Thursday, August 31, 2006

புல்லில் பனித் துளி - அறிமுகம்

னி நனைக்கும் விடியற் காலை-

சூரியன் வைத்த அலாரமாய் குயில் கூவிக் கொண்டிருக்கிறது. 'இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்!' என்று
தூக்கத்தை நீட்டித்து, மலையிலிருந்து வெளிவர மனமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்
சூரியன்!

இந்த தொந்தி எங்கிருந்து வந்து இணைந்து கொண்டது என்பது இன்னும் புரிபடாமல்
நடந்து கொண்டு, விரைந்து நடந்து கொண்டு, ஓடிக் கொண்டு.. மனிதர்கள். அதற்கெல்லாம்
எங்கே நேரம் என்று தொழிலகம் நோக்கி விரைந்து கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கம்.
அந்த அதிகாலைப் பொழுதிலேயே நட்பு வட்டத்தை விடாமல் தன்னுடன் இணைத்துக் கொண்ட
பறவைகள்!

யாருமே இந்த புல்வெளிப் பக்கம் வரவில்லை. ஒவ்வொரு புல் மேலும் மகுடம் சூட்டப்
பட்டிருக்கிறதா? இல்லை, ஒவ்வொரு புல்லும் புதிதாக மூக்குத்தி வாங்கி மாட்டிக்
கொண்டிருக்கிறதா?

சோம்பேறி சூரியனின் கதிர்கள் அந்த புல்வெளிப் பனித்துளிகளின் மேல் பட்டவுடன், எல்லா
மூக்குத்திகளும் ஒருசேர மின்னுகின்றன. வந்த வெள்ளைக் கதிரைப் பிரித்துப் போட்டு,
வானவில் வர்ணங்களை வழங்குகின்றன.

சூரியனைப் பார்த்து எத்தனை மகிழ்ச்சி அந்த பனித்துளிகளுக்கு? அந்த சூரியனால் தான்
தாங்கள் புல்லிலிருந்து உதிர்ந்து காணாமல் போகப் போகிறோம் என்பது புரியாமலே
விளையாட்டுத் தனமாய் வர்ண வேடிக்கை காண்பிக்கின்றன.

நமது வாழ்க்கையிலும் இத்தகைய எத்தனையோ புல் பனித் துளிகள்! அந்த நேரத்தில்
வர்ணங்களை வாரி இறைத்து பின் மறைந்து போகும் நிகழ்வுகள். அந்த வர்ண விளையாட்டு
மாத்திரம் மறப்பதில்லை.

எனது புல்வெளிக்கு நீங்களும் வாருங்கள். உதிர்ந்து போன பனித்துளி ஒவ்வொன்றையும்
புல்லுக்கு திலகம் வைப்பது போல் அதன் மீது ஒட்டி வைத்து அன்று பார்த்த அதே வர்ண
ஜாலத்தை இன்றும் காண நினைக்கிறேன். அந்த வர்ணங்கள் சிலிர்க்க வைக்கும்.. சிரிக்க
வைக்கும்.. ஏங்க வைக்கும்.. அடடா என வருத்தப் படவும் வைக்கும்..

தட்டிக் கொடுத்து இன்னும் கேளுங்கள்..
உங்கள் ஞாபகத்துக்குள் புதிதாக வந்து சேர்ந்த உங்கள் வீட்டு பனித்துளிகளையும்
மறக்காமல் அறிமுகப்படுத்துங்கள்.

தங்களைக் கண்டு கொண்டதற்காக அந்தப் பனித் துளிகள் துள்ளிக் குதிக்கின்றன!

[தொடரும்]


நன்றி: http://tamil.sify.com/

0 பின்னூட்டங்கள்: