Sunday, August 22, 2004

பெங்களூரில் ஒரு மழை நாள் மாலையில்..

என் மேல் விழுந்த மழைத் துளியே, இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
இப்படியெல்லாம் பாட மனம் வரவில்லை. 'பாவி ஐயப்பா, என்னை இந்த மாதிரி மழையில்
மாட்ட வைத்து விட்டாயே!' என்று திட்டிக் கொண்டே Hotel Woodlands நோக்கி
ஓடினேன்.

செல் போன் ஒலித்தது.
'என்ன ஐயப்பன்? எங்க இருக்கீங்க? நீங்க உட்லண்ட்ஸ் முன்னால என்னை வரவேற்க
மாலையோட காத்திருப்பீங்கன்னு நினைச்சேன்..'

'நான் உங்களை வரச் சொன்னது ஏழு மணிக்கு. அங்கேயே ரோட்டில போற
வர்றவங்களைப் பார்த்தபடி நில்லுங்க. நான் வந்துடறேன்' என்றார் ஐயப்பன் கொஞ்சம்
கூட இரக்கமில்லாமல்!

'நான் இங்க காவேரியில் இருக்கேன். பயங்கர ட்ராபிக் ஜாம். வந்து சேர ஒரு
அரை மணி ஆகும்! நான் மேடத்துக்கு போன் போட்டு சொல்லிடறேன். நாங்க
வர்ற வரைக்கும் நீங்க பேசிக்கிட்டிருங்க' என்றார்.


'ஹல்லெல்லா ஹோக்கூடுது!'
அட! நான் இருபது வருடத்துக்கு முன் பேசிய கன்னடம் அல்லவா இது! வியந்து,
பேசியது யார் எனப் பார்க்கலாம் என்று திரும்ப...

ஒரு பதினாறு வயது மதிக்கத்தக்க பெண்மணி, தன் பதினாறு வயது
மதிக்கத் தக்க மகளிடம் பேசிக் கொண்டிருந்தார். [பெண்களுக்கு வயது - என்றும் பதினாறு!]

என் செல்போன் மீண்டும் ஒலிக்க.. 'கணேஷ், எங்க இருக்கீங்க?' என்றது ஒரு பெண்குரல்.

'உட்லண்ட்ஸ் ரிசப்ஷன்'
'நானும் தான்!'
என்றபடி திரும்பினார்.. அட, அதே கன்னட பெண்மணி தான்!!!!

அடடா, அவர் நம்ம இன்றைய guest .. தமிழில் வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளர் ..
அவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

'எனக்கும் தாய் மொழி கன்னடம் தான்!'
'ஹவ்தா?' என்று மலர்ந்தார்.

'உங்க படைப்புகள் எல்லாம் படிச்சிருக்கேன். நல்லா எழுதறீங்க!'

உச்சந் தலை஢யில், குளுகுளு எண்ணெய் வைத்த மாதிரி இருந்தது எனக்கு.

'சமீபத்தில் நீங்க எழுதின அந்த கவிதை சூப்பர்' என்றார் தொடர்ந்து.

க.. வி.. தை.. யா???!!! அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரமாச்சே?!

என் 'தேள் கடி கிடைத்த திருடன்' பார்வை பார்த்ததும் அவரும் குழம்பி..

'நீங்க தானே மரவண்டு?' என்று சொல்ல எனக்கு வண்டு குடைந்த மாதிரி இருந்தது.
'இல்லீங்க, நான் ரொம்ப நல்லவன். நான் கணேச மூர்த்தி!' என்று திருத்தினேன்.
[கணேஷ் வண்டு, கோச்சுக்காதப்பா, சும்மாச்சுக்கும் உண்மைய சொன்னேன்!]

'சின்ன வயதிலிருந்தே எழுதறீங்களா?' [இப்ப உங்களுக்கு வயசாச்சுன்னு சொல்லாம சொல்லிட்டேன்ல!!]

'இல்லை, இப்ப தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே தான் 'அ' போட்டேன்' என்றார்.

அப்படிப் போடு!...

உயிர்மை விழா பற்றி .. அங்கு பார்த்த எழுத்தாளர்களைப் பற்றி .. [அடடா, நான் பார்க்க முடியாத
சுஜாதாவைப் பார்த்துப் பேசி இருக்கீங்களே!] எல்லாம் சொல்லி, காமிராவில் படம் காட்டிக்
கதை சொன்னார்.

ஐயப்பன் திரும்ப செல்லில்.. 'வந்துகிட்டே இருக்கேன்!' என்றார்.
'இப்ப எங்க இருக்கீங்க?'
'காவேரியில்!' என்று சொல்லி கட் பண்ணி விட்டார்.
'அடப்பாவிகளா?! இன்னும் காவேரியிலயா?' என்று விவேக் பாணியில் புலம்பினேன்.
அவர் காவேரி ஹேண்டிகிராப்ட்ஸை சொன்னாரா? இல்லை, காவேரி ஆற்றில் நீந்திக்
கொண்டிருக்கிறாரா என்று புது சந்தேகம் வந்தது!

உட்லண்ட்ஸ் ஹோட்டலில் இவ்வளவு நேரம் இசைத்துக் கொண்டிருந்த மெல்லிய
மேல் நாட்டு சங்கீதம் நிறுத்தப்பட்டு, கர்நாடக சங்கீதம் இசைக்க ஆரம்பித்தது.
'ஏன் இந்த திடீர் மாற்றம்?' என்று சந்தேகத்துடன் பார்த்தால்.. நம்ம
லலிதா ராம் வந்து கொண்டிருந்தார். புன்னகை பரிமாற்றம்.. மற்றும் நல
விசாரிப்புகள்.. லலிதா ராம் 'நான் யார்னு சொல்ல மாட்டேன். நீங்களே
கண்டு பிடிங்க பார்க்கலாம்!' என்று அடம் பிடித்தார். 'ஒரு பாட்டு பாடினா
கண்டு பிடிச்சிடலாம்!' என்று நான் க்ளூ கொடுக்க, நம் எழுத்தாள விருந்தினர்
கண்டு பிடித்து விட்டார்.

அப்படி.. இப்படி என்று ஒரு பதினைந்து நிமிடம் கழித்து.. ஐயப்பன் வந்து சேர,
பின்னாலேயே புலி வந்தது. மன்னிக்க வேண்டுகிறேன்.. ஐயப்பனைப் பார்த்த
மகிழ்ச்சியில் சரியாக கவனிக்கவில்லை. அது.. ஷக்தி.

ஷக்தி கூட இலவச இணைப்பாக, நம் மரத்தடியின் எதிர்கால உறுப்பினரும்
வந்திருந்தார். அவரது மகள்! 'ஏன் இந்த சந்திப்புக்கு வந்து வாங்கிக்
கட்டிக் கொண்டோ ம்?!' என்று அவர் வருத்தப் பட்ட கதையைப் பிறகு
சொல்கிறேன்!

செவிக்கு உணவு கொஞ்சம் வயிற்றுக்கும் சேர்த்து என்று முடிவு
செய்து களத்தில் இறங்கினோம்!

அப்போது இடி இடிக்க ஆரம்பித்தது. உட்லண்ட்ஸ் கலகலத்துப் போனது.
அந்த ஹோட்டலில் எல்லோரும் கிசுகிசுவென்று பேசிக் கொண்டிருக்க
நம் குழு உரத்த குரலில் மரத்தடி பற்றி 'கிசுகிசு' பரிமாறிக் கொண்டிருந்தது.
[என்ன கிசுகிசு? விபரங்கள் தனி மடலில் மட்டும்!]

பல பல பக்கங்கள் கொண்ட மெனு புத்தகத்தைப் பக்கம் பக்கமாக ஆராய்ந்து
உதடு பிதுக்கி, போனால் போகிறது என்கிற மாதிரி
எல்லோருக்கும் தோசை ஆர்டர் செய்தார்கள்.
நமது 'குட்டி இலவச இணைப்புக்கும்' ஒரு தோசை
ஆர்டர் செய்ய, ஷக்தி 'வேணாம், வேணாம். அவ
அதெல்லாம் சாப்பிடமாட்டா. எனக்கு கொடுக்கிற
தோசையில் கொஞ்சம் கொடுத்துக்கிறேன்!' என்று
தடுத்து விட்டார்.

தோசை வர வழக்கம் போல் தாமதமாக.. [இப்ப தான்
மாவு அரைக்கிறாங்கப்பா!] ஒருவரை ஒருவர் கலாய்க்க
ஆரம்பித்தனர். ஒரே சிரிப்பு மழை..


'ஒரே பாடலில் வேறு வேறு ராகங்கள்
இருக்க சாத்தியமா?' என்று கேட்டார்
நம் விருந்தினர் ராமிடம்.

'அதுக்கு பேர் ராகமாலிகா' என்று
சொல்லி, அழகாக அதற்கு சில
உதாரணங்களையும் சொன்னார் ராம்!

[எனக்கு தெரிஞ்சு, கலை, இலக்கியம்
பத்தி நாங்க ஒழுங்கா பேசினது இது
ஒண்ணு தான்னு நினைக்கிறேன்!]

வந்திருந்த கஸ்டமர்கள் இரண்டு மூன்று பேர் இனி
உட்லண்ட்ஸ் பக்கமே தலை வைத்துப்
படுப்பதில்லை என்று வெளியேறியதும், நாங்கள்
பில் கேட்காமலேயே பில் கொடுக்கப் பட்டது.

ஷக்தி, தன் நெற்றிக் கண்ணைத் திறக்காதது
தான் பாக்கி. அந்த சோகக் கதையையும்
சொல்லி, முடித்து விடுகிறேன்..

ஷக்திக்கு எதிரே வைக்கப் பட்ட தோசையில்
ஒரு சிறு பகுதி கூட ஷக்திக்கு கிடைக்கவில்லை.
கொஞ்சம் கூட விட்டு வைக்காமல், முழுக்க
தின்று தீர்த்தார் அவரது மகள். 'போதுமா?
போதுமா?' என்று திரும்பத் திரும்ப ஷக்தி
கேட்பதும், 'இன்னும், இன்னும்' என்று
மகள் தின்பதுமாக..

'ஷக்தி, இன்னொரு தோசை ஆர்டர்
செய்துடலாமா?'

'இல்லை, வேணாம். அவங்க திரும்ப
மாவரைக்க லேட்டாயிடும். இவ
முழுக்க சாப்பிடமாட்டா, கொடுத்துடுவா!'
என்று மிக நம்பிக்கையுடன் சொல்லிக்
கொண்டிருந்தார்!!!!

ஊஹும், அவர் நம்பிக்கை பலிக்கவில்லை.
'ஏண்டி, வீட்ல நான் தோசை போட்டு
கொடுத்தா மூஞ்சியை திருப்பி வச்சுக்கறே!
இங்க விழுந்து விழுந்து சாப்பிடுறயே?'
என்று பொரிந்து தள்ளினார்.

'நீ நல்லாவே பண்றதில்லை!'


அட, யார் அந்த எழுத்தாள விருந்தினர்னே சொல்லலியா?
அது, வேறு யாருமல்ல,
நமது தோழி, ராமச்சந்திரன் உஷா!

அவரது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக
பெங்களூர் மற்றும் மைசூரை சுற்றிப் பார்க்க
வந்திருந்தார். பெங்களூர் மரத்தடி
நண்பர் குழுவுடன் அருமையான
மாலைப் பொழுது அவருக்கு
கிடைத்ததா என்பதை அவர் தான்
சொல்ல வேண்டும்!


அன்புடன்,
'சுபமூகா'

Saturday, August 21, 2004

நண்பர்களுக்கு வணக்கங்கள்.

என் வீட்டுக்கு வந்திருக்கீங்க.

மத்தவங்க வீடு மாதிரி நம்ம வீடு பெரிய வீடு எல்லாம் இல்லீங்கோ!
சின்னவீடுன்னு சொன்னாலும் வேறஅர்த்தம் வர்றதாலே..
ஜஸ்ட் வீடு..அம்புட்டுதேன்!

நான் அப்பப்ப எழுதற கதை,கட்டுரைகளை
இங்க போட்டுவைக்கப் போறேன்.

நீங்களும்என்னைக் கொஞ்சம் தட்டிக்கொடுத்தா
[இங்கேயும் ரெண்டுஅர்த்தம் இருக்கோ?!]
ரொம்ப பெருமைப் படுவேன்.

அப்பப்ப வாங்க..

அன்புடன்,
'சுபமூகா'