அந்த விபரீத ஆசை
புல்லில் பனித் துளி
துளி 7
எனக்கு எப்போது அந்த விபரீத ஆசை மனதில் உதித்தது என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்!
தயவு செய்து நாக்கை உள்ளே இழுத்துக் கொள்ளவும். நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் விவாதிக்கப் போகிற கட்டுரை இது அல்ல. நூறு சதவிகிதம் சைவக் கட்டுரை!
என்னுடைய பெயர் பத்திரிக்கையில் வர வேண்டும் என்கிற விபரீத ஆசை எப்போது எனக்கு ஏற்பட்டது? அதுவும் படு விபரீதமாக எல்லா பத்திரிக்கைகளிலும் என் பெயர் வர வேண்டும் என்று தான் நான் ஆசைப் பட்டேன்/ படுகிறேன்/ படுவேன். எதிரில் வருகிறவர்கள் கைகளில் என் கதை வந்த பத்திரிக்கை இருப்பது போலவும் அவர்கள் ரொம்ப சுவாரசியமாக அதைப் படிப்பது போலவும் கற்பனை செய்து கொள்வேன்.
எழுத்தாளராக ஆசைப் படுகிற அனைவருக்குமே இந்த எண்ணம் வரத் தான் வேண்டும். அது இல்லையெனில் அவர் எழுத்தாளராக முடியாது என்பது என் தாழ்மையான கருத்து. கனவு காண்பதற்கு யார் அனுமதி வேண்டும்? காசா? பணமா? கனவு காணுங்கள். அந்த கனவு இல்லையெனில் நிச்சயம் நனவு இல்லை.
என் கனவு முதலில் இப்படி இருந்தது. திருச்சி, சென்னை, இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் என் பெயர் ஒரு நிமிடத்துக்கு ஒரு தடவை வர வேண்டும் என்று. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேனா என்றால் அது தானில்லை. என் பெயர் வருகிற நேரம் நான் வானொலியைக் கேட்பேனோ மாட்டேனோ என்று நினைத்து பயந்து எந்தக் கடிதமும் அனுப்பவில்லை!
மூன்று முறை சிறுவர் நிகழ்ச்சிகளில் என் பெயர் ஒலிபரப்பானது. நிகழ்ச்சி பற்றி கருத்து அனுப்பி வைத்தேன். கடிதத்தைப் படித்து விட்டு, எழுதியனுப்பிய தம்பி கண்ணுக்குடி மேற்கைச் சேர்ந்த கணேச மூர்த்தி என்று சொன்னார்கள்.
என் பெயரைக் கேட்பதற்காக ஒரு மணி நேரம் வானொலி முன் தவமிருந்தது இப்போது கூட சிலிர்ப்பை என்னுள் ஏற்படுத்துகிறது. கடிதங்களைக் கடைசியில் தான் படிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனாலும் எனக்கு பொறுமை இல்லை. வீட்டில் உள்ள எல்லோருக்கும் சத்தம் போடக் கூடாது என்று உத்தரவு போட்டு விட்டு, வானொலியின் ஒலியைக் கூட்டி வைத்து, ஒரு வேளை கரண்ட் போய் விடுமோ என்று கூடுதலாக பயந்து... அட, அட!
அடுத்த நாள் ரொம்பத் திமிராக நடை போட்டேன். வகுப்பில் இருந்த எல்லோரையும் அமைதிப் படுத்தி விட்டு, என் பெயர் சென்னை வானொலியில் வந்த விஷயத்தை சொன்னேன். 'அப்படியா?' 'நிஜமாவாடா?' இப்படியெல்லாம் சிலர் கேட்க, சிலர் அசுவாரசியமாக இருக்க, யாரும் அந்த நிகழ்ச்சியைக் கேட்காதது என் மனதில் மிக ஆற்றாமையை உண்டாக்கியது. அதற்கப்புறம் தான் பத்திரிக்கையில் பெயர் வர வேண்டும் என்று என் ஆசை மாறிப் போனது.
"அன்புடையீர், வணக்கம். தங்கள் 28.10.1977 தேதியிட்ட இதழில் வந்த 'பூட்டு' கதையை
கிட்டத் தட்ட பத்து முறை திரும்பத் திரும்பப் படித்தேன். [அப்பவும் புரியலையா?] அவ்வளவு அருமையாக இருந்தது கதை. இந்தக் கதையை அடுத்த இதழிலும் வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கதை எழுதிய திருச்சி ராஜனுக்கு என் பாராட்டைத் தெரிவிக்கவும். அவரது முகவரியை தயவு செய்து அனுப்பி வைக்கவும்' என்றெல்லாம் கடிதம் அனுப்ப ஆரம்பித்தேன்.
'கடிதம் வெளியானால் அதை நண்பர்களிடம் காண்பித்து காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப நம் பெயரைப் பார்க்க முடியும்' என்றெல்லாம் எனக்குள் சொல்லிக் கொள்வேன். கடிதம் தான் வரும் வழியைக் காணோம்.
இந்தப் பத்திரிக்கைகள் யாவும் நம்மைக் கண்டுகொள்ளவில்லை - ஒரே வழி நாம் பத்திரிக்கை தொடங்குவது தான் என்று முடிவு செய்தேன். ஆரம்பித்து விட்டேன். மல்லிகை - கையெழுத்து பத்திரிக்கை. ஆசிரியர் - கணேச மூர்த்தி என்று எழுதும் போது இதயம் பெருமிதத்தில் விம்மியது.
நான்கு பக்கங்கள் வெள்ளைத் தாளில் ஏதோ எழுதி ஒப்பேற்றி விட்டேன். முதல் இதழ் தயார்!
ஒவ்வொரு பக்கத்திலும் வண்ணங்கள் சேர்த்தேன். வகுப்பிற்கு ஆசிரியர் வரும் முன்னர் கிடைக்கும் நிமிடங்களைப் பயன் படுத்திக் கொண்டேன். இதையெல்லாம் வீட்டில் செய்தால் உதை விழும் என்பது நான் அறிந்ததே.
மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் [அப்போதெல்லாம் நான் ரொம்ப நல்லவன்!] டெஸ்க்குக்கு கீழ் மறைத்து வைத்து என் பத்திரிக்கையைப் படித்தார்கள். அவர்கள் மறைத்து வைத்துப் படிப்பதை தெரியாத மாதிரி நான் பார்த்து மனம் மகிழ்வேன்.
என் பத்திரிக்கையில் கேள்வி-பதில் பகுதி முக்கிய இடம் வகித்தது. குமுதம் அரசு பதில்கள் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். மாய்ந்து மாய்ந்து படிப்பேன். அதனால் என் பத்திரிக்கையில் நான் முதலில் சேர்த்தது கேள்வி-பதில் பகுதியைத் தான்.
முதல் இதழுக்கு கேள்வியும் நானே, பதிலும் நானே! அடுத்த இதழ் முதல் கேள்விகள் வந்து குவிந்தன. துண்டு சீட்டுகளில் கேள்விகள். கேள்வியைக் கொடுத்ததும் பதில் கேட்பார்கள். 'அடுத்த இதழைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்' என்று அநியாயத்துக்கு சஸ்பென்ஸ் வைப்பேன்.
இரண்டு இதழ்கள் வெளியானதும் எல்லோருக்கும் நான் பத்திரிக்கையை அனுப்பவில்லை. சந்தா தாரர்கள் மட்டும் தான் என் இதழைப் படிக்க முடியும். சந்தா எவ்வளவு என்று கேட்கிறீர்களா? வெள்ளைத் தாள்கள் நான்கு பக்கங்கள். அது தான் சந்தா! என்னுடைய நோட்டுப் புத்தகத்திலிருந்து தொடர்ந்து எல்லா இதழ்களுக்கும் கிழித்துக் கொண்டிருந்தால் வீட்டில் கிழித்து விடுவார்கள் என்பதால் இந்த வழியைக் கடைபிடிக்க வேண்டியதாயிற்று.
சந்தா கேட்டவுடன் யாரும் 'உன் பத்திரிக்கையே வேண்டாம்!' என்றெல்லாம் சொல்லவில்லை. தமிழ் வாத்தியார், கணக்கு வாத்தியார் அறுவையிலிருந்து தப்பிக்க இது அவர்களுக்கு தேவையாக இருந்தது போலும். தொடர்ந்து ஆதரவு அளித்தார்கள்.
கிட்டத்தட்ட ஒரு வருட காலம் எந்த ஆசிரியருக்கும் தெரியாமல் மறைத்து வைத்த என் பத்திரிக்கை ஒரு நாள் மாட்டிக் கொண்டது. தமிழாசிரியர் ஏதோ கேள்வி கேட்க - என் இதழில் கேள்வி-பதிலில் மூழ்கியிருந்த இளவழகன் அதை கவனிக்கவில்லை.
'என்ன அது?' என்று விரைந்து வந்து பிடுங்கிக் கொண்டார். பார்த்தவுடன் என்னைத் திரும்பிப் பார்த்தார். கையெழுத்து காட்டிக் கொடுத்து விட்டது. இளவழகனை முறைத்து விட்டு பத்திரிக்கையை எடுத்து தன் புத்தகத்துக்குள் வைத்துக் கொண்டார். எனக்கு திக்கென்றது. எனது அப்பாவிடம் வத்தி வைத்து விட்டால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அப்பா தான் அந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர்!
வீட்டுக்குள் நுழையும் போதே அப்பா 'நில்லு!' என்று சொல்வார் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டே போனேன். அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை. இரவு சாப்பாட்டின் போது அப்பா மெல்ல ஆரம்பித்தார்.
'என்னவோ பத்திரிக்கை எல்லாம் நடத்தறியாமே?'
கேட்டதும் 'ஆ,,மா!' என்று சாதத்தோடு வார்த்தைகளையும் மென்று விழுங்கினேன்.
'ரொம்ப நல்லா இருக்குன்னு மீனாட்சி சுந்தரம் பாராட்டிகிட்டே இருந்தார். கேள்வி பதில் பகுதிக்கு நீ தான் பதில் எழுதறியா?'
'ம்..'
'நல்லா இருந்ததுன்னு சொன்னார்.'
'முழு பத்திரிக்கையும் நான் தான் எழுதறேன்ப்பா!' என்றேன் மகிழ்ச்சி தாளாமல்.
'இதெல்லாம் இப்ப வேண்டாம். ஒழுங்கா படிச்சு உருப்படறதைப் பாரு. எஸ்.எஸ்.எல்.சி. முடிச்ச பிறகு இதையெல்லாம் வச்சுக்கோ!' என்று சொல்லி விட்டு 'ரசம் இன்னும் கொஞ்சம்' என்றார் அம்மாவிடம்.
என் பத்திரிக்கை நின்று போனது. எல்லோருக்கும் இரண்டு பக்கங்கள் சந்தாவைத் திரும்பக் கொடுத்து விட்டேன்!
[நன்றி: http://tamil.sify.com]
6 பின்னூட்டங்கள்:
//என் பெயர் வருகிற நேரம் நான் வானொலியைக் கேட்பேனோ மாட்டேனோ என்று நினைத்து பயந்து எந்தக் கடிதமும் அனுப்பவில்லை! //
அருமை.
ரொம்பத்தான் கஷ்டப்பட்டு விட்டீர்களே. பேசாமல் gazette-ல் சொல்லி கோபால் என்று பெயரை வைத்துக் கொண்டிருக்கலாமே. வானொலியில்தான் நிமிடத்துக்கு நிமிடம் கோபால் பல்பொடி விமரிசனம் வருமே.
முகம்மது பின் துக்ளக் சினிமாவில் துகளக்கே ரேடியோ பேச்சுக்குப் பிறகு கோபால் பல்பொடி விளம்பரம் தருவாரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மதினி மற்றும் டோண்டு,
கருத்துகளுக்கு நன்றி.
அன்புடன்,
சுபமூகா
அந்த விபரீத ஆசைதான் இப்ப இணையத்தில் பலித்துவிட்டதே
பத்தி எழுதும் அளவில்.
இதனால் தெரியும் கருத்து
எழுத்தும் எழுத்துப் பழக்கமும் எழுத்தை அளிக்கும்:-)
மதுமிதா,
ஆம், நாம் தெரியாமலேயே செய்கிற சின்னஞ்சிறு செயல்கள் தான் பெரிய செயலுக்கு
நம்மை அழைத்து செல்கின்றன!
கருத்துக்கு நன்றி.
ரொம்ப நல்லா இருந்திச்சு.
டோண்டுவின் பதிலும் சூப்பர்.
//
[அப்போதெல்லாம் நான் ரொம்ப நல்லவன்!]
//
இது எதுக்கு??
Post a Comment