கும் விடியற் காலை-

சூரியன் வைத்த அலாரமாய் குயில் கூவிக் கொண்டிருக்கிறது. 'இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்!' என்று
தூக்கத்தை நீட்டித்து, மலையிலிருந்து வெளிவர மனமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்
சூரியன்!

இந்த தொந்தி எங்கிருந்து வந்து இணைந்து கொண்டது என்பது இன்னும் புரிபடாமல்
நடந்து கொண்டு, விரைந்து நடந்து கொண்டு, ஓடிக் கொண்டு.. மனிதர்கள். அதற்கெல்லாம்
எங்கே நேரம் என்று தொழிலகம் நோக்கி விரைந்து கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கம்.
அந்த அதிகாலைப் பொழுதிலேயே நட்பு வட்டத்தை விடாமல் தன்னுடன் இணைத்துக் கொண்ட
பறவைகள்!

யாருமே இந்த புல்வெளிப் பக்கம் வரவில்லை. ஒவ்வொரு புல் மேலும் மகுடம் சூட்டப்
பட்டிருக்கிறதா? இல்லை, ஒவ்வொரு புல்லும் புதிதாக மூக்குத்தி வாங்கி மாட்டிக்
கொண்டிருக்கிறதா?

சோம்பேறி சூரியனின் கதிர்கள் அந்த புல்வெளிப் பனித்துளிகளின் மேல் பட்டவுடன், எல்லா
மூக்குத்திகளும் ஒருசேர மின்னுகின்றன. வந்த வெள்ளைக் கதிரைப் பிரித்துப் போட்டு,
வானவில் வர்ணங்களை வழங்குகின்றன.

சூரியனைப் பார்த்து எத்தனை மகிழ்ச்சி அந்த பனித்துளிகளுக்கு? அந்த சூரியனால் தான்
தாங்கள் புல்லிலிருந்து உதிர்ந்து காணாமல் போகப் போகிறோம் என்பது புரியாமலே
விளையாட்டுத் தனமாய் வர்ண வேடிக்கை காண்பிக்கின்றன.

நமது வாழ்க்கையிலும் இத்தகைய எத்தனையோ புல் பனித் துளிகள்! அந்த நேரத்தில்
வர்ணங்களை வாரி இறைத்து பின் மறைந்து போகும் நிகழ்வுகள். அந்த வர்ண விளையாட்டு
மாத்திரம் மறப்பதில்லை.

எனது புல்வெளிக்கு நீங்களும் வாருங்கள். உதிர்ந்து போன பனித்துளி ஒவ்வொன்றையும்
புல்லுக்கு திலகம் வைப்பது போல் அதன் மீது ஒட்டி வைத்து அன்று பார்த்த அதே வர்ண
ஜாலத்தை இன்றும் காண நினைக்கிறேன். அந்த வர்ணங்கள் சிலிர்க்க வைக்கும்.. சிரிக்க
வைக்கும்.. ஏங்க வைக்கும்.. அடடா என வருத்தப் படவும் வைக்கும்..

தட்டிக் கொடுத்து இன்னும் கேளுங்கள்..
உங்கள் ஞாபகத்துக்குள் புதிதாக வந்து சேர்ந்த உங்கள் வீட்டு பனித்துளிகளையும்
மறக்காமல் அறிமுகப்படுத்துங்கள்.

தங்களைக் கண்டு கொண்டதற்காக அந்தப் பனித் துளிகள் துள்ளிக் குதிக்கின்றன!

[தொடரும்]


நன்றி: http://tamil.sify.com/

Tuesday, August 29, 2006

பொண்ணுங்களைக் கண்டா பயமா?


பாபு அந்தப் பக்கம் போகிற வரை காத்திருந்த சார்லஸ் என் முதுகைத் தட்டினார்.

"ஏன் பொண்ணுங்களைப் பார்க்கிறதுக்கு பயமா?" என்று பகபகவென்று சிரித்தார்.

"என்ன வயசு உனக்கு?" என்றார் சிகரெட்டைப் பற்ற வைத்து.

"இருபத்தி ஒண்ணு" என்றேன். என் குரல் எனக்கே கேட்கவில்லை.

"அவனவன் நூத்தம்பது ரூபா கொடுத்துட்டு வர்றானுங்க. ஃப்ரீயா கொடுத்தாக் கூட வேணாங்கிறியே? அம்மா திட்டுவாங்களா?" என்று சொல்லி விட்டு திரும்ப பகபகபக!



மேலும்.....

Tuesday, August 22, 2006

என் முதல் இதழ் அனுபவம்



அன்புடையீர், வணக்கம். தங்கள் 28.10.1977 தேதியிட்ட இதழில் வந்த 'பூட்டு' கதையை
கிட்டத் தட்ட பத்து முறை திரும்பத் திரும்பப் படித்தேன். [அப்பவும் புரியலையா?] அவ்வளவு அருமையாக இருந்தது கதை. இந்தக் கதையை அடுத்த இதழிலும் வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கதை எழுதிய திருச்சி ராஜனுக்கு என் பாராட்டைத் தெரிவிக்கவும். அவரது முகவரியை தயவு செய்து அனுப்பி வைக்கவும்.


படித்து விட்டீர்களா?
புல்லில் பனித்துளியின் துளி 7

- - - End of Advertisement ;-)) - - - - - - - - - -

Wednesday, August 09, 2006

மறந்தே போயிட்டீங்களா?


"அங்க்கிள், அங்க்கிள், ப்ரஷாந்தை ஞாபகம் இருக்கா அங்க்கிள்?"

பாவி, உன்னையே எனக்கு ஞாபகம் இல்லை. யார் ப்ரஷாந்த்? முகம் தெரியாத அந்த ரமேஷ் மேல் கோபம் வந்தது. யார் ரமேஷ் என்பது போய் யார் ப்ரஷாந்த் என்று மனதைக் குழப்பிக் கொள்ள ஆரம்பித்தேன்.

"அங்க்கிள் மறந்தே போயிட்டீங்களா எங்களை?" இப்போது அந்த குரலில் இனம் புரியாத சோகத்தைக் காண முடிந்தது.



புல்லில் பனித்துளி தொடரின் துளி - 6.

மறக்காமல் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

அன்புடன்,
'சுபமூகா'

Friday, August 04, 2006

தலை மேல் பலன்!

அது என்ன தலை மேல் பலன்?

விபரமறிய - படியுங்கள்.

எனது கட்டுரைத் தொடர் புல்லில் பனித்துளியின் ஐந்தாவது துளி இது.

தொடரைப் படியுங்கள். தங்கள் கருத்துகளை மறக்காமல் தெரிவியுங்கள்.

அன்புடன்,
'சுபமூகா'