மறந்த முகங்கள்
புல்லில் பனித்துளி
துளி - 6
அலுவலகத்தில் மிக முக்கியமான ஒரு கலந்தாலோசிப்புக் கூட்டத்தில் இருக்கும் போது தான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. நான் கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத செய்தி அந்த அழைப்பில் இருந்தது.
நான் சொல்லப் போகும் முடிவுக்காக என் எதிர்க்க என் குழுவினர் காத்திருந்தனர். மிக முக்கியமான முடிவு. கூடுதல் இரண்டு மணி நேரம் எல்லோரும் ஒத்துழைத்தால் இந்தப் பணியை செவ்வனே முடித்து விடலாம். இந்த இக்கட்டான கட்டத்தைத் தாண்டி விட்டால், இன்னும் அருமையான பணிகள் தேடி வரும். எல்லோருமே கொஞ்சம் சோர்ந்திருந்தார்கள். அவர்களை உற்சாகப் படுத்தி இன்றைய பொழுதை நன்றாகக் கொண்டு சென்றாக வேண்டும். யார் யார் என்ன செய்ய வேண்டும் என்று குறித்து விட்டு அதைச் சொல்ல நிமிரும் போது தான் அந்தத் தொலைபேசி அழைப்பு.
என் மொபைலை எடுத்து யார் என்று பார்த்தேன். புதிய எண். யாராக இருக்கும் என்று நெற்றி சுருக்கி விட்டு 'எக்ஸ்க்யூஸ் மீ' சொல்லி விட்டு 'ஹலோ' என்றேன்.
"அங்க்கிள், நல்லா இருக்கீங்களா?" என்றது மறுமுனை.
அங்க்கிள்.. புரிபடாத குரல். எங்கேயோ கேட்ட குரல் தான். ஆனால் சட்டென்று ஞாபகத்துக்கு வர மறுத்த குரல். யார் யார் என்னை அங்க்கிள் என்று அழைப்பார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் அயற்சியாக இருந்தது. நான் ஐந்து விநாடிகளுக்கு மேல் மௌனம் காத்து விட்டேனோ?
"அங்க்கிள், யார்னு தெரியலை இல்லியா? நான் தான் ரமேஷ். நான் உங்க கிட்டே இதுக்கு முன் ஃபோன்ல பேசினதே இல்லியே, அதனால உங்களாலே அடையாளம் கண்டு பிடிக்க முடியலை. இப்ப ஞாபகம் வந்ததா?"
"ர..மேஷ்? ஓ, நல்லா இருக்கியா?"
இன்னும் அந்த ரமேஷின் முகம் என் மூளைத் திரைக்கு வர தயங்கிக் கொண்டிருந்தது. யார் இந்த ரமேஷ்?! அந்த வார்த்தைகள்.. அதில் இருந்த வேகம்.. இதெல்லாம் எனக்கு பரிச்சயமான ஒன்றாகத் தான் தெரிகிறது. ஆனால் மறந்து விட்டிருக்கிறேன்.
"ஆண்ட்டி எப்படி இருக்காங்க அங்க்கிள்? அப்புறம் ராஜி?"
"ம்ம். எல்லோரும் சௌக்கியம். அ..து.. ரமேஷ், நான் ரொம்ப முக்கியமான மீட்டிங்லே இருக்கேன். நான் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு போன் பண்ணட்டுமா?"
இந்த அழைப்பிற்கான நேரம் இதுவல்ல! இதை எப்படியாவது தட்டிக் கழித்தாக வேண்டும் என்று தான் எனக்கு தோன்றியது.
"வச்சுடாதீங்க அங்க்கிள்" அவசர அவசரமாக சொன்னான் ரமேஷ். "நான் பப்ளிக் பூத்ல இருந்து பேசுறேன். நீங்க திரும்ப போன் பண்ண முடியாது."
"ஓ! சாரி! சொல்லு ரமேஷ்."
நான் கடிகாரத்தைப் பார்த்தபடி கூறினேன். இந்த அழைப்பைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று என்னை நானே திட்டிக் கொண்டேன். என் குழுவினருக்கு கொஞ்சம் காத்திருக்கும் படி சைகையிலேயே சொன்னேன்.
"அங்க்கிள், அங்க்கிள், ப்ரஷாந்தை ஞாபகம் இருக்கா அங்க்கிள்?"
பாவி, உன்னையே எனக்கு ஞாபகம் இல்லை. யார் ப்ரஷாந்த்? முகம் தெரியாத அந்த ரமேஷ் மேல் கோபம் வந்தது. யார் ரமேஷ் என்பது போய் யார் ப்ரஷாந்த் என்று மனதைக் குழப்பிக் கொள்ள ஆரம்பித்தேன்.
"அங்க்கிள் மறந்தே போயிட்டீங்களா எங்களை?" இப்போது அந்த குரலில் இனம் புரியாத சோகத்தைக் காண முடிந்தது.
"உங்க எதிர் வீட்டில் இருந்தோமே? அப்புறம் நாங்க மைசூர் பேங்க் காலனிக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னே வந்துட்டோம். நான், ப்ரஷாந்த், ராம், சுதாகர், பிரேமா.. மறந்துட்டீங்களா அங்க்கிள்?"
சே! இவர்களை எப்படி மறந்தேன்? ரமேஷ்! வெளிச்சத்தில் இருந்து இருட்டுக்கு வந்ததும் கண்களைக் கொஞ்சம் பழக்கப் படுத்திக் கொண்ட பின்னர் மெல்ல தெரிய ஆரம்பிக்கிற உருவம் போல் ரமேஷ் என் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தான்.
"ரொம்ப நாள் ஆச்சு இல்லியா பேசி. உடனே கண்டுபிடிக்க முடியலை. அப்புறம் எனக்கு ஒரு அஞ்சாறு பேர் ரமேஷ் தெரியும். குழம்பிட்டேன். சொல்லு. அப்பா அம்மா எப்படி இருக்காங்க? ப்ரேமா இப்ப ஒன்பதாவது இல்லையா? சுதாகர் ராம் ரெண்டு பேரும் நல்லா படிக்கிறாங்களா? இல்லை இப்பவும் சண்டை போட்டுகிட்டிருக்காங்களா? அப்புறம் குட்டி ப்ரஷாந்த் எப்படி இருக்கான்?" மூச்சு விடாமல் பேசினேன். என்னவோ என் உறவினர்களை நிரம்ப நாள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சி என் வார்த்தைகளில் தெரிந்தது.
"ப்ரஷாந்த் இப்ப இல்லை அங்க்கிள்." அவன் குரல் உடைந்தது.
"செ.. செ.. செத்துப் போயிட்டான் அங்க்கிள்"
"என்ன?"
"பஸ் மேலே ஏறிடுச்சு அங்க்கிள்."
"ஐயோ! எப்படி ஆச்சு? ரோட் க்ராஸ் பண்ணும் போதா?"
"இல்லை அங்க்கிள், அப்பாவோட பஸ்ஸில் தான். இவன் பின்னால் இருக்கிறது தெரியாமல் ரிவர்ஸ் எடுக்கப் போய், அடிபட்டு செத்துப் போயிட்டான் அங்க்கிள். ஒரு மணிநேரம் ஆஸ்பத்திரியில் இருந்தோம். இப்ப தான் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாலே போயிட்டான்."
"ச்ச்ச்ச்ச்"
"எங்களுக்கு இந்த ஊர்ல யாரைத் தெரியும்? உங்க ஞாபகம் தான் உடனே வந்தது. அதான் உங்களுக்கு போன் பண்ணினேன். ஆண்ட்டிக்கும் சொல்லிடுங்க அங்க்கிள். என்னாலே பேச முடியலை அங்க்கிள். நான் வச்சுடறேன் அங்க்கிள். ப்ரஷாந்த்!" என்று அவன் விக்கி விக்கி அழுவதைக் கேட்க முடிந்தது. சட்டென்று தொடர்பு அறுபட்டது.
அலுவலகத்தில் வேலை அதற்கப்புறம் ஓடவில்லை. அந்த துரு துரு ப்ரஷாந்த் என் மனது முழுக்க ஓடி ஓடி விளையாட ஆரம்பித்தான். என் குழுவினருக்கு சில முக்கியக் குறிப்புகள் கொடுத்து விட்டு நான் கிளம்பினேன்.
'அங்க்கிள், நல்லா இருக்கீங்களா?'
அந்த சோக நேரத்திலும் என் நல விசாரிப்பை செய்த அந்த ரமேஷ் ரொம்ப உயரத்தில் ஏறி நின்றிருப்பதாக உணர்ந்தேன். வீடு.. அலுவலகம்.. திரும்ப வீடு! வாழ்க்கை இப்படி இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்க.. முக்கியமான இந்த மாதிரி மனிதர்களை நாம் மறந்தே போய் விடுகிறோம். சொல்லப் போனால் நம் உற்றார் உறவினரை விட அதிகமாக மதிக்கப் பட வேண்டியவர்கள் இவர்கள் தான் என்று சொல்ல வேண்டும்.
மங்களூரில் இருந்து பிழைப்புக்காக பெங்களூர் வந்த குடும்பம் அது. அப்பா பஸ் டிரைவர். மாதத்தில் பாதி நாட்கள் வீட்டில் இருப்பதில்லை. வீட்டில் இருந்தாலும் முழுக்கக் குடித்து விட்டு சுருண்டு விடுவார். யாரிடமும் அதிகம் பேச மாட்டார். கேட்ட கேள்விக்கு இரண்டு வார்த்தைகளில் பதில் வரும். அவ்வளவே.
மனைவியும் அந்தக் குழந்தைகளும் நேரெதிர். நிறுத்தவே முடியாத பேச்சு. பேச்சு, சிரிப்பு. சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அந்த வறுமை.. சோகம் கலந்த வாழ்க்கை இதை மறைக்க அவர்கள் வெளியே சிரிக்கிறார்களோ என்று சில சமயம் நான் நினைத்திருக்கிறேன்.
புத்தாண்டை வரவேற்க வீடு முழுக்க விளக்குகள் ஏற்றி விட்டு அந்த சிறிய வீட்டில் நடக்க முடியாமல் அடி மேல் அடி வைத்து நடந்ததை இப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டேன். ஹோலி தினத்தன்று காலையில் சீக்கிரமே நான் அலுவலகம் சென்று விட, என்னை வண்ணத்தில் குளிப்பாட்ட திட்டம் போட்டுக் கொண்டு, மாலை நான் அலுவலகத்தில் இருந்து வருவதற்காக காத்திருந்தன அந்த வாண்டுகள். மாலை நான் வீடு திரும்பவும் 'ஓ...' வென்று கூக்குரலிட்டுக் கொண்டு வந்தவர்கள் நின்று சற்று தயங்கினார்கள்.
"பளிச்சுன்னு இப்படியா வெள்ளை சட்டை போட்டுக்கிட்டிருக்கிறது அங்க்கிள்? போங்க, போய் கழட்டிட்டு வாங்க!" என்று சொல்லி பெரிய மனது பண்ணி பனியன் லுங்கிக்கு மாறியவுடன் ஹோலி கொண்டாடிய காட்சி கண்களில் கண்ணீரில் அமிழ்ந்து போனது.
"என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?" என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் மனைவி.
ப்ரஷாந்தைக் கண்டால் மிக மிகப் பிரியம் அவளுக்கு. அதனால் தான் நான் செய்தியை தொலை பேசியில் தெரிவிக்கவில்லை.
இந்த செய்தியை எப்படி அவளிடம் சொல்லப் போகிறேன்?
[நன்றி: http://tamil.sify.com]
0 பின்னூட்டங்கள்:
Post a Comment