Friday, September 24, 2004

ந.தொ.பே

ந்தக் காலத்தில், ஒரு தெரு முனையில் ஒருவன் இரண்டு கைகளையும் ஆட்டி ஆட்டி பேசி, அப்போதைக்கப்போது சிரித்தும் கொண்டிருந்தால் நாங்கள் கொஞ்சம் தூர ஒதுங்கிப் போவோம். சிறிது தூரம் சென்று, நின்று, திரும்பிப் பார்ப்போம். 'பாவம், யார் பெத்த பிள்ளையோ?!' என்று கூட கரிசனப்பட்டதுண்டு. அடுத்த முறை இதே தெருவில் 'அது' இருக்காது, எங்காவது ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் மோட்டுவளையை வெறித்துப் பார்த்தபடி படுத்திருக்கலாம் என்று கூட மனக்கணக்கு போட்டிருக்கலாம்!

இப்போது அப்படியெல்லாம் இல்லை! ஒரு பைத்தியமே தெரு முனையில் நின்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தால் கூட, யாரோ 'நடமாடும் தொலை பேசியில்' [அதாங்க, மொபைல் ஃபோன்] உரையாற்றிக் கொண்டிருப்பதாக நினைத்து, முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் விலகி விடுகிறோம்!

இந்த நடமாடும் தொ[ல்]லை பேசி எந்த அளவுக்கு நம் வாழ்க்கையுடன் பிரிக்க முடியாத அளவுக்கு ஒட்டிப் போய்விட்டது!
யாரிடமாவது 'இன்னைக்கு என்ன தேதி?' என்று கேட்டுப் பாருங்கள். படக்கென்று, பேண்ட் பெல்ட்டில் இருந்து ந.தொ.பேயை எடுத்துப் பார்த்துதான் சொல்கிறார்கள்! ஒருவரிடம் நேரம் கேட்ட போது கூட, கடிகாரத்தைப் பார்க்காமல், இதைத் தான் பார்த்தார்! நேரம்!!

சின்னஞ்சிறு குழந்தைகள் பஸ், லாரி, கார் பொம்மை வைத்திருப்பது போல், பெரியவர்களுக்கு இப்போது ந.தொ.பே! அதில் இருக்கிற பித்தான்களை வைத்து, அப்பப்போ இராமாயணம், மகாபாரதம் கணக்காக என்னவோ எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள்! அது என்ன தான் எழுதுகிறார்களோ?!
சிலர் இருக்கிற இசைத் துணுக்குகளைத் தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள். நமக்கு அந்த இசைத் துணுக்குகள் மேல் முழு எரிச்சல் வரும் வரை விடமாட்டார்கள். இதில் வேறு, காதலி எண் ஒன்று கூப்பிட்டால் இந்த இசை, காதலி எண் இரண்டு கூப்பிட்டால் அந்த இசை, மானேஜர் கூப்பிட்டால் 'லொள், லொள்' இப்படியெல்லாம் வகைப் படுத்தல் வேறு வைத்துக் கொண்டு, படுத்துகிறார்கள்.

அவர்களுக்கு ந.தொ.பே அழைப்பு வரும்போது நீங்கள் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? முதல் இசை வரும். அவர் கவனிக்கவே மாட்டார். இரண்டாம் அழைப்புக்கு, டக்கென்று ந.தொ.பேயைக் கையில் எடுப்பார். மூன்றாம் அழைப்பு ஓஓஓவென்று பெரும் குரலில் கூக்குரலிடும்! அப்போது தான் அவர் உன்னிப்பாக அழைத்தவர் யார் என்று நெற்றி சுருக்கி யோசித்துக் கொண்டிருப்பார். ஒரு வழியாக அந்த ஒலியை நிறுத்தி அவர் 'ஹலோ' சொல்வதற்குள், நமக்கு இரத்தக் கொதிப்பு எகிறியிருக்கும்!

ங்கள் அலுவலகத்துக்கு வரும் வெளியாட்கள் பலரையும் கவனித்துப் பார்த்த போது ஒன்று மட்டும் எனக்கு புரிபடவில்லை. அவர் அலுவலகப் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது, அது எப்படி சொல்லி வைத்தாற்போல் சரியாக அழைப்பு வருகிறது? 'ஹய் [அய்??], நான் ஈ ஓட்டீஸ் அண்ட் கம்பெனியில் இருக்கேன்பா, டிஸ்கஷன்!' என்று சொல்லி அணைத்து விடுவார்கள். சிலருக்கு விடாமல் டக்கென்று இன்னொரு அழைப்பு கூட உடனடியாக வந்து பார்த்திருக்கிறேன்! 'எருமை சாணி!' என்று சொல்லி விட்டு, அதற்கும் பதில் சொல்வார். சிலர் ந.தொ.பேயை தற்காலிகமாக சாகடித்தும் பார்த்திருக்கிறேன்! இவர்கள் எல்லாம் தங்கள் நண்பர்களிடம் முன்னமேயே சொல்லி வைத்து, அழைக்க வைக்கிறார்களோ என்று கூட சில சமயங்களில் யோசித்ததுண்டு!

'லோ, சொல்லு!'
'எங்கேயிருக்கே?'
'ஹ்ம்? பல்லவி தியேட்டர்ல? என்ன விஷயம்?'

பக்கத்து சீட் ஆளின் நிலையை நினைத்துப் பாருங்கள். அதுவும் வில்லன் ஹீரோவைக் குறி வைத்து நெருங்கிக் கொண்டிருக்கிற காட்சியாக இருந்தால்?! நற.. நற.. நற..

பெரிய பெரிய கட்டிடங்களுக்குள் இந்த ந.தொ.பே. அழைப்பு வந்து விட்டால், அவர்கள் பாடு பார்ப்பதற்கு ரொம்ப சுவாரசியமாக இருக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பக்கம் திரும்பி விட்டு, முடியாமல், வட மேற்கு, தென் கிழக்கு பக்கம் கொஞ்சம் முயன்று, அப்போதும் முடியாமல் 'ஒரு நிமிஷம்' சொல்லி, அவசரமாக 'இயற்கை அழைப்பு'க்கு பதில் சொல்ல ஓடுகிற மாதிரி, அவர்கள் திறந்த வெளி நோக்கி ஓடும் அழகே அழகு!

'லோ முண்டம்'
'சொல்லுப்பா!'
'என்ன சொல்லுப்பா? நான் நேத்திக்கு என்ன சொன்னேன்?'
'என்ன சொன்னே? சரியா எட்டு மணிக்கு வரச் சொன்னே..'
'அதெல்லாம் வக்கணையா சொல்லு. இப்ப மணி என்ன?'
'எட்டுக்கு இன்னும் ரெண்டு நிமிஷம் இருக்கு! நீ எங்கே இருக்கே?'
'ரொம்ப ஒழுங்கு. நான் சொன்ன நேரத்துக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னேயே இங்கே இருக்கேன்'
'எங்கே இருக்கே?'
'நான் சொன்ன இடத்திலேயே! ஜனதா பஜார் எதிர்க்க.. பஸ் ஸ்டாப்லே!'
'ஓ, நானும் அங்க தான் இருக்கேன். திரும்பிப் பாருடா முட்டாள், உனக்கு அடுத்து நாலாவது ஆளா நான் தான் நின்னுகிட்டிருக்கேன்!'
'ஓ, வந்துட்டியா? இப்ப 12A வரும். அதுல போயிடலாமா?'
'இல்லை, ஆட்டோல போயிடலாம்.'
'ஓகே. பை!'

இரண்டு பேரும் ந.தொ.பே.களை அணைக்கிறார்கள்! இதற்குப் பெயர்தான் விஞ்ஞான முன்னேற்றம்!

என் நண்பன் ஒருவன் ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை தன் நண்பிக்கு SMS அனுப்புவான். அப்படி என்ன தான் அனுப்புவார்களோ என்று நான் ரொம்பத்தான் கவலைபட்டுக் கொண்டதுண்டு. ஒவ்வொரு நிமிடமும் அவன் முகத்தில் குறும்பு நர்த்தனமாடிக் கொண்டிருக்கும்!

இன்னும் சில பல வருடங்களில் காதல் என்பது தன் முக்கியத்துவத்தை, தனித்துவத்தை இழந்து விடுமோ என்று தோன்றுகிறது! அப்போதெல்லாம் ஒரு கடுதாசி எழுதி நம் மனம் கவர்ந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவள் என்ன பதில் எழுதுவாளோ என்று பரிதவித்துக் காத்திருந்து, அந்த மடல் வரும் போது, மனம் அடையும் அந்த குதூகலம் இப்போது இருக்கிறதா?!

'இன்னாமே! நான் உன்னை விரும்புறேன்! நீ என்னை விரும்புறியா?' கீய்ய்ய்ய்ய்ய்க்.. அனுப்பப் பட்டது! ஐந்து விநாடிகளுக்குப் பிறகு. கீய்ய்ய்ய்ய்ய்க்.. 'இல்லை! நான் அப்படியெல்லாம் பழகவில்லை!'

இப்போது ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு, இந்த ந.தொ.பேயை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
'அம்பது பைசா குடு சார். காஷ்மீரோட பேசிக்க!'
'ராத்திரி பேசு நைனா, காசே குடுக்காதே!'
'எத்தினி வாட்டி வேணா sms அனுப்பிக்க! free!!'
'உன் ஊட்டுக்கு மாத்திரம் பேசு. பேசு. பேசு. பேசிக்கிட்டே இரு!'

இப்படியெல்லாம் ஆட்களை இழுத்துப் போட எக்கச்சக்க தந்திரங்கள்!
ஒரு காலத்தில், தூர்தர்ஷன் வெள்ளிக்கிழமை தோறும் ஒளியும் ஒலியும் என்று ஒரு நிகழ்ச்சி வழங்கியது. ஏழரை மணிக்கே எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, கைகளில் ஈரத்தை ஒற்றி எடுத்தபடி, ஒரு கும்பல் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமரும்! நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன், எல்லோர் முகங்களிலும் ஒரு ஆர்வம் வந்து அமர்ந்திருக்கும்.

இப்போது நிமிடத்துக்கு நிமிடம், சேனலுக்கு சேனல், ஒளியும் ஒலியும் நிற்காமல் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. அடுப்படியில் இருந்து அப்போதைக்கப்போது எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லும் ஆர்வமின்மையும் வந்தாயிற்று.

'ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்!'

இந்த மாதிரி கவித்துவமாக நினைத்து அவசரமாகத் தொலைபேசியை எடுத்து ஆரவாரமாகப் பேசும் நிலை போய்.... இன்னும் சில நாட்களில்..

'ம் ம் ம் ம் ம்.. சொல்லுப்பா, எதுக்கு போன் பண்ணே?'