உப்பு ஏரி நகரத்திலே...
புல்லில் பனித் துளி
துளி: 4
கடந்த வாரம் கண்ட (கண்ட) கனவுகளில் அமெரிக்கக் கனவைப் பற்றி எழுதி விட்டு கண்களை மூடித் திறப்பதற்குள் அமெரிக்காவுக்கு வர வேண்டியதாகி விட்டது. சிங்கப்பூர் பற்றி இப்போது கனவு காணலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!
இந்த வாரக் கட்டுரையை அமெரிக்காவின் அதி அற்புத, அதி நவீன, அதி அழகு, அதி.. அதி.. அதிகமாகக் கையைக் கடிக்கும் தங்குமிடத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
வந்த இரண்டு நாட்களுக்குள் மனைவி, மகள் மீது அன்பு கூடி இருக்கிறது. 'செலவு பற்றி யோசிக்க வேண்டாம். இன்னும் பேசு!' என்று சொல்லித் திரும்பத் திரும்ப அதே 'எப்படி இருக்கிறாய்?' 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?'
என்னவோ ஒரு இருபது நாட்கள் ஓடிப் போனது போல் தடுமாற்றம். புரிந்து கொள்ளவே முடியாத இயற்கை இங்கும் விளையாட்டைக் காண்பிக்கிறது. இரவு ஒன்பது மணியானாலும் சூரியன் மறையாமல் அடம் பிடிக்கிறது.
'டிபன் சாப்பிட்டாச்சா?' என்று மனைவி கேட்க, 'இங்கே ராத்திரி. சாப்பாடே ஆயிடுச்சி!' என்று சொல்ல, 'ஐயோ, மறந்தே போயிடுது!' என்று சின்னச் சின்னக் குழப்பங்கள்.
சான்ஃப்ரான்சிஸ்கோ விமான நிலையத்தில் சோதனை செய்யும் பகுதியில், போட்டிருக்கும் ஜெர்க்கினைக் கழற்ற சொன்னார்கள். கழற்றி அதை கன்வேயரில் போட்டேன். 'செல் ஃபோன்?' என்றார்கள். எடுத்து அதையும் வைத்தேன். 'பெல்ட்டைக் கழற்றுங்கள்' என்றார்கள். அடுத்து பேண்ட்டோ என்று யோசித்துக் கொண்டே அதையும் கழற்றி வைத்தேன். 'ஷூவைக் கழற்றுங்கள்' என்றார்கள். 'ஷூ??' என்று ஒரு முறைக்கு இருமுறை நான் கேட்க, 'ஆமாம்' என்று ஒரு முறைக்கு இரு முறை அவரும் கூறி, 'நாம் அருமையான அமெரிக்க தேசத்தில் இருக்கிறோம்!' என்று சொல்லிச் சிரித்தார். திருப்பதி கோவிலுக்குள் போகிற மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள்!
சால்ட் லேக் சிடி விமான நிலையத்தில் இருந்து காரில் முப்பது நிமிடப் பயணம். கார் வழுக்கிக் கொண்டு போகிறது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க ரம்மியமான பிரதேசம். அருமையான சாலைகள். ஒவ்வொரு சாலையிலும் ஆங்காங்கே பிரிந்து போகும் கிளை சாலைகள். எங்கு பார்த்தாலும் விநாடிக்கு ஒரு தடவை நம்மை கடக்கும் கார்கள். கார்கள். கார்கள்! மிகக் குறைந்த பேர் தான் பேருந்துக்காகக் காத்திருப்பதைக் காண முடிகிறது. நான் அலுவலகத்துக்கு செல்கிற குளிரூட்டப் பட்ட பேருந்தில் மொத்தம் பத்து பேர் தான் இருக்கிறார்கள். மிகச் சிறிய ஊர் என்று ஒதுக்கி வைக்கப் படாமல் எல்லா வசதிகளையும் பெற்றிருக்கும் மக்களைப் பார்த்து கொஞ்சம் பொறாமையாகத் தான் இருக்கிறது. எல்லாம் இருந்தும் என்னவோ ஒன்று குறைவது போல் தான் எனக்குத் தோன்றுகிறது. உயிரில்லாத வாழ்க்கை! ஒருவேளை, எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதோ? அது தெரியவில்லை!
ஊருக்கு வந்து சேர்ந்த உடனேயே எக்கச்சக்க அறிவுரைகள் கொடுக்கப் பட்டு விட்டன. 'இரவு சூரியன் இருக்கிறது என்பதற்காக ஒன்பது மணிக்கு வெளியே போக வேண்டாம். அதுவும் தனியாக செல்வது மிக மிக ஆபத்து. வழிப்பறிக் கொள்ளைகள் அதிகம் நடக்கும் ஊர். கையில் பத்து டாலருக்கு மேல் வைத்துக் கொள்ள வேண்டாம். ஜாக்கிரதை' என்று நண்பர் எச்சரிக்கை செய்து விட்டு கொஞ்ச தூரம் நடந்தவர் நின்று, திரும்பி வந்து, 'அப்படி யாராவது வழி மறித்துக் கேட்டால், எதுவும் பேசாமல் பணத்தைக் கொடுத்து விடுங்கள். ஒரு டாலருக்காகக் கூட கொலையும் செய்யத் தயங்க மாட்டார்கள்!' என்று டய்ய்ய்ங்ங்ங்க்க்க்க்க்.... என்று இசை சேர்க்காத குறையாக வசனம் உதிர்த்து விட்டுப் போனார்.
நன்றி: http://tamil.sify.com
4 பின்னூட்டங்கள்:
//உயிரில்லாத வாழ்க்கை! ஒருவேளை, எனக்கு மட்டும் தான் அப்படி தோன்றுகிறதோ? அது தெரியவில்லை//
உங்கள் குடும்பம் உங்களுடன் இருந்தால் உயிர்தானே வரும்
சுபமூகா
வரீங்களா சிங்கைக்கு??
வாருங்கள்.
எல்லா வளர்ந்த நகரங்களிலும் இந்த வெருமை அதிகம் தான் ஆனால் ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும் அந்த வெருமை நமது வயது அதிகமாகிவிட்டதாலும் வரக்கூடும்.
கால்கரி சிவா- நூறு சதவிகிதம் உண்மை.
வடுவூர் குமார் - இந்தக் கட்டுரையை எழுதும் சமயம் எனக்கு வயதாகி விட்ட விஷயத்தை மறந்து விட்டேன் என்று நினைக்கிறேன் ;-)
Ganesh,
Thats true. Even Im feeling so
Crish
Post a Comment